BREAKING NEWS

கொழும்பு வலய முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

02 April 2024 கொழும்பு வலயத்திலிருந்தும் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார். கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாடசாலைகள் அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். ஆசிரியர் பற்றாக்குறை,இடநெருக்கடி, வகுப்பறைகள் தட்டுப்பாடு,சிங்கள மூலம் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் இன்மை,அதிகமாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பாடசாலைகள் இன்மை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதோடு அவர்களுக்கு இஸ்லாம் பாடம் கற்பிக்க ஆசிரியர் இன்மையினால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. கொழும்பிலுள்ள 19 முஸ்லிம் பாடசாலைகளில் சுமார் 200 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதோடு அவற்றை தீர்ப்பது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. உயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு இரு வருட பயிற்சி வழங்கி நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பில் சில பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகள் இன்மையால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகிச் செல்வது குறித்தும் சில பாடசாலைகளில் இடவசதி,மைதானவசதி இன்மை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. சில பாடசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உகந்த காணியை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். இடவசதி குறைபாட்டிற்கு தீர்வாக புதிய பாடசாலை கட்டிடங்களை நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் நிர்மாணிப்பதில் உள்ள தடைகளை தீர்ப்பது பற்றியும் இங்கு ஆராயப்பட்டது. கலந்துரையாடலில் தெரியவந்த சில பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, முஸ்லிம் பாடாசலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இம்மாத இறுதியில் மீண்டும் சந்தித்து மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் போது அறிவித்தார். இதன்போது உயர் தரம் கற்க தெரிவாகியிருக்கும் மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, மேல்மாகாண கல்வி அதிகாரிகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள், நகர பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது

பாறுக் ஷிஹான்
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் மக்கள் போராட்டம் 5 நாட்களாக இன்று(29) இடம்பெற்று வந்த நிலையில் அதில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது.தமிழ் முஸ்லீம் மக்கள் இந்த பிரதேசத்தில் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றார்கள்.இந்த கல்முனை பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு நான் ஒரு அன்பான அழைப்பு விடுக்கின்றேன்.இங்குள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ விரும்புகின்றார்கள்.எனவே முஸ்லீம் மக்களின் ஆதரவினை நாம் கோரி நிற்கின்றோம்.கல்முனை தெற்கு பிரதேச செயலகம் வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான அதிகாரம் செலுத்துவதை தடுத்து நிறுத்தவற்கு உதவ வேண்டும்.உங்களின் ஆதரவுடன் தான் இங்கு இன நல்லுறவினை நாம் ஏற்படுத்த முடியும்.ஒரு சில அரசியல் பிரமுகர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு பிரதேச செயலகமாக செயற்படுத்த முடியாதவாறு தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி கொண்டிருப்பதானது மிகத் துரதிஸ்ட வசமானது.மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களிடம் இதை ஒரு பிரதேச செயலகமாக 1993 ஆண்டு போன்று செயற்பட விடுவதுடன் அதற்கு இடையூறாக இருக்க கூடாது தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நீங்கள் வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ஈஸ்டர் தாக்குதல் – இந்தியாவே பின்னணி மைத்திரியின் பெரிய‌ க‌ண்டு பிடிப்பு. :

ஈஸ்டர் தாக்குதல் – இந்தியாவே பின்னணி : மைத்ரி பரபரப்பு வாக்குமூலம் 27 March 2024   இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத்துறையும் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் நேற்றிரவு ‘தமிழன்’ செய்திகளிடம் தெரிவித்தன.   ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதலில் தொடர் புடையவர்களை தமக்கு தெரியும் என மைத்ரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அழைப்புக்கமைய அவர் நேற்றுமுன்தினம் சி.ஐ.டி சென்றார். அதன்போது சுமார் 06 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.   மைத்ரியின் இந்த வாக்குமூலப் பிரதியை அன்றையதினமே சட்ட மா அதிபர் பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளதாக அறியமுடிந்தது.   உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி, அதுதொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளதாக அறியமுடிந்தது. எவ்வாறாயினும், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் மாத்திரமே வழங்கமுடியுமென்று மைத்ரி தெரிவித்துள்ளதாகவும் நம்பகரமாக தெரியவந்தது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்த காலகட்டத்தில் இலங்கை தேர்தலை எதிர்நோக்கியிருந்ததால் அரசியலை மையப்படுத்தி உளவு அமைப்புகளால் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும் தனக்கு முன்னர் அறியக்கிடைத்ததாக மைத்ரி மேலும் கூறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.   (மைத்ரிபால சிறிசேனவின் வாக்குமூலம் குறித்தான மேலதிக தகவல்களை தேசிய பாதுகாப்பு நலன்கருதி முழுமையாக தர முடியாத நிலைமை உள்ளதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.)   மைத்ரிபால சிறிசேனவின் இந்த தகவல் தொடர்பில் இலங்கையின் முன்னாள் புலனாய்வு மற்றும் படைத்துறை அதிகாரிகளிடம் விசாரணையை நடத்துவதா என்பது தொடர்பில் பாதுகாப்புத்துறை மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக மேலும் தெரியவந்தது

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை மையப்படுத்திய கூட்டணி

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை மையப்படுத்திய கூட்டணியை அமைப்பதையே நாம் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக இடதுசாரிக் கொள்கையுடையவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்கப்படவுள்ளதாக மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கூட்டணியின் அங்குரார்பணம் இடம்பெற்றுள்ள நிலையில் அதன் அடுத்த கட்டம் சம்பந்தமாக வெளியிடும்போதே கருத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் புதிய மாற்றம் ஒன்றை நோக்கியே புதிய கூட்டணியை ஒருங்கிணைத்துள்ளோம். இந்தக் கூட்டணியான, கொள்கையளவில் இணைந்து செயற்படக்கூடியவர்களுடன் கைகோர்ப்பதற்கு தயாராக உள்ளது. அந்த வகையில் இடதுசாரி சிந்தனையுடையவர்களுடன் அடுத்தகட்டமாக பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்தச் செயற்பாட்டில் புத்திஜீவிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் கைகோர்ப்பதற்கு எம்முடன் தயாராக உள்ளனர்.

ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (22) ஊடகங்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்றார்.

முஸ்லிம்கள் சுன்னத் செய்வதை தடை செய்வதாக தெரிவிக்கவில்லை - தேசிய மக்கள் சக்தி

20 March 2024 தேசிய மக்கள் சக்தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளியீட்டில் பெண்கள் மற்றும் ஆண்களின் பாலுறுப்புத் தொடர்பான விருத்தசேதனம் செய்தல் தொடர்பில் பாதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்ற விடயங்கள் தொடர்பில் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். ஆனால் முஸ்லிம் மக்கள் சுன்னத் மற்றும் கத்னா செய்வதை தடைசெய்வோம் என குறிப்பிடவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை (20) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சீதனம், விருத்தசேதனம் போன்ற நடைமுறைகள் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் பாதிப்புறுவதை, துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுப்பதற்கான சட்டங்களை தேசிய மக்கள் சக்தி உருவாக்குவது பற்றிய விடயங்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவந்தன அதில் முஸ்லிம் மக்கள் சுன்னத் மற்றும் கத்னா செய்வதை தடுத்து நிறுத்தப்போதாகவும் குறிப்பிடப்பட்டன. அது பெண்களின் சமவாயத்திலும், தேசிய மக்கள் சக்தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளியீட்டிலும் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு வாக்கியம். அது பொய்யான விடயமல்ல. அதில் பெண்கள் மற்றும் ஆண்களின் பாலுறுப்புத் தொடர்பான விருத்தசேதனம் செய்தல் தொடர்பில் பாதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்ற விடயங்கள் தொடர்பில் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை இல்லாதொழிப்பதாக நாங்கள் குறிப்பிடவில்லை சுன்னத் செய்வதை தடைசெய்வோம் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. எவரேனும் ஒருவர் பாதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவதற்கு எதிரான சட்டங்களை ஆக்குவதாகத்தான் கூறியிருக்கின்றோம். இது வெறுமனே கொள்கை வெளியீட்டுக்கு வந்த ஒரு வாசகம் அல்ல. 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துன்புறுத்தல் எனும் சொல்லுக்கான வரைவிலக்கணம் தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் முதலாவது விடயம் பெண்களுக்கான விருத்தசேதனம் செய்வது பற்றியதாகும். பெண்களுக்கு விருத்த சேதனம் செய்வது சுகாதார ரீதியாக அல்லது இனப்பெருக்க ரீதியாக சாதகமானதாக அமையமாட்டாதெனவும் அது தவிர்க்கக்கூடிய ஒரு விடயம் எனவும் முஸ்லிம் சமூகத்திலும் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். பலர் அதனை மறுக்கிறார்கள். ஆண்களின் விருத்தசேதனம் தொடர்பாக துன்புறுத்தல் என்பதற்கு பின்வருமாறு பொருள் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. பலவந்தமாக, சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு முரணாக பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்கள் இன்றிய செயற்பாங்கு ஒன்றுதான் துன்புறுத்தல் எனக் கூறப்படுகின்றது. ஒருவர் துன்புறுத்தலுக்கு இலக்காவார் என்றால் அதற்கெதிராக சட்டங்கள் ஆக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 195 நாடுகள் இதனை அங்கீகரித்திருக்கின்றன. பெரும்பாலான முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களும் இதனை நிறைவேற்றுவதற்காக கையை உயர்த்தியிருக்கின்றன. இது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாசகம். தற்போது முஸ்லிம் சமூகத்தில் ஆண்களுக்கு சுன்னத் செய்து வருகிறார்கள். சுகாதார பாதுகாப்பு வழிமுறையின் கீழ் பயிற்றப்பட்ட சுகாதார பணியாளர்கள் மூலமாக அதனை செய்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். மறுபுறத்தில் இதனை செய்யும்போது பிள்ளையின் அனுமதியைப் பெறுவதற்கு கால அவகாசம் கிடையாது. ஏனெனில், குழந்தை பிறந்து ஓரிரு நாட்களுக்குள் சுன்னத் செய்யப்படுகின்றது. பெற்றோரின் விருப்பத்தின் பேரில்தான் பிள்ளைகளை எடுத்துச் செல்கிறார்கள். நாம் இங்கு குறிப்பிடுவது அதைப்பற்றியல்ல. துன்புறுத்தல் என்பதற்கு இது ஏற்புடையதல்ல. பெற்றோரின் விருப்பத்துடன் வருகிறார்கள். சுகாதார பாதுகாப்புக்கு இணங்க பயிற்றப்பட்ட ஊழியர்கள்தான் இதனைச் செய்கிறார்கள். இதில் பிரச்சினை இல்லை. பலவந்தமாக, சுகாதார முறையியல்களை பின்பற்றாத செயன்முறை பற்றிதான் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றது எனவே நாங்கள் கூறியுள்ள விடயம் மிகத் தெளிவாகவே இருக்கிறது. ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவெனில், எமது பொருளாதாரத்தை சீராக்கக் கூடிய வேலைத்திட்டத்துடன் முட்டிமோத முடியாதவர்கள் வேறு குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்தி, இவ்வாறான சொற்களைப் பிடித்துக்கொண்டு கொள்கை வெளியீட்டினை வாசித்திராத முஸ்லிம் மக்களுக்கு வேறொரு திரிபுபடுத்தப்பட்ட செய்தியைக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். உண்மையிலேயே இவ்வாறான செய்திகள் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்துதான் வருகின்றன. தற்போது இந்த ஊடகப் பிரிவில் இருப்பவர்களும் இதற்கு முன்னர் அதில் தொழில் புரிந்தவர்கள் அல்லர். ரணில் விக்ரமசிங்கவை மொட்டுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாக்கிய பின்னர் அங்குமிங்கும் அலங்கார மீன்களை வளர்த்தவர்கள், சின்ன சின்ன பிஸ்னஸ் செய்தவர்கள் சென்று ஜனாதிபதி ஊடகப் பிரிவில் தொழில் பெற்றார்கள். அவர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. வாகனங்கள் கிடைக்கின்றது. எரிபொருள் கிடைக்கின்றது. தொலைபேசி கிடைக்கின்றது. பில் செலுத்துகின்றார்கள். இவை எல்லாமே மக்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான். இவர்கள் ஏதாவது சொற்களைப் பிடித்துக்கொண்டு சமூகவலைத்தளங்களில் போட்டு கேள்விக்கு உட்படுத்துகின்றார்கள். இதுவொரு பாரதூரமான விடயம். எமது நாட்டிலே சமயங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை மக்கள் தீர்மானகரமாக நிராகரித்துள்ளார்கள். அப்படி நடந்திராவிட்டால் கோட்டாபய ராஜபக்ஸ இன்னமும் ஜனாதிபதியாக இருந்திருப்பாரே? கோல்ஃபேஸ் போராட்டத்தின் போதும், அதன்பின்னரும் மக்கள் இந்த இனவாதத்தை, மத தீவிரவாதத்தை எதிர்த்தார்கள். நாட்டு மக்களின் வரிப்பணத்தொகையில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டு இவர்கள் என்ன செய்கின்றார்கள்? இனவாதத்தை தூண்டிவிடுகின்றார்கள். முஸ்லிம் மக்களிடையே தவறானதொரு எண்ணத்தை ஏற்படுத்த விளைகிறார்கள். எமது கொள்கை வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தைப் பாருங்கள். ஏன் நாங்கள் சீதனத்தைப்பற்றி கதைக்கின்றோம். சீதனத்திற்கும் இதற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? ஒரு தகப்பன் தன்னுடைய பெண்பிள்ளை திருமணம் செய்யும்போது விருப்பத்துடன் சீதனம் கொடுத்தால் அதனைத் தடுக்க முடியாது. ஆனால் சீதனம் என்பது ஒருவரை துன்புறுத்தக்கூடியதாக பலவந்தமாக மேற்கொள்ளப்படுமானால் அத்துடன் அந்த சீதனத்தை கொடுக்காதிருப்பதன் மூலமாக குடும்பத்துக்குள்ளே எவராவது பாதிக்கப்படுவாரேயானால் பிரஜையொருவர் அந்த துன்புறுத்தலுக்கு எதிராக செயலாற்ற வேண்டுமென நாங்கள் கூறியுள்ளோம். இதைத்தான் நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம். சமய மரபுகளின் அடிப்படையில் சுன்னத் செய்வதை தடுப்பது எமது நோக்கமல்ல என அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (கனகராசா சரவணன் )

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராக சதீக்   (முப்தி )

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராக குருநாகல் மடிகே மிதியாளையை சேர்ந்த   அஷ்ஷேய்க் மௌலவி சித்தீக்  முஹம்மத் சதீக்   (முப்தி ) தெரிவு செய்யப்பட்டுள்ளார் . மேற்படி இந்த நியமனம் ஸ்ரீலங்கா  ஜம்இய்யத்துல் உலமா சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த மாதம்  10/02/2024  ஜம்மிய்யாவின் க‌ல்முனை தலைமை காரியாலயத்தில்  நடைபெற்ற போது சபையோரின் பூரண அனுமதியுடன்  ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் கலாபூஷணம் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் (மதனி /முப்தி ) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.  அத்துடன் நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல்  உலமா சபையின்  கிளைகள் விஸ்தரிக்கப்படுவதாகவும் அல்குர்ஆன் சுன்னா முறைப்படி நல்லிணக்கத்துடன் செயற்படும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு அமைப்பாகவும் இது செய‌ற்ப‌டுவ‌துட‌ன் காதியானிகள், சியாக்கள், அத்துவைத கொள்கைகள் அற்ற, த‌ம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் அல்குர்ஆன் சுன்னாவை நேசிக்கும் அனைவரும் ஸ்ரீலங்கா ஜமியத்துல் உலமா சபையில் இணைந்து செயல்பட முடியும் என்று ஸ்ரீலங்கா  ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் கலா பூசனம்  அஷ்ஷைக்  மௌலவி முபாரக் அப்துல் மஜீத் (மதனி /முப்தி )தெரிவித்தார்.

காத்தான்குடியில் கைதானோர். உண்மை என்ன‌?

காத்தான்குடியில் சந்தேகத்தின் பேரில் கைதான 30 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (01) அதிகாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பாலமுனை ஆரயம்பதி பகுதியில் தற்காலிகமாக கட்டப்பட்ட கொட்டகை போன்ற இடத்தில் 30 பேர் கூடியுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்திருந்தனர். அங்கு கூடியிருந்த குறித்த 30 பேரும், ஏதாவது குற்றச் செயலையோ அல்லது அரச விரோதச் செயலையோ செய்யும் நோக்கில் கூடியிருந்தனரா எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 30 பேரின் வாக்குமூலங்களும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டதுடன், பதிவு மட்டக்களப்பு பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு, சந்தேகநபர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரான் ஹாசிமின், சகோதரியின் கணவர் மற்றும் அவரது இரு மூத்த சகோதரர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர். குறித்த சந்தேகநபர்கள் மேற்கொள்ளப்பட்ட தொடர்பில் விசாரணைகளின் பிரகாரம், இந்தக் குழுவினர் எந்தவொரு குற்றச் செயலிலோ அல்லது அரச விரோதச் செயலிலோ ஒன்றுகூடியதாகத் ஈடுபடும் நோக்கில் தகவல்கள் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட குறித்த நபர்கள் தங்களது விடுமுறை நாளான வெள்ளிகிழமைகளில் ஒன்றுகூடி பொழுதை களிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்திடம் மண்டியிட்டார் ஞானசார தேரர்

16 February 2024   2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டமைகாக  பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.   இவர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன.   இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி ஆலயம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்றும் 8 வருடங்களின் பின்னர் அது பற்றி உணர்ந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். வழக்கின் இறுதி தீர்ப்பில் தேரருக்கு நீதிமன்றினால் கடும் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞானசார தேரர் மன்னிப்பு கோரியுள்ளதுடன் கவலையும் வெளியிட்டுள்ளார். 2009க்கு பின்னரான சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகள் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலும் தீவிரமான பௌத்தமயமாக்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் அச்சுறுத்தல், கொலை மிரட்டல் போன்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டமைக்காக பொலிஸாரினால் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

வேறு கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை - ஹக்கீம் எம்.பி

வேறு கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை - ஹக்கீம் எம்.பி 29 January 2024 சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம். அதைத் தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணைவதற்கு இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை" என மு.கா.தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சம்பந்தமாக இரண்டாவது நாளாகவும் திங்கட்கிழமை (29)உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய ஒரு கேள்விக்குப் பதிலாகவே அவர் இதனைக் கூறினார்.  "புதியதொரு கூட்டணி சம்பந்தமாக சில கருத்துக்கள் அடிபடுகின்றன. அதில் சேர நாங்களும் தயாராக இருக்கின்றோமா என்ற ரீதியில் கேள்விகளைக் கேட்கின்றார்கள். எங்களைப் பொறுத்த வரையில், எதிர்க்கட்சி கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம். அதைத் தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணைவதற்கு இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை" எனத் தெரிவித்தார்

கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, வியாபார மற்றும் "முதலீட்டாளர்கள் மகாநாடு - 2024"

கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, வியாபார மற்றும் "முதலீட்டாளர்கள் மகாநாடு - 2024" - ஆரம்ப நாள் நிகழ்வு கொழும்பு "ஜெட்வின்" ஹோட்டலில் - ஐ. ஏ. காதிர் கான் - கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, வியாபார மற்றும் "முதலீட்டாளர்கள் மகாநாடு - 2024" தொடர்பிலான ஆரம்ப நாள் நிகழ்வும், வர்த்தக பாரிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும், அண்மையில் கொழும்பு - 07 இல் அமைந்துள்ள "ஜெட்வின்" ஹோட்டலில் நடைபெற்றன. இலங்கையில் உள்ள கொமன் வெல்த் ஐகொனிக் சம்மேளனம் மற்றும் சர்வதேச வர்த்தக இணைப்பாளர் கூட்டிணைப்பு ஆகியன ஒன்றிணைந்து, மேற்படி நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தன. கொமன் வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அம்ரி நிஸாம் மற்றும் சர்வதேச வர்த்தக இணைப்பாளரும் கூட்டிணைப்பின் பணிப்பாளருமான தன்வீர் ஆர்.எம். ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், சிங்கப்பூர் வர்த்தக போரத்தின் ஆளுநர் கலாநிதி சிந்தியா சாங் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் பங்கேற்றிருந்த கலந்துரையாடல் நிகழ்வில், சர்வதேச வர்த்தக இணைப்பாளரும் கூட்டிணைப்பின் பணிப்பாளருமான தன்வீர் ஆர்.எம். கருத்துத் தெரிவிக்கும்போது, "இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், எமது கூட்டிணைப்பு பல்வேறு செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, பாரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை, சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான மிகச் சிறந்த வாய்ப்பை, எமது கூட்டிணைப்பு மூலம் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம். இதனூடாக, இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், சர்வதேச வர்த்தகத்தையும் மேலும் மேம்படுத்த முடியும். திறந்த பொருளாதாரக் கொள்கையின் மூலமாகவே நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சியடையும். அத்துடன், இலங்கையிலுள்ள முன்னணி வர்த்தகர்கள் போட்டிச் சந்தைக்கு முகம் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்" என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வுகளுக்கு, இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் பிரசன்னமாகியிருந்த சிறு முயற்சியாளர்கள், தங்களது உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. 25/01/2024.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar