ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இனவாதக் கட்சியல்ல. மக்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் யுகம் உருவாகியுள்ளது. கட்சியின்றி முன்னே பயணம் செய்ய எம் எவருக்கும் முடியாது. அவ்வாறு பயணிக்க முயன்ற பலர் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டுள் ளார்கள். இதுவே உண்மை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்கள் வழங்கிய அதிகாரத்துக்கு மதிப்பளித்து மக்களுக்கான சேவையை வழங்குவதோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்து முன்னேற்றும் பொறுப்பு கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் உரியது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிரச்சினைகள் உள்ளதென தெரிவித்து, கட்சியைப் பலவீனப் படுத்த சிலர் செயற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, வரலாற்றில் ஒருபோதுமில்லாதவாறு இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல மடைந்துள்ளதாகவும் அதனை மக்களிடமிருந்து தூரமாக்குவதற்கு எவராலும் முடியாது எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. கட்சியின் பிரச்சினையை பெரும் பிரச்சினையாக்கிக் கொள்பவர்கள் கட்சியிலிருந்து விலகி சென்றவர்களே. எமது தரப்பினையும் அதில் ஈடுபடுத்திக்கொள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர்.