BREAKING NEWS

ஜெனீவா விடயத்தில் ஏன் துஆ, நோன்போடு உலமா சபை மட்டுப்படுத்தவில்லை?- உலமா கட்சி விசனம்

தம்புள்ள பள்ளிவாயல் சம்பந்தமாக ஜம்இய்யத்துல் உலமாவின் பொது மக்களுக்கான அறிவித்தல் கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லி கொடுப்பதைப்போல்  உள்ளது வேதனையானது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது. தம்புள்ள பள்ளி வாயல் எதி;ர் நோக்கும் பிரச்சினைக்கு துஆ பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது சிறு குழந்தைக்கும் கூட தெரிந்த விடயமாகும். இஸ்லாம் கூறும் ஆயுதம் பிராத்தனை மட்டுமல்ல, அந்தந்த நாடுகளுக்கேற்ப போராட்டத்தையும் வலியுறுத்துகிறது. இந்த வகையில் நமது நாடு ஜனநாயகத்துக்கு பெரிதும் மதிப்பளிக்கின்ற நாடு என்பதனால் இப்பிரச்சினையை ஜனநாயக மயப்படுத்த வேண்டும். அந்த வகையில் உலமா சபையின் ஏற்பாட்டில்  வெள்ளிக்கிழமை தவிர்ந்த நாளில் உலமா சபை தலைவர் போன்ற முக்கிய உலமாக்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உண்மைகளை உலகுக்கு சொல்ல  வேண்டும் என நாம் கோரியிருந்தோம். இதனை விடுத்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறுவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. ஜெனீவாவில் இலங்கைக்கெதிரான பிரேரணை கொண்டு வரப்பட்ட போது ஜம்இய்யதுல் உலமா துஆ கேட்கும்படி சொல்லி விட்டு சும்மா இருக்கவில்லை. மாறாக ஜெனீவா வரை சென்று போராடியது. அதே போல் உலமா கட்சியும் இலங்கையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டது.

 அதனால்தான் இது விடயத்தில் நேரடி தலையீடு செய்யும் பொறுப்பு அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவுக்கே உண்டு என கூறுகின்றோம். தம்புள்ள பள்ளி சம்பந்தமாக தேரர்களும், ஜாதிக ஹெல உறுமயவும் ஊடக மாநாட்டை கூட்டி முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பில் ஈடு பட்டுள்ளார்கள் என பகிரங்கமாக ஊடகங்களில் கூறும் போது இவற்றுக்கு பதிலளிக்குமுகமாக சிங்களம், ஆங்கிலம், அறபு ஊடகங்களை அழைத்து ஊடக மாநாடு ஒன்றை நடாத்துவதற்குக்கூட ஏன் உலமா சபையால் முடியவில்லை? இவ்வாறு ஊடக மாநாடு நடத்துவது இஸ்லாத்துக்கு முரணானதா?

ஆகவே தம்புள்ள பள்ளிவாயல் சம்பந்தமாக பொது மக்கள் பொறுமை காப்பதுடன் ஜம்இய்யத்துல் உலமா இதற்கான ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar