BREAKING NEWS

தம்புள்ள தேரர் போன்றே மன்னார் ஆயரும் செயற்படுகின்றார் என்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனின் உவமைப்படுத்தல் சரியானதே. -வினோ எம் பிக்கு உலமா கட்சி பதில்

தம்புள்ள தேரர் போன்றே மன்னார் ஆயரும் செயற்படுகின்றார் என்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனின் உவமைப்படுத்தலை சரியாக புரிந்து கொள்ளாமல் வினோ எம். பி கண்டித்துள்ளமை விடயத்தை திசை திருப்பும் முயற்சியாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தம்புள்ள தேரர் போன்று மன்னார் ஆயரும் பள்ளியை உடைத்தாரா என வினோ எம். பி வினோதமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மொழியில் உவமைப்படுத்தல் என்பது ஒன்றை மற்றொன்று நேரடியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பெண்ணை பார்த்து நின் முகம் நிலவு போன்றது என கவிஞன் கூறினால் அவளது முகத்தில் நிலாவைப்போன்று வெளிச்சம் வருகிறதா என கேட்க முடியுமா?
இங்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் ஆயரும் தம்புள்ள தேரர் போன்று இனவாதமாக செயற்படுவதை உவமைப்படுத்தியுள்ளதை குற்றம் காண்பது தமிழ் புலமைக் குறைவையே காட்டும். அ;துடன் மன்னார் ஆயர் அவர்கள் ஒரு சமய தலைவர். அரசியல் கட்சியை சேர்ந்தவர் அல்ல. 20 வருட காலத்தின் பின்  மீள் குடியேறும் முஸ்லிம்கள் அரச காணிகளில் குடியேறுகிறார்கள் என்றால் அதனை கொஞ்சம் கூட இரக்கமற்ற முறையில் மன்னார் ஆயர் பார்த்துள்ளார். ஒருவனுக்கு உணவு கிடைக்காமல் அவன் இறக்கும் நிலை வந்தால் களவெடுத்து உண்ணலாம் என வேதங்கள் கூறுகின்றன.
இவ்வாறு அரச காணிகளில் முஸ்லிம்கள் குடியேறினால் அதனை  அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். ஒரு மத குரு இது விடயத்தில் மூக்கை நுழைப்பது இனவாதம் தவிர வேறு இருக்க முடியாது. உதாரணமாக தம்புள்ள பள்ளிவாயல் சட்டப+ர்வமற்றது என்றால் அதனை அரசாங்க நிர்வாகம் பார்க்கும். அதனை மீறி பௌத்த தேரர் ஆர்ப்பாட்டம் செய்தமை இனவாதமே தவிர நாட்டுப்பற்றல்ல என்பதை சாதாரண அறிவுள்ள எவரும் புரிந்து கொள்வர்.
 மீள் குடியேறும் முஸ்லிம்களின்  காணிகள் ஏற்கனவே புலிகளால் பறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் காணிகளில் தமிழ் மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளனர். இவ்வாறான சூழலில் முஸ்லிம்கள் அரச காணிகளில் குடியேறாமல் புலிகள் செய்தது போன்று தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க முடியுமா?
எனவேதான் கூறுகிறோம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மன்னார் ஆயரை தம்புள்ள தேரருடன் ஒப்பிட்டது சரி என்றும் மன்னார் ஆயர் தமது குற்றச்சாட்டை வாபஸ் பெறவேண்டுமென்றும் கூறிக்கொள்கிறோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar