BREAKING NEWS

அறுவைக்கு கொண்டு செல்லும் ஆட்டுக்கு அகத்திக்கீரையை காட்டுவது போன்று இவர்களுக்கு சில பதவிகளை காட்டி முஸ்லிம் சமூகம் அறுவைக்கு கொண்டு செல்ல தயார்படுத்தப்படுகிறது.


முடிவு எடுத்த பின் உயர்பீடத்தை கூட்டி அதில் முடிவு உடுக்கப்பட்டதாக காட்டும் வழமையான ஏமாற்றுவேலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து காட்டியுள்ளது என உலமா கட்சியின் தலைவரும் முஸ்லிம் விடுதலை முன்னணியின் செயலாளருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


கிழக்கு மாகாண சபை தேர்தல் சம்பந்தமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முடிவு என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். சமூகத்தைப்பற்றி எந்த அக்கறையுமின்றி தமது பதவிகள் பற்றி மட்டும் சிந்திக்கும் ஒரு கட்சி இந்த முடிவுக்குத்தான் வரும். முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து “அனைத்து முஸ்லிம் கூட்டமைப்பாக” போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம் மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் பேரினவாதிகளை கட்டுப்படுத்த முடியும் என நாம் வலியுறுத்தி வந்தோம். ஆனால் கடைசி நேரத்தில் சுயநல பதவிக்கு முஸ்லிம் கட்சிகள் அடிபணியும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அறுவைக்கு கொண்டு செல்லும் ஆட்டுக்கு அகத்திக்கீரையை காட்டுவது போன்று இவர்களுக்கு சில பதவிகளை காட்டி முஸ்லிம் சமூகம் அறுவைக்கு கொண்டு செல்ல தயார்படுத்தப்படுகிறது. இவ்வாறு முதலில் அறுக்கப்பட்டது மு. காவின் உயர்பீடமும் போராளிகளுமாகும்.
மு. கா தனித்து போட்டியிட்டால் தமக்கும் போட்டியிட முடியும் என நினைத்து பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து ஒரு வாரமாக கொழும்பில் தவம் கிடந்தவர்கள் கழுத்தறுபட்ட நிலையில் உள்ளார்கள். 

ஸ்ரீ. மு. கா கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சுப்பதவிகளை வகித்தும் ஒலுவில் காணிப்பிரச்சினை, அக்கரைப்பற்று வீடு, தம்புள்ளை பள்ளி, மூதூர் மலை போன்ற பிரச்சினைகளுக்கு எந்த முடிவும் காண முடியாமல் இருக்கும் நிலையில் தனது தனித்துவத்தை இழந்து அடிமையாகிய நிலையில் முஸ்லிம்களையும் அடிமைத்தளத்திற்குள் நிரந்தரமாக தள்ளி விட்டுள்ளது. மேற்படி பிரச்சினைகளில் பெரும்பாலானவை மு. காவின் அரச ஆதரவுடனேயே ஏற்பட்டவையாகும். மக்கள் வாக்குள்ள ஒரு கட்சியால் மிக இலகுவாக தீர்க்க்கூடிய இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் அடிமைப்பட்டுப்போயிருக்கும் மு. காவினால் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத்தர முடியும் என எவராவது கருதினால் அவரைப்போன்ற முழு முட்டாள் உலகில் இருக்க முடியாது. 

கிழக்கு மாகாண தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் நாம் எத்தனை பள்ளிகளை உடைத்தாலும் முஸ்லிம்கள் எமது பக்கம்தான் என பேரினவாதம் உரத்துக்கூறி செயற்படும்  நிலை ஏற்படும் என்பதை எச்சரிப்பது தன்னலம் கருதாத முஸ்லிம் கட்சி என்ற வகையில் எமது கடமையாகும். 

ஆக மொத்தத்தில் எதிர் வரும் காலங்களில் இலங்கை முஸ்லிம்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்திப்பதை தவிர வேறு வழி இல்லை என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar