BREAKING NEWS

அரசியலுக்காய் கொள்கையை தாரைவார்க்கும் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் ??


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தால் வெளியிடப்படும் அழைப்பு செப்டம்பா 2012 சஞ்சிகையில் கொள்கை வாதிகளே உஷார் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது. அதில் அண்மையில் நவமணி பத்திரிகை காரியாலயத்தில் நடைபெற்ற
இப்தார் நிகழ்வின் போது அன்றைய தினத்தில் தனது அகவை அறுபதை ப+ர்த்தி செய்யும் என். எம். அமீன் அவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் தாசிம் மௌலவி நினைவுச்சின்னமொன்றை வழங்குவதையும் அருகில் நானும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அழைப்பு இதழ் தனது கருத்தையும் வெளியிட்டது. அதில் பிறந்த தினம் கொண்டாடுவது பித்அத் என்றும்; அரசியலுக்காய் கொள்கையை தாரைவார்க்கும் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் கலந்து கொள்கிறார் எனவும் எழுதப்பட்டிருந்தது.

என்னைப்பற்றிய இக்கருத்து சரிதானா என்பதை தெளிவு படுத்த வேண்டியது எனது கடமையாகும். பொதுவாக நான் தவ்ஹீத் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாலும் தவ்ஹீதுக்காக மிக கடுமையாக போராடிய உண்மை போராளி என்பதும் பலரும் அறிந்த விடயம். ஆனாலும் நான் அரசியலுக்காக கொள்கையை அதாவது தவ்ஹீத் கொள்கையை தாரை வார்த்தேனா என்பது அறியாமையின் காரணமாக சொல்லப்படும் கருத்தாகும். 

என்னைப்பொறுத்த வரை நான் சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம் கொண்டவனாக இருப்பினும் 2004ம் ஆண்டே நேரடியாக அரசியலுக்குள் கால் பதித்தேன். ஆனாலும் அந்த வருடத்துக்கு முன்பிருந்தே அதாவது 1995ம் ஆண்டு முதலே நான் தவ்ஹீத்வாதிகளுடன் பல விடயங்களில் முரண்பட்டேன் என்பது கொழும்பை சேர்ந்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யமில்லை. இங்கு நான் தவ்ஹீத் வாதிகளுடன் முரண்பட்டேன் என்றுதான் கூறுகின்றேனே தவிர தவ்ஹீதுக்கு முரண்படவில்லை என்பதை கவனிக்கவும். தவ்ஹீத் என்பது வேறு தவ்ஹீத்வாதிகள் என்பவர்கள் வேறு என்ற வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். (இஸ்லாம் வேறு முஸ்லிம்கள் என்போர் வேறாக இன்றுள்ள நிலை போன்று). தவ்ஹீதை தவ்ஹீத்வாதிகள் சரியாக விளங்காமையினால்த்தான் இன்று தவ்ஹீத்வாதிகளுக்கு மத்தியில் பல ஜமாஅத்துக்கள் இருக்கின்றன.

என்னைப்பொறுத்த வரை தவ்ஹீத் என்றால் இறைவன் ஒருவனுக்கே முற்றிலும் முழுவதுமாக பணிவதாகும். அவனுக்கு மேல் யாரையும் நேசிக்க கூடாது யாருக்கும் அஞ்சவும் கூடாது எனும் உறுதியான கொள்கை கொண்டவன்தான் தவ்ஹீத்வாதி.  இந்தக் கொள்கை காரணமாக நான் எனது பதினெட்டாவது வயதில் தவ்ஹீத் பேசியதற்காக மள்வானை தக்கியா பள்ளியில் கடமை புரிவதிவிலிருந்து விரட்டப்பட்டேன். பின்னர்  கூலி வேலை செய்து சம்பாதித்துக்கொண்டு அதே மள்வானையில் பிரச்சாரம் செய்தேன். அந்த வேளை மள்வானையில் ஒரு தவ்ஹீத் போராளியும் இருக்கவில்லை. பின்னர் நான் போகும் வேறு பள்ளிவாயல்களுக்கும் எனக்கும் கொள்கை மோதல்கள் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கொரு முறை விரட்டப்படுவதும் பள்ளிவாயல் மாறுவதுமாக இருந்தேன். இந்த வேளையில் அள்ளாஹ் எனக்கு ஜமாஅதே இஸ்லாமி மூலம் சஊதி சென்று கல்வியை தொடர வாய்ப்பளித்தான். 

தொடர்ந்து தவ்ஹீத் போராளியாக செயற்பட்டேன். எனதூரில் என்னை சுடுவதற்கு துப்பாக்கியோடு பலர் அலைந்த நிலையிலும் நான் மனந்தளராது செயற்பட்டேன். ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விபத்தின் போதே நிதானத்துக்கு வருகிறான் என்பதற்கிணங்க எனது வாழ்விலும் ஒரு விபத்து நடந்தது. அதாவது தவ்ஹீத் தூண் என கருதப்பட்ட ஒருவரின் மகளுக்கு கொடியேற்றப்பள்ளி நிர்வாகி ஒருவர் திருமணம் செய்து வைக்கப்பட்டார். இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்று நான் கேட்ட போது அவர் நல்லவர் என்றும் சீதனம் இல்லாமல் மண முடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. அப்படியாயின் நமதூரில் தவ்ஹீத் கொள்கைவாதிகளுடன் சேராத எத்தனையோ பேர் நல்லவர்களாக இருக்கின்றார்களே. ஏன் நாம் அவர்களை மறுத்து அவர்களுக்குப்பின்னால் நின்று தொழவும் வேண்டாம் என பிரிந்து தனியான பள்ளியும் கட்டியுள்ளோம்? என கேட்டேன். தவ்ஹீத்வாதியை சேராதவன் பின்னால் தொழாத நாம் அவன் நமது வீட்டில் பிள்ளை பெறலாமா? என கேட்ட போது என்னை தவ்ஹீத்வாதிகள் தமது எதிரியாக பார்த்தார்கள். 
இங்குதான் எனக்கு ஞானக்கண் திறக்கப்பட்டது. அதாவது தமக்கு ஒரு வாசி என்றால் கொள்கை என்ன மண்ணாங்கட்டி என்ன என்ற நிலையில்தான் தவ்ஹீத்வாதிகள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அந்த தெளிவோடு நமது தவ்ஹீத் வாதிகளை பார்த்தேன். அவர்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையும் தவ்ஹீத்வாதிகளின் உள் மனதிலும் இதே எண்ணம்தான் உள்ளது என்பதைக்கண்டேன். தங்களது மகளுக்கு அல்லது மகனுக்கு வரண் எடுக்கும் போது கொள்கைகளை தூக்கி வீசி விட்டு பணத்தை முற்படுத்துவதை கண்டேன். அதற்கு நியாயம் கற்பிக்க நல்லவன் என்ற வார்த்தை. தவ்ஹீத்வாதிகளை விட நல்லவர்கள் எவ்வளவோ பேர் இந்த முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கிறார்களே. அப்படி எல்லோரும் ஒன்று என்றால் நாம் ஏன் அவர்களுடன் சண்டை பிடிக்க வேண்டும்? 

இந்த தெளிவு எனக்கு -1995- வந்ததிலிருந்து  நான் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி நிர்வாக சபையிலிருந்தும் தவ்ஹீத் பிரச்சாரத்திலிருந்தும் ஒதுங்கினேன். ஆக நான் அரசியலுக்காக கொள்கையை மாற்றவில்லை. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே எனது கொள்கையை அதாவது தவ்ஹீத்வாதி தவ்ஹீத்வாதி அல்லாதவன் எல்லோரும் ஒன்றுதான் என்று எனது கொள்கையை மாற்றிக்கொண்டேன். அதை தொடர்ந்து தவ்ஹீத்வாதிகள் சொல்லும் சில விடயங்களில் எனக்கு தெளிவுகள் ஏற்பட்டு எனது மாறுபட்ட கருத்துக்களை பத்திரிகைகளில் எழுதினேன். அவை தவ்ஹீதுக்கு மாற்றமான கருத்தல்ல தவ்ஹீத் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தவஹீத்வாதிகளின் சில கருத்துக்களுக்கு மாற்றமாக. 

தொடர்ந்து தவ்ஹீத்வாதிகளை ஊன்றி கவனித்தேன். இவர்களில் பலர் அள்ளாஹ{ அக்பர் என்பதை விட அல்மாலு (பணம்) அக்பர் என்பவர்களாகவே இருக்கின்றனர் என்பதை கண்டேன். அதன் பின் நான் 2004ம் ஆண்டு நேரடி அரசியலுக்கு வந்தபின் இன்னும் பல அதிர்ச்சிகளை கண்டேன். அதாவது ஒரு தவ்ஹீத் கொள்கைவாதியை விட மாற்றுக்கொள்கையுடைய ஒரு பணக்காரன் தேர்தலில் நின்றால் அந்த பணக்காரனுக்கு வாக்களிக்கக்கூடியவர்களாக கண்டேன். அள்ளாஹ்வுக்காகவே நேசிக்க வேண்டும் அவனுக்காகவே வெறுக்க வேண்டும் என்பவர்கள் பணத்துக்காக நேசிப்பதை கண்டேன். அதற்கு அரசியல் வேறு மார்க்கம் வேறு என இவர்கள் வக்காலத்து வாங்கியதன் மூலம் இவர்களுக்கு தவ்ஹீத் மட்டுமல்ல இஸ்லாமும் தெரியாது என்பதை புரிந்து கொண்டேன். மார்க்கம் வேறு அரசியல் வேறு என்றால் மார்க்கம் வேறு பொருள் தேடுவது வேறா? மார்க்கம் வேறு வாழ்க்கை வேறா? இப்படியான சிந்தனையினால்த்தான் மார்க்கம் வேறு திருமணம் வேறு என நினைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டேன். 
அதன் பின் நான் மார்க்கம் நேரடியாக தடை செய்யாத கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் பற்றி பெரிதாக அலட்டுவதில் இருந்தும் தவிர்ந்து கொண்டதோடு அனைவரையம் முஸ்லிம்களாக கருதி எவரையும் வெறுப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டேன். தவ்ஹீத்வாதி அல்லாத அலவி மௌலானா போன்றவர்களுடன் பழகினேன். அதனை தவ்ஹீத்வாதிகள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். ஆனால் தாம் தவ்ஹீத்வாதி அல்லாத அரசியல்வாதிகள் பின்னால் அலைவதையும் அவர்களோடு சுற்றித்திரிவதையும் அவர்களுக்கு முன் பணிந்து நிற்பதையம், அவர்களுக்கு வாக்கு போடுவதையும் தவறாக காணாதவர்களாக இவர்கள் இருந்தனர். அலவி மௌலானா இந்த நாட்டின் மிகச்சிறந்த முஸ்லிம். அவரிடம் இருக்கின்ற நல்ல குனங்களை இது வரை நான் இலங்கையில் மற்றவர்களிடம்; காணவில்லை. அவர் எனது தவ்ஹீத் கொள்கைக்கு மாற்றமானவராக இருந்தாலும் நல்ல பன்புமிக்கவர் என்பதில் என்னிடம் மாற்று கருத்து இல்லை. முபாறக் மௌலவி ஒரு வஹ்ஹாபி என தன்னிடம் பலர் கூறுவதாக என்னைப்பார்த்து சொல்லி சிரித்தவாறே என்னுடன் அன்பாக பேசுவார். நல்லவர் என்பதற்காக ஒரு முஷ்ரிக்கை மண முடித்து வைக்கலாம் என்றால் அதே நல்லவர் என்பதற்காக நான் மட்டும் அலவி மௌலானா போன்றோருடன் பழகக்கூடாதா? திருமணத்தை விட பழகுதல் ஆபத்தானதா? (தற்போது அரசியலில் அவர் வேறு நான் வேறு பாதையில். ஆனாலும் நல்லவர் அவர் என்பதால் மதிக்கின்றேன்.)

இவ்வாறுதான் எனக்கும் தவ்ஹீத்வாதிகளுக்குமிடையில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவை தவ்ஹீத் சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் இல்லை. இந்த வகையில் ஒரு முஸ்லிம் தனது பிறந்த தினத்தை நினைவு கூருவதை பித்அத்தானதாக நான் காணவில்லை. அத்துடன் அதற்கும் தவ்ஹீதுக்கமிடையில் எந்த சம்பந்தமும் இல்லை. தவ்ஹீத் என்பது இறை ஏகத்துவம் சம்பந்தப்பட்டதாகும். பிறந்த தினம் நினைவு கூருதல் என்பது முஆமலாத் எனும் நடைமுறை சம்பந்தப்பட்டதாகும். பிறந்த தினம் நினைவு கூருதல் சுன்னத்தானது என்றோ மறுமையில் நன்மை தரக்கூடியது என்றோ ஒருவர் கூறினால் அதுதான் தவறானதாகும். மற்றபடி இது நமது நாடுகளின் கலாச்சாரம் என்று எடுத்துக்கொண்டால் தவறில்லை. இது போன்ற பல விடயங்களை தவ்ஹீத் பற்றாளர்கள் என கூறிக்கொள்ளும் பலரும் செய்கின்றார்கள். அறபு நாடுகளின் தேசிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இவை என்ன சுன்னத்தானதா? அதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர்கள் கலந்து கொள்வதை காண்கிறோம். 

சுருக்கமாக. நான் அரசியலுக்காக எனது கொள்கையை மாற்றவில்லை. தவ்ஹீத்வாதிகளின் சுய நலம் காரணமாக ஏற்பட்ட தெளிவால் தவ்ஹீத்வாதிகளின் கொள்கையில் சில மாறியதன் பின்னரே அரசியலுக்கு வந்தேனே தவிர தவ்ஹீதிலிருந்து இம்மியளவும் மாறவில்லை. அத்துடன் நான் ஒரு அரசியல்வாதி. குர்ஆன் ஹதீத் நேரடியாக தடுத்தது தவிர அழைக்கப்படும் அழைப்புக்களுக்கு மதிப்பளிப்பது எனது கடமையாகும். இவை பற்றி அழைப்பு சஞ்சிகையுடன் திறந்த விவாதத்துக்கும் நான் தயாராக உள்ளேன். அதே போல் நான் அரசியலுக்காக எனது தவ்ஹீத் கொள்கையிலிருந்து மாறிவிட்டதாக சொல்லும் எவருடனும் நேரடியான விவாதத்துக்கு நான் தயாராகவே உள்ளேன் என்பதையும் பகிரங்கமாக இங்கு கூறுகின்றேன். 
வஸ்ஸலாம்.

மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர், 
உலமாக்கட்சி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar