BREAKING NEWS

சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் இருப்பதை உடனடியான ஒழிக்க வேண்டும்

சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் இருப்பதை உடனடியான ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் வாசு தேவ நாணயக்காரவின் கூற்றை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இது தனிச்சிங்கள பாடசாலைகள் மட:டம் என்பதற்கே கொண்டு சேர்க்கும் எனவும்  எச்சரித்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,

பாடசாலைகளை இனரீதியாக பார்க்காமல் ஒரே மொழிப்பாடசாலைகள் என வரும் போது முதலாவதாக பாதிக்கப்படுவது முஸ்லிம் பாடசாலைகள்தான். முஸ்லிம் பாடசாலைகள் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே உள்ளதனால் அவை தமிழ் பாடசாலைகளாகவும் சிங்கள மொழியிலான முஸ்லிம் பாடசாலைகள் சிங்கள பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம், கலாச்சாரம் என்பன ஒழிக்கப்படுவதற்கே இது இட்டுச்செல்லும்.

அமைச்சர் வாசுதேவ இனவாதியாக இல்லாதுவிடினும் அவர் தனது இக்கருத்து இன ஐக்கியத்துக்கு சிறந்த முறை என எண்ணுவது தவறானதாகும். ஒரு காலத்தில் சுமார் எழுபது வருடங்களுக்கு முன் ஆங்கில பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் மத்தியிலேயேதான் இனவாத போராட்டம் உருவாகியது என்பதை நாம் மறக்க முடியாது. திரு. செல்வா, பண்டார நாயக்கா, எஸ். டீ சேனநாயக்கா, ரி. பி. ஜாயா போன்ற தலைவர்கள் ஒரே மொழி பாடசாலையான ஆங்கில பாடசாலைகளில் கல்வி கற்றும் நாட்டில் இனவாதத்தை ஒழிக்க அவர்களால் முடியவில்லை என்பதுடன் அவர்களுக்குள்ளும் இன முறுகல் இருந்ததை காண்கிறோம்.

 அமைச்சரின் கருத்துப்படி இன ரீதியிலான பாடசாலைகள் ஒழிக்கப்பட்டால் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் பௌதீக வளங்கள் ஒழிக்கப்படுவதோடு நாளடைவில் தமிழ், முஸ்லிம் ஆசிரியர்கள் இல்லாமலாக்கப்பட்டு தனிச்சிங்கள ஆசிரியர்களைக்கொண்ட பாடசாலைகளாக அவை மாற்றப்படும் பாரிய ஆபத்து உள்ளது. இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் சாட்டில் இவை நடைமுறைக்கு வருமானால் நாளடைவில் தமிழர்களும் முஸ்லிம்களும் தமது பெயர்களை இனரீதியில் வைக்காமல் பொதுவான சிங்களப்பெயர் வைத்துக்கொள்வதன் மூலம் இன ஐக்கியத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்கள் கூட வெளிவரும்.

ஆகவே எக்காரணம் கொண்டும் நடைமுறையில் உள்ள பாடசாலைகளை ஒழிக்கும் கருத்துக்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இது பற்றி நாடாளுமன்றத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் விழிப்படைய வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
 தேவையாயின் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று பாடசாலைகள் இருக்கத்தக்க நிலையில் தனியான ஆங்கில பாடசாலைகளை அரசாங்கம் உருவாக்கி அவற்றில் சகல இனத்தவரும் கல்வி கற்கும் முறையை கொண்டு வரலாம். இதன் மூலம் பரஸ்பரம் மொழிப்புரிதலை கொண்டு வர முடியுமே தவிர இனவாதத்தை ஒழிக்க முடியாது. ஒரே மொழி பேசுவதன் மூலம் இனவாதம் ஒழிக்கப்படும் என்பதாயின் ஒரே மொழி பேசும் இந்துக்களும் முஸ்லிம்களும் மோதியிருக்க முடியாது. அதே போல் தென்னிலங்கையில் சிங்களத்தை சரளமாக பேசும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்க்குமிடையில் இன முறுகல் ஏற்பட்டிருக்காது.
ஆகவே சிங்;கள பௌத்த மேலாதிக்க சிந்தனை இருக்கும் வரை இன ஐக்கியத்தை ஏற்படுத்துவது முடியாத ஒன்றாகும் என்ற யதார்த்தத்தை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார போன்ற நல்ல அரசியல்வாதிகள் உணர்ந்து அதனை ஒழிக்க முற்படுவதே சிறந்ததாகும் என முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar