BREAKING NEWS

70 வருட கால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு




- அமைச்சர் பைஸர் முஸ்தபா நடவடிக்கை


( மினுவாங்கொடை நிருபர் )


   கொழும்பு - ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் 70 வருட காலமாக நிலவி வந்த குடி நீர்ப்  பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

   கொழும்பு மா நகர சபை முன்னாள் உறுப்பினர் துஷார ஹேமந்த மஞ்சுவின் விசேட வேண்டுகோளுக்கிணங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

   ஜிந்துப்பிட்டி, ஆட்டுப்பட்டித்தெரு, மசங்கஸ் வீதி, விவேகானந்த வீதி ஆகிய பிரதேசங்களில், கடந்த 70 வருட காலமாக மக்களுக்கான குடிநீர் விநியோகம், தினமும் காலை (6-9 வரையிலான) 3 மணித்தியாலங்களும், மாலை (6-8 வரையிலான) 2 மணித்தியாலங்களுமாக மொத்தம் 5 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே  மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

   இந்நிலையில், அமைச்சர் பைஸர் முஸ்தபா இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே, இந்நீர் விநியோகம் தற்போது 24 மணி நேரமும் எவ்விதத் தங்குதடைகளுமின்றி குறித்த பிரதேச மூவின மக்களுக்கும்  விநியோகிக்கப்பட்டு வருவதாக முன்னாள் உறுப்பினர் மஞ்சு தெரிவித்தார்.

   கடந்த 70 வருட காலமாக இப்பிரதேச மக்கள் குடிநீர் பெறுவதில் இருந்த கஷ்ட நிலையை நீக்கி, இவ்வாறு நிவாரணம் பெற்றுத் தந்தமைக்கும், இதற்காக  பொருத்தமான பயன்மிகு  நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்னாள் உறுப்பினர் மஞ்சு, அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இப்பிரதேச வாழ் மக்கள் மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar