BREAKING NEWS

முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமை படுமா ?

முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுமா? அவை இணைந்து முஸ்லிம் மக்களுக்கான தீர்வை முன்வைக்குமா? என்ற ஆதங்கத்தில் பலரும் பலவித கருத்துக்களை ஊடகங்களில் முன்வைத்து வருவதை அண்மைக்காலங்களில் காணலாம்.  இது பற்றி எழுதுபவர்கள் பெரும்பாலும் தத்தமது கட்சிகளுக்குச் சார்பாகவே எழுதுவதையும், நடுநிலைமையாக எழுதுவோரைக் காண முடியாததாகவும் உள்ளது.

அண்மையில் ஸ்ரீ.முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது என்று கூறியதை வைத்து அவரது இக்கருத்துக்கு ஏனைய முஸ்லிம் கட்சிகள் எக்கருத்துக்களையும் தெரிவிக்கவில்லையே என்றும் சிலர் சுட்டிக்காட்டி எழுதுவதை காண முடிகிறது.  

உண்மையில் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை தேவை என்பதையும் அத்தகைய ஒற்றுமை எவ்வாறு ஏற்பட வேண்டுமென்பதையும் அகில இலங்கை உலமா கட்சியே முதலில் 2007ம் ஆண்டு முன் வைத்தது. அத்தோடு நின்று விடாமல் அவ்வாறான ஒற்றுமை ஏற்படுவதற்கான வழி, அதன் பெயர், அதன் யாப்பு என்பவற்றையும் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தது. ஆதனை முன்னெடுக்க  எந்தவொரு முஸ்லிம் கட்சியும் முன்வரவில்லை.
தற்போது முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற அமைச்சர் ரஊப் ஹக்கீம் கருத்து பாராட்டுக்குரியதாக இருப்பினும் அது மிகவும் தாமதமான கருத்hக இருப்பதோடு அந்த ஒற்றுமை எந்த அடிப்படையில் ,  எவ்வாறு என்பதை அவர் தெளிவுபடுத்தவேயில்லை. இந்தத் தெளிவை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு, கருத்தை முன்வைத்த ஹக்கீமுக்குரியதே தவிர ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஹக்கீமின் இக்கருத்து என்பது வெறும் மொட்டையான கருத்துதானே தவிர இதற்கான முயற்சிகள் எதனையும் ஹக்கீம் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.
அண்மையில் ஸ்ரீ மு.காவுக்கும், நசீர் அஹமதின் ஜனநாயக ஐக்கிய முன்னணிக்குமிடையில் ஒற்றுமைக்கான பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக வெளிவந்த செய்திகள் கூட தமது சொந்த காணிப்பிரச்சினைகளை மையமாக வைத்த பேச்சுவார்த்தைகளாகவே தெரிகின்றனவே தவிர, சமூகம் சார்ந்த ஒற்றுமைக்கான பேச்சுவார்த்தைகளாக தெரியவில்லை.  
பொதுவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஏனைய தமிழ் கட்சிகள் ஆதரவளிப்பதை அல்லது மௌனமாக இருப்பதை வைத்து அவர்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றார்களே அது போன்று முஸ்லிம் கட்சிகளும்; செயற்பட முடியாதா என பலரும் எழுதுகின்றனர். முதலில் த.தே. கூட்டமைப்பு என்பது தனியானதொரு கட்சியல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பெயரில் தேர்தல் செயலகத்தில் ஒரு கட்சியும் இல்லை. மாறாக பல தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைந்த அமைப்பே த.தே. கூட்டமைப்பாகும். இவ்வாறான ஒரு கூட்டமைப்பையாவது ஏற்படுத்த ஸ்ரீ.மு.கா இதுவரை முன்வரவில்லை. அவ்வாறான கூட்டமைப்பொன்றை ஏற்படுத்த வாருங்கள் என நாம் கடந்த மூன்று மாதத்துக்கு முன் ஊடகங்களில் தெரிவித்திருந்தோம். முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி அல்லது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என பெயரிட்டு முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என பகிரங்க அழைப்பு விடுத்திருந்தோம். இதற்கும் ஸ்ரீ.மு.காவிடமிருந்தோ, அதன் தலைவர் ஹக்கீமிடம் இருந்தோ எத்தகைய பதிலும் இதுவரை வரவில்லை. மாறாக முஸ்லிம் கட்சிகள்  ஒற்றுமை பட வேண்டும் என கிளிப்பிள்ளை போன்று மொட்டையான கருத்தே வந்துள்ளது.
அத்துடன் த. தே. கூ, தமிழ் மக்களுக்கான சில கோரிக்கைகளை முன் வைத்து அரசில் இணையாமல் தனியாக செயற்படுகிறது. இதன் காரணமாக ஆளுந்தரப்பில் உள்ள சில தமிழ் கட்சிகள் அது விடயத்தில் மௌனமாக இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ. மு. காவோ அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றியோ, அதற்கான தீர்வு பற்றியோ எத்தகைய தெளிவுமற்றிருக்கிறது.    
முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றால் ஏனைய முஸ்லிம் கட்சிகளில் உள்ளவர்கள் ஸ்ரீ,மு.காவில் சேருவதா? ஆல்லது ஸ்ரீ.மு.காவில் உள்ளவர்கள் மற்றைய முஸ்லிம் கட்சியில் சேருவதா? ஓற்றுமைப்படுவது என்றால் எவ்வாறு ஒற்றுமைப்படுவது? இதன் நடைமுறைகள் என்ன? என்றாவது ஹக்கீம் இன்று வரை தெளிவுபடுத்தவில்லை. ஆகவே எவ்வாறு ஒற்றுமைப்படுவது என சமூகத்துக்கு விளக்க வேண்டிய கடமை ஹக்கீம் பக்கமே உள்ளது.
அ.இ.மக்கள் காங்கிரஸை சேர்ந்த அமைச்சர்கள், கிழக்கு மாகாண அமைச்சர் போன்றோர் அரசுக்கு பல்லாக்கு தூக்குவதாக சிலர் எழுதுகின்றனர். அப்படியாயின் ஸ்ரீ.மு.காவும், ஹக்கீமும் அரசுக்கு படு குழியையா வெட்டுகிறர்கள்? ரஊப் ஹக்கீமின் பாராளுமன்ற உரைகளில் 75வீதம் ஜனாதிபதியை புகழ்பாடுவதாக அதாவது  காக்காய் பிடிப்பதாகவே உள்ளது என்பதை பலரும்; அறிவார்கள். ஸ்ரீ.மு.கா தவிர்ந்த ஏனைய முஸ்லிம் கட்சிகள் இந்த ஜனாதிபதியையும், இந்த அரசாங்கத்தையும் கொண்டு வந்தவர்கள். அதனால் அரசை பல்லாக்கில் வைத்து தூக்குவது என்பது அவர்களது உரிமை, கடமை. ஆனால் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்த ஸ்ரீ.மு.கா அரசாங்கத்தை பல்லாக்கில் வைத்து தூக்கிக் கொண்டிருப்பது சமூகத்துக்கு பெரும் அவமானம், அசிங்கம். இதற்குக் காரணம் பதவி வெறி தவிர வேறு ஏதும் காரணம் கூற முடியுமா?
ஏனைய முஸ்லிம் கட்சிகள் ஸ்ரீ.மு.கா தலைவரை மிகவும் தாழ்வாகவும், கையாலாகாத தலைவராகவும் விமர்சிப்பதாக சிலர் குறை கூறுகின்றனர். இன்றைய மு.கா தலைவர் இந்தப் பதினொரு வருடங்களில் முஸ்லிம் சமூகத்துக்காக அவர் சாதித்த எதனையாவது முன்வைக்க முடியுமா? இந்நிலையில் அவரை கையாலாகாதவர் என்று சொல்வதில் எத்தகைய தவறும் இருப்பதாக தெரியவில்லை. அவர் எடுத்த முடிவுகள் பல பிழையானதாகவே இருந்ததாக அவரே அண்மையில் பேசியிருந்தார். அதை விட சாட்சியம் தேவையில்லை.
நிர்வாணமாக இருந்த எமக்கு சரத்பொன்சேக்கா கோவணமாக கிடைத்துள்ளார் என்று பகிரங்கமாக பேசி முஸ்லிம்களைக் காட்டிக் கொடுத்த மு.கா தலைவர் இன்று அந்தக் கோவணத்தை சிறைக்குள் வைத்துவிட்டு நீதியின் அமைச்சராக இருந்து கொண்டு புதினம் பார்க்கும் அசிங்கத்தை எங்கே போய்ச் சொல்வது?
ஏனைய முஸ்லிம் கட்சிகள், ஸ்ரீ.மு.கா தலைவரை விமர்சிப்பதைத்தான் சிலர் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்களே தவிர ஏனைய முஸ்லிம் கட்சித் தலைவர்களை துரோகிகள் என்றும், அரசின் அடிவருடிகள் என்றும், அவர்களை வீட்டுக்கனுப்ப வேண்டும் என்றும் ஹக்கீமும், மு.காவினரும் கூறித்திரிவதை ஏன் மற்றவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள தயங்குகிறார்கள் என்பது புரியவில்லை. இது இவர்களின் ஒரு பக்க சார்பு நிலைப்பாட்டையே காட்டுகிறது.
    ஸ்ரீ.மு.கா கூட அதன் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் அமைச்சர்களை மிகக் கடுமையாக விமர்சித்தவாறே வளர்ந்தது என்ற வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. அமைச்சராக இருந்த ஏ.ஆர்.எம். மன்சூர் கல்முனைக்கு செய்த சேவையில் அரைவாசியைக் கூட மு.காவினால் செய்ய முடியவில்லை. ஆனாலும் அவரை கடுமையாக தூஷித்தே மு.கா வளர்ந்தது. இதேபோல் சம்மாந்துறைக்கு அப்துல் மஜீத் எம்.பி செய்த சேவை போல் மு.கா தலைவரால் செய்ய முடியவில்லை. ஆனாலும் அவரை தனிப்பட்ட வகையில் கூட மோசமான வார்த்தைகளால் தூஷித்தே ஸ்ரீ.மு.கா வளர்ந்தது. ஆனால் இன்றைய ஏனைய முஸ்லிம் கட்சிகள் அந்தளவுக்கு மோசமான வார்த்தைகளால் மு.காவை விமர்சிப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்னாள் அமைச்சர்கள் பல சேவைகளை செய்திருந்தும் சமூகத்தின் எதிர்காலம் சம்பந்தமாக சில தவறுகள் விட்டமைக்காக கடுமையான வார்த்தைகளால் ஸ்ரீ.மு.கா விமர்சித்திருக்கும் போது பெரிதாக மக்களுக்கு எதையும் செய்யாமல் பாரிய பல தவறுகளை செய்துகொண்டிருக்கும் ஸ்ரீ.மு.காவை விமர்சிப்பதை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் இது எந்த வகையில் நியாயம்?
ஆகவே, முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமாயின் வெறுமனே ஒற்றுமைப்பட வேண்டும் என்ற வார்த்தையை மந்திரத்தைப் போன்று சொல்லிக் கொண்டிராமல் அதற்கான பாதையை வகுக்க வேண்டும். இதற்கான கடமைப்பாடு ஸ்ரீ.மு.காவுக்கும் அதன் தலைவர் ரஊப் ஹக்கீமுக்குமே உண்டு. இதனை இவர்கள் செய்யாது போனால் இந்த வார்த்தையின் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முபாறக் அப்துல் மஜீத் 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar