BREAKING NEWS

விலை ஏற்றத்துக்கு ஐ தே க கண்டனம்

  எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக ஒன்றிணைந்த பொது எதிர்க்கட்சிகளால் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தியமையை மிக வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

எரிபொருள் விலையேற்றம் நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லாது செய்யப்பட்டுள்ளமை மற்றும் சிவிலியன்கள் சுட்டுக் கொல்லப்படுதல் ஆகியவற்றுக்கு எதிராக நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பொது எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மக்களால் வாழ முடியாத ஒரு நிலைமை தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் மக்கள் எழுச்சியினையும் எதிர்ப்பினையும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டு பொலிஸ் தாக்குதல் நடத்தியும் போராட்டங்களை தடுத்து விட முடியாது.

நேற்று நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். நாட்டு மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக ஊழல் மோசடிகள், வீண் விரயம் ஆகியவை உயர்ந்து நிற்கின்ற இன்றைய நிலையில் பொலிஸ் தாக்குதலின் மூலம் அடக்கி மக்கள் விரோதத்தை தடைப்படுத்திவிட முடியாது என்பதை கவனத்திற் கொண்டு வருகின்றோம்.

ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபித்து நாட்டு மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வரையில் இந்த போராட்டம் தொடர்ச்சியாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என்பதையும் கண்டிப்பாகக் கூறிக் கொள்கிறோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar