BREAKING NEWS

மீலாதுந்நபி கொண்டாடுவது பற்றி தங்கள் கருத்து

மீலாத் விழா கொண்டாடுவது, ஊர்வலம் போவது பற்றிய கருத்து
 மீலாத் விழா என்பது நபியவர்களின் பிறப்பைக்கொண்டாடுவதாகும். இதனை சிலர் நபியவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவதாகவும் செல்கின்றனர். புpறந்த தினத்தை கொண்டாடுதல், பிறப்பைக்கொண்டாடுதல் என்பதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. நபியவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது என்றால் அவர்கள் பிறந்த தினத்தை சரியாக கணிப்பிட்டுக்கொண்டாட வேண்டும்.  நபியவர்களின் பிறந்த திகதி எது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் ரபிஉல் அவ்வல் மாதம் திங்கட்கிழமை பிறந்தார்கள் என்பது உண்மை. 12ந்திகதி என்றும் 9ந்திகதி என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது பற்றி மக்காவை தலைமையகமாக கொண்ட ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியால் நடாத்தப்பட்ட சரியான ஹதீதுகளின் அடிப்படையிலான நபியவர்களின் வரலாற்றை தொகுக்கும் போட்டியில்  முதற்பரிசு பெற்ற அர்ரஹீக் அல்மக்தூம் என்ற நூலில் நபியவர்கள் ரபீஉல் அவ்வல் 9ந்திகதி திங்கட்கிழமை அதாவது கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 ந்திகதி பிறந்ததாக குறிப்பிடுகிறார். (அர்ரஹீக் அல்மக்தூம், எழுதியவர் ஸபிய்யுர்ரஹ்மான் முபாறக்ப+ரி பக்கம்: 75) ஆனாலும் வழக்கமாக 12ந்திகதி பிறந்ததாகவே நடப்பில் காணுகிறோம்.
 மேலும் பிறைக்கணக்கின் படி இலங்கையில் ஒரு பிறையும், இந்தியாவில் இன்னொரு பிறையும், சஊதியில் வேறொரு பிறையுமாக இருப்பதால் நபியவர்கள் பிறந்த தினமான ரபிஉல் அவ்வல் மாதம் 9ந்திகதியோ 12ந் திகதியோ நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் 20ந்திகதி  நபியவர்கள் பிறந்தி நாள் என அறிவித்தால் உலகம் முழுவதும் ஒரே நாளில் நபியவர்களின் பிறந்த தினமாக கருதப்படும் நிலை ஏற்படும். இது பற்றி மீலாத் விழா கொண்டாடுவோர் கவனமெடுப்பது நல்லது.
நபியவர்களின் மீலாத்தை விழாவாக கொண்டாடும் பழக்கம் நபியவர்கள் காலத்திலோ சஹாபாக்கள் காலத்திலோ இருக்கவில்லை. ஆனாலும் நபியவர்கள் இவ்வுலகில் பிறந்ததற்காக ஒரு முஸ்லிம் சந்தோசப்படுவானாயின் உண்மையில் அது அவனுக்கு நன்மை தரும் என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறெனினும் நபியவர்களின் பிறந்த தினத்தை கொண்டாட வேண்டாம் என நபியவர்கள் சொல்லவுமில்லை. நபிமார்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது நபியவர்கள் காலத்து மக்களிடம் இருந்த ஒன்று. கிறிஸ்தவர்கள் நபி இயேசுவின் பிறந்த தினத்தை கொண்டாடும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். நபியவர்களும் இது பற்றி அறிவார்கள் என்பதால் இவ்வாறு செய்வது கூடாது என்று கூறியிருப்பார்கள். மாறாக கிறிஸ்தவர்கள் இயேசுவை அளவுக்கதிகமாக புகழ்ந்தது போன்று தன்னையும் புகழ வேண்டாம் என்றுதான் கூறியுள்ளார்கள். இவ்வாறு தனது பிறந்த தினத்தையும் முஸ்லிம்கள் கொண்டாடக்கூடாது என்றிருந்தால் நிச்சயம்  அதற்கு தடை விதித்திருப்பார்கள்.
ஒரு விடயம் நபியவர்கள் காலத்து மக்களின் பழக்கத்தில் இருந்தும் அதனை  நபியவர்கள் தடைசெய்யாமல் விட்டிருந்தால் அதனை முஸ்லிம்கள் பழக்கமாக செய்வதில் தவறில்லை என்பது பிக்ஹ் அறிஞர்களின் முடிவாகும்.
     இந்த மீலாத் விழாவை ஈராக், சிரியா, எகிப்து, இந்தியா போன்ற பல நாடுகளில் நாம் காண்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக அதாவது அந்தந்த நாட்டு கலாச்சார சூழலுக்கேற்ப கொண்டாடுவதைக் காண்கிறோம்.
     இவ்வாறான மீலாத் விழா என்பது நபியவர்களின் மரணத்தின் பின் சுமார் முன்னூறு வருடங்களுக்குப் பிறகே கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இது ஒரு பித்அத்தான இஸ்லாத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத நவீன செயல் என்பதால் இதற்கும் மார்க்கத்திற்கும் தொடர்பில்லை என்பது சிலரது வாதம். அதேபோல் மீலாத் விழா நபியவர்கள் இந்த உலகில் பிறந்தார்கள் என்பதற்காக கொண்டாடும் ஒரு நல்ல செயல் என்றும், நபியவர்கள் பிறந்தமைக்காக கொண்டாடுவது நல்லதொரு செயல்தானே என்றும் சிலர் கூறுகிறார்கள். இது ஒரு பித்அத் என்பதை விட அழகிய சுன்னா (வழிமுறை) எனக் கொள்ளலாம் என்பது இவர்களது வாதம். இத்தகைய இரு சாராரின் வாதத்திலும் உண்மை உண்டு. பொதுவாக மீலாத் விழா கொண்டாடுவது ஒரு முஸ்லிமின் கடமையோ சுன்னத்தோ அல்ல. விரும்பினால் அவன் கொண்டாடலாம் விரும்பாவிட்டால் கொண்டாடாமல் இருக்கலாம் என்ற கருத்துக்கே நாம் வர  வேண்டியுள்ளது.
இந்த மீலாத் விழா கொண்டாட்டத்தை மார்க்கமாக பார்க்காது, அதாவது இதனை செய்தால் 10 நன்மை செய்யாவிட்டால் பாவம் என  மார்க்கமாக பார்க்காது முஸ்லிம்களின் கலாச்சாரம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இது விடயத்தில் கருத்து வேற்றுமை பட வேண்டிய அவசியமே இருக்காது. நடைமுறையில் முஸ்லிம்கள் மத்தியில் நாட்டுக்கு நாடு இது போன்ற பல கலாச்சார கொண்டாட்டங்களை காண்கிறோம். சஊதியில் வருடா  வருடம் ஜனாதிரிய்யா என்ற கொண்டாட்டம் நடக்கும். இதில் றபான் அடித்து வாள் தூக்கி ஆண்கள் வரிசையாக நின்று ஆடும் காட்சியை காணலாம். இதனை அவர்கள் மார்க்கம் என கருதாது அதனை தமது நாட்டு கலாச்சாரமாக செய்கிறார்கள். இதனை அந்நாட்டு உலமாக்கள் கண்டிப்பதி;ல்லை. அதே போல் நாட்டின் தேசிய தினம் சஊதி உட்பட அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இதனையும் அவர்கள் தமது நாட்டு  கலாச்சாரமாகவே கருதி செய்கிறார்கள். நபியவர்கள் இவ்வாறு Nதிய தினம் கொண்டாடவில்லை.
ஒரு முஸ்லிம்  மார்க்கத்தில் அனுமதிக்காத செயலை செய்ய முடியாது. அந்த வகையில் பார்க்கும் போது மேற்படி கலாச்சார கொண்டாட்டங்களை முஸ்லிம் நாடுகளில் செய்ய முடியாது. ஆனால் கலாச்சாரம் என்ற வகையில் மார்க்க வரம்புகளை மீறாமல் கொண்டாடலாம் என்பதை உலமாக்கள் ஏற்றுக்கொண்டதனால்தான் இத்தகைவிழாக்களை கொண்டாடுகிறார்கள். இவ்வாறான கலாச்சார கொண்டாட்டங்களை நபியவர்கள் காலத்திலும் கொண்டாடியுள்ளதை காண்கிறோம். நபியவர்கள் மதினாவில் நுழைந்த போது மதீனத்து வாசிகளின் கலாச்சாரத்துக்கு ஏற்ப நபியவர்களை பாட்டுப்பாடி ஊர்வலமாக அழைத்துச்சென்றமை, யுத்த வெற்றியின் பின் றபான் அடித்து பாட்டுப்பாடி ஆடுவது போன்றவற்றை கூறலாம். இதனடிப்படையிலேயே தமது நாடுகள் சுதந்திரம் பெற்றமைக்காக அந்த நாடுகளில் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. அதே போல் நபியவர்களின் பிறப்புக்காக மகிழ்வுற்று மீலாத் விழாவும் கொண்டாடப்படுவதும் முஸ்லிம்களின் கலாச்சாரமாக கொயப்பட வேண்டும்.
ஆக மீலாத் விழாவை முஸ்லிம்களின் கலாச்சார விழா என்ற கண்ணேட்டத்தில் கொண்டாடப்படுமாயின் அதில் தவறே இல்லை. இதே போன்று தான்  மீலாத் ஊர்வலத்தையும் நாம் பார்க்க வேண்டும். நமது நாட்டில் தேர்தல் என்று வந்து விட்டால் தாம் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவாக வாகனங்களில் ஊர்வலம் போவதை காண்கிறோம். இத்தனைக்கும் அந்த ஊர்வலத்தில் சீன வெடியை வீடுகளுக்குள் எறிவது, கூய் என கத்துதல் போன்ற அசிங்கமான காட்சிகளும் இடம் பெறும். இவற்றை  சகித்துக்கொண்டு மீலாத் ஊர்வலம் கூடாது என கூறும் தவ்ஹீத்வாதிகளும்; உற்சாகமாக கலந்து கொள்வதை காணலாம். இது பற்றி அவர்களிடம் கேட்டால் நாம் இதனை மார்க்கம் என கருதி செயற்படவில்லை, இது நமது நாட்டின் தேர்தல் கலாச்சாரம் என கருதி செய்கிறோம் என்கிறார்கள். இதே போன்று மீலாத் ஊர்வலமும் மார்க்கம் என கருதி செயற்படாமல் நமது நாட்டு முஸ்லிம்களின் கலாச்சாரம் என கருதினால் எந்தப்பிரச்சினையும் இல்லை.
ஆகவே மீலாத்விழா, ஊர்வலம் என்பவை மார்க்கத்தில் ஏவப்பட்டவை அல்ல, மாறாக அவை நமது நாட்டு முஸ்லிம்களின  கலாச்சார பாரம்பரிய நிகழ்;வுகள். அவற்றை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கமும் மீலாத் தேசிய விழா ஏற்பாடு செய்து தந்துள்ளதால் அதனால் பல முஸ்லிம் கிரமங்கள் நன்மை அடைகின்றன. மேலும் எதிர் வரும்  காலங்களிலாவது நபியவர்களின் மீலாத்தினமாக ஏப்ரல் மாதம் 20ந்திகதியை அரசாங்கம் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் உலகம் ப+ராவும் ஒரே நாளில் நபியவர்களின் மீலாத் தினத்தை கொண்டாட முடியும்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar