BREAKING NEWS

மேயரின் இயலாமையை மறைப்பதற்கே எம்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது; மா.ச.உறுப்பினர்கள் ஜவாத், ஜெமீல் கண்டனம்!


Jawad_Jameel(அஸ்லம் எஸ்.மௌலானா, அஸ்ரப்கான், சிஹாப்)
கிழக்கு மாகாண ஆளுநரின் கல்முனை விஜயம் ரத்துச் செய்யப்பட்டமைக்கும் தமக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்) மற்றும் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்



இந்த விவகாரத்துடன் தம்மைத் தொடர்புபடுத்தி கல்முனை மாநகர மேயர் கருத்து வெளியிட்டிருப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பதோடு இக்குற்றச்சாட்டு ஓர் அநாகரீகமான அரசியல் நடவடிக்கையாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மேலும் கூறியதாவது; 'கிழக்கு மாகாண ஆளுநரின் கல்முனை விஜயம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. ஆளுநரின் கல்முனை விஜயம் தடைப்பட்டமைக்கு நாங்கள் தான் காரணம் என தலைவர் ரவூப் ஹக்கீம் மீதும் எங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது அபாண்டமான குற்றச் சாட்டாகும்.

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ், அதாவுல்லாவின் தேசிய காங்கிரசைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம், றிஸாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர் முபீத் போன்றோர் பகிரங்கமாகவே பத்திரிகைகளில் எம்மீது வீண் பழி சுமத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியது என்பதோடு இதில் வேறு சக்திகளின் வழிநடத்தல்கள் இருக்கக் கூடும் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

மேயர் சிராஸ் அரசியலுக்கு புதியவர். அவரை வேறு யாரோ எமது கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக பயன்படுத்துகின்றனரோ என்று நாம் சந்தேகிக்கின்றோம். அவர் இவ்விடயம் தொடர்பில் எம்முடன் கலந்து பேசியிருக்கலாம். ஆனால் செய்வதை எல்லாம் செய்து விட்டு அவரது இயலாமையை மறைப்பதற்கு இப்போது எம்மீது பழி போட எத்தனிப்பது கண்டிக்கத்தக்க கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கையாகும்.

உண்மையில் கல்முனை மாநகர சபை மேயரின் சில நடவடிக்கைகள் தொடர்பாக எமது தலைவர் ரவூப் ஹக்கீமிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முறையிட்டிருந்ததைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி நீதியமைச்சில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் மேயர் சிராஸ் பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோருடன் நாமும் கல்ந்து கொண்டிருந்தோம். தமிழ் வர்த்தகர் குழுவொன்றும் வந்திருந்தது.

கல்முனை பஸ் நிலைய கடைகள் மற்றும் சாப்பு சட்ட நடைமுறை தொடர்பில் தமிழருக்கு அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அவர்கள் முறையிட்டனர். இந்நிலையில் தமிழர்களுக்கு நியாயம் வழங்க வேண்டியதன அவசியத்தை வலியுறுத்திய தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும் மேயருக்கு சில பணிப்புரைகளை வழங்கினார்.

ஆனால் பத்திரிகைகளில் வந்த செய்திகள் தலை கீழாகவே உள்ளன. அந்த செய்திகளில் சில வதந்திகளும் புரளிகளும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதோடு தலைவர் மீதும் கல்முனையை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களாகிய எம்மீதும் வீண் பழி போடப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல ஆளுநரின் வருகை தடுக்கப்பட்டதனால் கல்முனை மாநகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவிருந்த 350 மில்லியன் ரூபா இழக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கின்றனர். எனினும் ஆளுநரினால் நேரடியாக நிதியொதுக்கீட்டினை மேற்கொள்ள முடியாது என்பதே எமக்குத் தெரிந்த விடயம். ஆகவே இதுவும் ஒரு கட்டுக் கதையாகும்.

இந்த விவகாரத்தில் எம்மீது பழி போடப்பட்டிருப்பதால் ஆளுனரை நாம் சந்தித்து உண்மை நிலையை வெளிப்படுத்துவதோடு அவரை கல்முனைக்கு அழைத்து வருவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வோம்.

நாம் அபிவிருத்திகளைத் தடுத்து நிறுத்தி பழக்கப்பட்டவர்கள் அல்ல. நாம் எமது மாகாண சபை மூலம் நிறைய வேலைகளை செய்துள்ளோம். நாங்கள் சம்மந்தப்படாமலும் சில வேலைகள் நடந்துள்ளன. அவற்றை நாங்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் நான் அத்தகைய செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபட்டது கிடையாது. அபிவிருத்திக்காக அனைவருடனும் கூட்டிணைந்து செயற்பட நான் என்றும் தயாராகவே உள்ளேன்' என்று தெரிவித்தார். நன்றி மெட்ரோ miror 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar