BREAKING NEWS

ஜனாதிபதிக்கு எதிரான ஜெனீவா பிரேரணையை கல்முனைத் தொகுதி மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்க்கின்றோம்; கண்டனப் பேரணிக்கு தலைமை வகித்து ஹரீஸ் சூளுரை!


Harees(எஸ்.அஸ்ரப்கான்)
எமது நாட்டின் நிரந்தர சமாதானத்தை சீர்குலைக்கும் மேற்குலக நாடுகளின் சதி முயற்சிகளை கட்சி பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து முறியடிப்போம் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்;.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவிருக்கும் மனித உரிமை மீறல்கள் குற்றப் பிரேரணையினை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக கல்முனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் சம்மேளனங்கள், வர்த்தக சங்கத்தினர், திணைக்களங்கள், பொது அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலைகள் மாணவர்கள் மற்றும் சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ஆகிய ஊர்களின் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்கினர்.

அங்கு ஹரீஸ் எம்.பி.தொடர்ந்து உரையாற்றுகையில்; 'மூன்று சகாப்த காலமாக எமது நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத சூழ்நிலையினை இல்லாமலாக்கி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கும் தாய்நாட்டுக்கும் எதிராக மேற்குலக நாடுகள் சதி வலையினை பின்னி இன்று அதனை மனித உரிமை மீறல்கள் பிரேரணையாக ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத் தொடரில் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றன.

இத்தருணத்தில் நாம் அனைவரும் இலங்கை பிரஜைகள் என்ற உணர்வுடன் இன, மத,பேத கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து இப்பிரேரணையினை எதிர்ப்பதோடு எமது ஒற்றுமையினை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்வாகவே இப்பேரணியை நான் கருதுகின்றேன்.

பயங்கரவாதத்தினால் மிக மோசமாக வடகிழக்கு மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது யுத்த சூழ்நிலை நீங்கி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் எமது மக்களை மீண்டும் ஒரு பயங்கரவாத சூழ்நிலைமைக்குள் தள்ளி எமது நாட்டினை ஒரு வறிய நாடக மாற்றி மேற்குலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளிவிட மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றது

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின்றியும் தொழில் வாய்ப்புகளின்றியும் மாணவர்கள் சிறந்த கல்வி வசதிகளின்றியும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மேற்குலக நர்டுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாராமல் தற்போது இருக்கின்ற நிம்மதியினைக் கூட இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகவே பார்க்கத் தோன்றுகின்றது.

கல்முனை மாநகரம் இலங்கை முஸ்லிம்களின் முகவெற்றிலையாகும். இன்று எமது நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஜெனீவா மாநாட்டில் கொண்டு வரப்படவிருக்கும் பிரேரணையினை கல்முனைத் தொகுதி மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்க்கின்றோம் என்ற செய்தியினை நாம் சர்வதேசத்திற்கும் அரசுக்கு வெளிப்படையாக தெரிவித்துள்ளோம்" எனவும் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar