BREAKING NEWS

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சருடன் விரைவில் பேச்சு- ஹில்லாரி

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உண்மையான, விரைவான மறு வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே போர் பாதித்த பகுதியில் நீடித்த, நிலைத்த அமைதிக்கு வாய்ப்பு ஏற்படும் என்பதை சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து, இலங்கைக்கு அமெரிக்கா உறுதிபட புரிய வைத்துள்ளது. விரைவில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் பிரீஸ் உடன்  இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக தாங்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹில்லாரி கிளிண்டன் கூறுகையில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முழுமையான விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

27 ஆண்டு கால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை, நீடித்த, நிலைத்த அமைதியை நோக்கி நடை போட இந்த தீர்மானம் உதவும். 

இலங்கையில் நீடித்த, நிலைத்த அமைதிக்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய, உண்மையான, விரைவான மறு வாழ்வு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை உலக சமுதாயத்துடன் இணைந்து அமெரிக்கா உரக்கச் சொல்லியுள்ளது.

இலங்கைக்கு அனைத்து வகையிலும் உதவ உலக சமுதாயம் ஆவலுடன் காத்துள்ளது. எல்எல்ஆர்சி பரிந்துரைகளை விரைவாகவும், முழுமையாகவும் இலங்கை அரசு அமல்படுத்தும் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

இதுதொடர்பாக இலங்கை அரசுன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். மேலும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பிரீஸ் உடன் பேச்சுநடத்தவும் ஆவலாக உள்ளோம் என்றார் ஹில்லாரி.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar