BREAKING NEWS

2004 பொதுத்தேர்தலில் அம்பாரையிலும், 2008 கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலையிலும் ரஊப் ஹக்கீம் போட்டியிடுவதை பார்த்து ரசித்த மு.கா பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர்

2004 பொதுத்தேர்தலில் அம்பாரையிலும், 2008 கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலையிலும்  ரஊப் ஹக்கீம் போட்டியிடுவதை பார்த்து ரசித்த  மு.கா பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட கிழக்கு மண்ணில் தகுதியானவர் இல்லையா என இப்போது கேட்பதற்கு வெட்கமில்லையா என உலமா கட்சியின் ஸ்தாபக தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் முஸ்லிம் முதலமைச்சருக்கும் அப்பால் கிழக்கு முஸ்லிம்களின் பலத்தை காட்டுவோம் என நாம் பாரிய  முயற்சிகள் செய்தோம். ஆனால் முஸ்லிம் முதலமைச்சர் பெரிய விடயமல்ல என கூறி ரஊப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்தில் ஐ. தே. கவில் போட்டியிட்டார். இது கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும்; குறிப்பாக திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு அங்கு தகுதியானவர் எவருமில்லை என்ற அவமானத்தையும் ஏற்படுத்தும் செயல் என்பது  நிசாம் காரியப்பர் போன்றவர்களுக்கு ஏன் அப்போது புரியாமல் போனது?

அதே போல் 2004 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தகுதியானவர் எவரும் இல்லை என்று கருதித்தான் ரஊப் ஹக்கீம் அங்கு போட்டியிட நிசாம் காரியப்பர் அனுமதித்தாரா?  அன்று ஹக்கீமின் இத்தகைய மோசடிகளுக்கு கூடவே இருந்து துணை போன நிசாம் காரியப்பர்  இன்று தனக்கு கல்முனை மேயர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காகவா புதிய ஞானம் கொண்டு பேசுகிறார் என கேட்க விரும்புகிறோம். அன்று ரஊப் ஹக்கீம் கிழக்கில் போட்டியிட்டது நியாயம் என்றால் வரப்போகும் மாகாண சபை தேர்தலிலும் அவர் போட்டியிடுவதில் என்ன அநியாயம் உள்ளது? ஜனநாயக முறைப்படி எவரும் எங்கும் போட்டியிடலாம். அதனை தடுக்க எவருக்கும் உரிமையில்லை. வாக்களிக்கும் மக்கள்தான் தமது புத்தியை பயன்படுத்த வேண்டும்.

மு. கா கட்சிக்குள்ளிருந்து எவரும் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் மாற்றங்கள் எதனையும் கொண்டு வரமுடியாது என்ற யதார்த்தத்தை நாம் உட்பட  அதாவுள்ளா, ரிசாத் பதியுதீன், வை. எல். எஸ் போன்றோரும் காட்டிவிட்டனர். அப்போது இதனை குற்றம் கண்ட நிசாம் காரியப்பர் போன்றோர் இன்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பதை காண முடிகிறது. ரஊப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசால் இந்த சமூகத்துக்கான அரசியல், மற்றும் இருப்புக்கான விமோசனத்தை பெற முடியாது என்பதை 2002ம் ஆண்டு காத்தான்குடியில் நடை பெற்ற கிழக்கு மாகாண உலமாக்கள் மாநாட்டில் முதன் முதலாக இந்த நாட்டில் பகிரங்கமாக சொன்னவர் நாமே என்பதால் எமது அன்றைய கருத்துக்களே இன்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

உலமா கட்சித்தலைவர் ஏன் மு.காவை கடுமையாக சாடுகிறார் என பலரும் கேட்பதுண்டு. இன்று கட்சிக்குள்ளிருந்தே சாடல்கள் பலமாகவும், குமுறல்கள் மெதுவாகவும் கேட்பதன் மூலம் சமூக நன்மைக்காகத்தான் நாம் கடுமையாக விமர்சித்தோம் என்ற உண்மை பலருக்கும் புரிந்திருக்கும் என நம்புகின்றோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar