BREAKING NEWS

தம்புள்ள பள்ளி சம்பந்தமாக தாம் பேசியதன் பின்னரே ஏனைய முஸ்லிம் கட்சிகள் பேசின என்ற ஸ்ரீ. மு. கா தலைவரின் உரை அப்பட்டமான பொய்யாகும்

தம்புள்ள பள்ளி சம்பந்தமாக தாம் பேசியதன் பின்னரே ஏனைய முஸ்லிம் கட்சிகள் பேசின என்ற ஸ்ரீ. மு. கா தலைவரின் உரை அப்பட்டமான பொய்யாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தம்புள்ள பள்ளவாயல் சேதமாக்கப்பட்ட தினத்தன்றே இது பற்றி நாம் கடுமையாக கண்டனம் தெரிவித்ததை அன்றே இணையத்தளங்கள் செய்தியாக வெளியிட்டன. அதே போன்று மறுநாள் சனிக்கிழமை சிங்கள வானொலியான  நெத் எப் எம் எம்மோடு தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டபோது அதிலும் எமது கண்டனத்தை தெரிவித்ததோடு பள்ளிவாயல் அதே இடத்திலேய இருக்க வேண்டும் என்றம் கேட்டுக்கொண்டோம்.  அதேபோல் அமைச்சர் ரிசாத் பதியுதீனும், அமைச்சர் பௌசியும் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க சீல் வைக்கப்பட்ட பள்ளி வாயலை மறுநாளே அங்கு சென்று பள்ளிவாயலை மீண்டும் தொழுகைக்காக திறந்ததை முஸ்லிம் சமூகம் மறக்க முடியாது.  இத்தகைய வேளைகளில் மு. கா தலைவர் எத்தகைய கண்டன அறிக்கையும் விடவில்லை.
அதே போல் தம்புள்ள பள்ளி சம்பந்தமாக உலமா சபை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென நாம் விடுத்த அறிக்கை சனிக்கிழமை இணையத்தளங்களிலும் திங்கட்கிழமை வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் வெளிவந்தன. இதனை தொடர்ந்து சில உயர் மட்டும் எம்மோடு தொடர்பு கொண்டு எம்மை குற்றம் சாட்டிய போதும் எமது நிலைப்பாட்டிலிருந்து வாபஸ் பெறமுடியாது என நாம் உறுதியாக தெரிவித்தோம்.
மறுநாளே கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த ஹக்கீம் தம்புள்ள பற்றி வாய் திறக்கவேயில்லை. அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமையே காத்தான்குடியில் நடபெற்ற விழாவில் இது பற்றி வீறாப்புடன் பேசிய அவர் தம்புள்ள சென்று தான் நேரடியாக நிகழ்வை பார்க்கும் வரை தாம் எதுவும் இதுவரை பேசவில்லை என்றும் இன்றே தான் பார்த்துவிட்டு வந்து பேசுவதாகவும் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியிருந்தார். அவருடைய அந்தப்பேச்சில் வீரம் தெரிந்ததால் தம்புள்ள பிரச்சினைக்காக நீதி கேட்டு அரசிலிருந்து விலகவும் தயார் என்பதுபோல் அவர் பேசியதால் அந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட உலமா கட்சித்தலைமை நேரடியாக மு. கா தலைமையை வாழ்த்தி பாராட்டும் தெரிவித்தது.
ஆனால் மறு நாள் கொழும்பு வந்ததும் தம்புள்ள பிரச்சனைக்காக அரசிலிருந்து வெளியெற மாட்டோம் என ஹக்கீம் கூறியதன் மூலம் கிழக்கில் ஒன்றும் கொழும்பில் ஒன்றும் பேசும் மு. கா தலைவரின் வழமையான செயல் வெளிக்காட்டப்பட்டது. தம்பள்ள பள்ளி வாயல் சம்பந்தமாக இந்தியாவிலும் எதிர்ப்பலைகள் தோன்றிய போது இது வியத்தை சர்வதேசத்துக்கு தான் கொண்டு போகப்போவதில்லை என கூறியதன் மூலம் ஹக்கீம் தனது பதவிக்கு நல்ல பிள்ளையானார். அத்தோடு நின்று விடாமல் மே தினத்தன்று உரையாற்றும் போது தாம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை யாரும் பெரிதாக கணக்கெடுக்க வேண்டாம் என கூறி; காத்தான்குடி பேச்சுக்கு மறைமுகமாக அரசிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதன் பின் தம்புள்ள விவகாரம் முடிந்து விட்டது என்றும் இனி தான் இது பற்றி பேசப்போவதுமில்லை என்றும் கிண்ணியாவில் வைத்து கூறிய ஹக்கீம் இப்போது அனுராதபுரத்தில் வைத்து தம்புள்ள விவகாரத்தை மீண்டும் அவரே பேசியதோடு இது விடயத்தில் அவர் பேசியதன் பின்பே ஏனைய முஸ்லிம் கட்சிகள் பேசின என பொய்யாக கூறியள்ளார்.
    உலமா கட்சி எப்போதும் உண்மைக்காக போராடுகின்ற கட்சி என்பதனால் நாம் ஹக்கீமின் இக்கூற்றை கண்டிப்பதோடு நீதிக்கு அமைச்சராக இருக்கும் அவர் நீதியாக பேசும்படியும் முடிந்தால் இது பற்றிய உண்மைகளை அறிய  அவர் எம்மோடு நேரடி விவாதத்துக்கு வரும் படியும்  கேட்டுக்கொள்கிறோம் என முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar