BREAKING NEWS

முஸ்லிம்கள் மத்தியிலான மோதல்கள் அனாவசியமானவை


இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிம்களாக இருந்தும் அவர்கள் மத்தியில் தேவையற்ற வகையிலான பிளவுகள், மோதல்கள் இருப்பதைக் காணலாம்.

சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிம் என்றால் அவன் கத்தம், பாத்திஹா, மௌலீத் ஓத வேண்டும், கொடியேற்றம், கந்தூரி கொடுக்க வேண்டும். இவற்றை செய்துவிட்டால் அவன் பூரணமான சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிம் என தம்மை சுன்னத்வல் ஜமாஅத்தினர் என அழைத்துக் கொள்ளும் இலங்கை, இந்திய முஸ்லிம்கள் கூறிக் கொள்கின்றனர். இவற்றைச் செய்யாத ஒரு முஸ்லிம் அவன் ஐவேளை தொழுதாலும், நோன்பு பிடித்தாலும், ஹஜ் செய்தாலும், ஸகாத் கொடுத்தாலும் அவன் வஹ்ஹாபி அல்லது சுன்னத்வல் ஜமாஅத் அல்லாத முஸ்லிம் அல்லது வழிகேடன் என இவர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல் ஒரு முஸ்லிம் ஐவேளை தொழுபவனாக மற்றும் கடமைகளை செய்பவனாக இருக்கும் நிலையில் மௌலீத் ஓதுபவனாக, மீலாத் கொண்டாடுபவனாக, கந்தூரி கொடுப்பவனாக இருந்தால் அவன் பித்அத்வாதி, ஷிர்க் செய்பவன் என்றெல்லாம் கூறி அவனை தீண்டத்தகாதவன் போல பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவனுக்கு பின்னால் நின்று தொழுவதில்லை, அவர்களின் பள்ளிவாயல்களுக்கும் செல்வதில்லை, அவர்களுடன் இரண்டற பழகுவதுமில்லை என்ற நிலைப்பாட்டில் இவர்கள் வாழ்வதைக் காண்கிறோம்.
இவ்விருசாராரின் நிலைகளையும் பார்க்கும்போது சிரிப்பும் வேதனையும்தான் வருகிறது. கலிமாச் சொன்ன ஒரு முஸ்லிம் ஐவேளை தொழுது ஏனைய கட்டாய கடமைகளையும் செய்வான் என்றால் அவன் கத்தம், மௌலீது, கந்தூரி போன்றவற்றை செய்யாது விட்டாலும் அவன் முஸ்லிம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
அதேபோல் ஒரு முஸ்லிம் ஐவேளை தொழுபவனாக ஏனைய கடமைகளை செய்து கொண்டு அவன் கத்தம் ஓதினால் என்ன, கந்தூரி கொடுத்தால் என்ன, மௌலீத் ஓதினால் என்ன? அவன் முஸ்லிம்தான் என்பதிலும் எத்தகைய சந்தேகமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
சில தவ்ஹீத்காரர்கள் கந்தூரிகளுக்கு அழைக்கப்பட்டால் அல்லது பாத்திஹாவுக்கு அழைக்கப்பட்டால் அங்கு அவர்கள் செல்வதில்லை. சரி, சாப்பாடுதானே! சாப்பிட்டு விட்டாலாவது வரவேண்டியதுதானே என்றால் அதற்கும் போகமாட்டார்கள். கேட்டால் அங்கு சாப்பாட்டுக்கு முன் பித்அத் நடக்கிறது என்பார்கள்.
ஆனால் இதே தவ்ஹீத்வாதிகளை பிரதமர் அல்லது ஜனாதிபதி சாப்பாட்டுக்கு அழைத்தால் ஓடிப் போய் சாப்பிட்டுவிட்டு வருகின்றனர். அங்கும் சாப்பட்டுக்கு முன் பௌத்த தேரர்கள் ஒரு மூலையில் ‘பன’ ஓதிய பின்தான் சாப்பாடு வருகிறது. அப்படியும் தவ்ஹீத்வாதிகள் சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள்.
அதேபோல் அறபு நாடுகளின் தூதரகங்கள் தமது தேசிய தினத்தை இலங்கையில் கொண்டாடும் போது அதற்கு அழைக்கப்படால் தவஹீத்வாதிகளின் தலைவர்கள் தமது சொந்தப் பணத்தையும் செலவு செய்து கொழும்புக்குச் சென்று கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்வுகளில், அந்த நாட்டின் தேசிய கீதத்துக்கான இசை ஒலிபரப்பாகும். எல்லோரும் எழுந்து நின்று சலாம் அடிப்பார்கள். அதேபோல நமது நாட்டு தேசிய கீதத்தின் இசை மட்டும் ஒலிபரப்பாகும். இதற்கும் எழுந்து விரைந்து நிற்பார்கள். பின்னர் சாப்பாடு கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு வருவார்கள். இத்தகைய இசைகள் பித்அத்தா, ஷிர்க்கா, சுன்னத்தா என்பது பற்றியெல்லாம் தவ்ஹீத்வாதிகள் ஆராய்வதில்லை. மாறாக அறபுத் தூதுவரின் சாப்பாடு அல்லவா என்பதில் மட்டும்தான் கவனமும் ஆர்வமும் இருக்கும்.
ஆனால் ஒரு இலங்கை முஸ்லிமோ மௌலீத் என்ற பெயரில் இசைக் கருவிகள் இன்றி பொருள் கூடபுரியாத அளபு மொழியில் உள்ள ஏதோ புகழ் பாடலை பாடிவிட்டு சாப்பிடுங்கள் என்றால் அது கூடாது என்பதும் அறபு தூதுவர்கள் இசைக்கருவிகளின் இசையை ஒலித்து விட்டு சாப்பாடு தந்தால் வெட்டோ வெட்டு என வெட்டுவதும் என்ன கூத்து என்பது புரியவில்லை. அது ஹறாமான சாப்பாடு இது ஹலாலான சாப்பாடா?
மொத்தத்தில் சுன்னத்வல் ஜமாஅத் என்போரும் தவ்ஹீத்வாதிகள் என்போரும் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொண்டு அடுத்தவர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பது தவிர வேறு எதையும் கூற முடியவில்லை. 
-முபாறக் அப்துல் மஜீத்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar