BREAKING NEWS

பௌத்த பிக்குகள் பிழை செய்வதற்காக அனைத்து சமயத்தலைவர்களையும் அது போல் எடை போடுவது அநீதியானதாகும்


பாராளுமன்றத்துக்கு தெரிவான சில பௌத்த பிக்குகள் பிழை செய்வதற்காக அனைத்து சமயத்தலைவர்களையும் அது போல் எடை போடுவது  அநீதியானதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

பிக்குகள் பாராளுமன்றத்துக்கு போக முடியாது என்பதை சிங்கள மக்களின் அனுமதி பெற்று அரசாங்கம் சட்டம் கொண்டு வரலாம். இது அவர்களது சமூக பிரச்சினை. ஆதற்காக ஏனைய சமயத்தலைவர்கள் எவரும் பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில் அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாத நிலையில் பொதுவாகவே சமயத்தலைவர்கள் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாது என சட்டம் கொண்டு வருவது நியாயமானதல்ல. 
அத்துடன் ஒரு நாட்டை ஆட்சி செய்வது பாராளுமன்றமாக இருந்த போதும் மக்களை ஆட்சி செய்யக்கூடிய வகையில் உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. இவ்வாறான சபைகளான மாகாண சபை, நகர, மாநகர, பிரதேச சபைகளில்  முஸ்லிம் சமயத்தலைவர்களான மௌலவிமாரும் உறுப்பினர்களாக இருந்து சேவை செய்வதை காண்கிறோம். பாராளுமன்ற பௌத்த பிக்குகளுக்கெதிராக சிங்கள மக்கள் பல குற்றச்சாட்டுக்களை வைப்பது போன்ற பாரதூரமான  குற்றச்சாட்டுக்களை  உள்ளுராட்சி சபைகளில் உள்ள மௌலவிமார்களுக்கெதிராக முஸ்லிம்கள் வைப்பதை காண முடியவில்லை. இதன் மூலம் மௌலவிமாரின் அரசியல் சேவையை முஸ்லிம் சமூகம் ஆதரித்து வருகிறது என்பதையே காணலாம். 

சமயத்தலைவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியாது என சட்டம் இயற்றப்படுமானால் அவர்கள்; உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிட முடியாது என்ற சட்டமும் தானாகவே இயற்றப்படும். இதன் மூலம் சமயத்தலைவர்களின் அரசியல் சேவையை உள்ளுர் மக்கள் பெற முடியாத நில ஏற்படும். இவ்வாறு முஸ்லிம் சமயத்தலைவர்கள் அரசியலில் ஈடு படுவதை தடுப்பது இஸ்லாமிய ஷரீயா சட்டத்தின்படி தவறானதாகும்.  

மேலும்,  பல உள்ளுராட்சி சபைகளில் ஸ்ரீ. மு. காவினதும் ஏனைய கட்சிகளினதும் உறுப்பினர்களாக பல மௌலவிமாரும் உள்ள நிலையில் இது பற்றி அந்தக்கட்சிகள் வாய் திறக்காமல் இருப்பதன் மூலம் தமது அங்கத்தினர்களான மௌலவிமாரை இந்த முஸ்லிம் கட்சிகள் அவமதிப்பதாகவே தெரிகிறது. 

ஆகவே பௌத்த பிக்குகள்; அடிப்படையில் அரசியலை துறந்த துறவிகள் என்பதால் அவர்கள் பாராளுமன்றம் மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை தடுக்க பௌத்த மக்கள் விரும்பினால் அதனை தடை செய்ய முனையலாமே தவிர அவர்கள் செய்யும் தவறுகளுக்காக ஏனைய சமயத்தலைவர்களையும் கட்டுப்படுத்த முனைவது ஏனைய சமயங்களின் உரிமைகளை மீறும் செயல் என்பதால் இதற்கான நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது என முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார். 


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar