BREAKING NEWS

எகிப்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஹம்மத் முர்சி அவர்களுக்கு அகில இலங்கை உலமா கட்சி வாழ்த்து


எகிப்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஹம்மத் முர்சி அவர்களுக்கு அகில இலங்கை உலமா கட்சி வாழ்த்துச்செய்தி அனுப்பி வைத்துள்ளது. உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் அனுப்பி வைக்க்ப்பட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


தங்களின் வெற்றி என்பது நீதிக்கும் நியாயத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்படுகின்றது. அநீதி எத்தனை காலம் அடக்குமுறையுடன் ஆட்சி செய்தாலும் என்றாவது ஒரு நாள் நீதிக்கு வெற்றி கிடைத்தே தீரும் என்பதை இந்தத்தேர்தல் வெற்றி சுட்டிக்காட்டுகிறது.

முஸ்லிம்களை மிகப்பெரும்பான்மையாகக்கொண்ட இஸ்லாமிய புராதண வரலாறு கொண்ட எகிப்தை அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு அடிபணியாத சுயமரியாதையும், இறைமையும் கொண்ட நாடாக மாற்றி அந்நாட்டு மக்களின் சமய விழுமியங்களின் அடிப்படையிலான நீதிமிக்க நாடாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை சுமார் 80 வருடங்களின் முன்பு இஸ்லாமிய அறிஞர்களினால்  விதைக்கப்பட்டது. இதன் காரணமாக இமாம் ஹசனுல் பன்னா, அறிஞர் சைய்யித் குதுப் போன்ற சிந்தனையாளர்கள் பலர் தமது வாழ்வை தியாகம் செய்தனர்.  ஆயிரக்கணக்கான சகோதரர்கள் சிறையிலடைக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். ஆனாலும் ஆயுதப்போராட்டம் இன்றி ஜனநாயக ரீதியில் நீதியை நிலைநாட்ட முடியும் என்ற தொடர்ச்சியான போராட்டத்துக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது.

அத்துடன் எகிப்திய சமூகவாதிகளான இஸ்லாமிய அறிஞர்களின்  தியாகத்துக்கும் சிந்தனைக்கும் இத்தனை வருடங்களின் பின்னரே வெற்றி கிடைத்துள்ளமை நீதிக்கும், சமயம் சார்ந்த புத்திஜீவிகளின் போராட்டத்துக்கும் என்றாவது ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும் என்பதையே உலகுக்கு காட்டியுள்ளது.

எனவே தங்களது ஆட்சியில் எகிப்திய முஸ்லிம்களின் தன்மானம் காப்பாற்றப்பட்டு அனைத்து மக்களுக்கும் நீதியான, சமாதானமான வாழ்வு கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறோம் என முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar