BREAKING NEWS

தமிழர் போராட்டத்தில் பங்களிக்காது தீர்வில் முஸ்லிம்கள் பங்கு கோருவது நியாயமற்றது?


தமிழர் போராட்டத்தில் பங்களிக்காது தீர்வில் முஸ்லிம்கள் பங்கு கோருவது நியாயமற்றது என்ற ஜனநாயக மக்கள் முன்னணியன் தலைவர் மனோ கனேசனின் வார்த்தை மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக்  அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 


நமது நாட்டின் தேசிய இனப்பிரச்சினையின் பரிணாமம் மற்றும் தமிழ் மக்களின் எதிர் பார்ப்புக்கள் எவை, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் எவை அவற்றுக்காக அவர்கள் வேண்டி நிற்கும் தீர்வுகள் என்ன என்ற எதனையும் புரிந்து கொள்ளாமல் திரு. மனோ கனேசன் பத்திரிகை எதனையும் படிக்காத ஒரு சராசரி பொதுமகன் போன்று கருத்துத்தெரிவித்துள்ளமை கவலைக்குரியதாகும்.

முஸ்லிம்கள் ஒரு போதும் தமிழர்களுக்கு மட்டுமுரிய போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை. ஒரு காலத்தில் தமிழர்கள் தமக்காகவுமே போராடுகிறார்கள் எனநினைத்து அவர்களுடன் இணைந்து தமது உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்து பின்னர் தமிழ் போராளிகளாலேயே முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட வரலாறு என்பது புராதண வரலாறு அல்ல மாறாக நவீன வரலாறாகும்.

இந்த வரலாற்று பின்னணிகள் புரியாமல் கத்துவதில் எந்த நன்மையும் விழையப்போவதில்லை. தமிழர்களுக்கான தீர்வில் முஸ்லிம்கள் எந்தவொரு பங்கையும்  கேட்கவில்லை என்பதை திரு. மனோ கனேசன் போன்றோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மாறாக, முஸ்லிம்களின் தாயகத்தை அதாவது முஸ்லிம் சமூகத்தையும் அவர்களின் வாழ்விடங்கள் மற்றும் நில புலங்களை தமிழர்களுக்கு வழங்கும் தீர்வுத்திட்டத்துக்குள் உள்ளடக்கி விட வேண்டாம் என்பதுதான் முஸ்லிம் மக்களின் கோரிக்கையாகும். இந்த உண்மையை பகிரங்கமாக எடுத்துச்சொல்ல பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் என சொல்வோர் அச்சப்பட்டாலும் நாம் இவற்றை  1990களில் இருந்தே பகிரங்கமாக எழுதி வருகிறோம். 

வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களுக்கும், உரிர்களுக்குமான அச்சுறுத்தலை முதலில் எதிர் நோக்கியது சிங்கள பேரினவாதத்தினால் அல்ல, மாறக தமிழர் மேலாதிக்கம் காரணமாகவே என்பது புரியப்பட வேண்டும்;. சிங்கள பேரினவாதம் காரணமாக முஸ்லிம் சமூகம் இழந்ததை விட தமழ் பேரினவாதத்தினாலேயே முஸ்லிம்கள் அதிகம் இழந்தள்ளார்கள். வடக்கிலும் மட்டக்களப்பிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பல்லாயிரக்கனக்கான காணிகள் இன்னமும் மீள கையளிக்கப்படவில்லை என்பதுடன் அவர்கள் சுதந்திரமாக மீள குடியேறவும் முடியாமல் உள்ள சூழ் நிலையில் இதற்காக மனோ கனேசன் போன்றோர் எத்தகைய அழுத்தங்களையும் தமிழ் மக்களுக்கு கொடுக்காத நிலையில் இவற்றை மீளப்பெற சிங்கள அரசாங்கத்தையே முஸ்லிம்கள் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய துரதிஷ்டமான நிலையில் எவ்வாறு தமிழர்களின் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க முடியும் என்று கேட்கிறோம்.

தமிழ் மக்களுக்கு தனிஈழமே வழங்கப்பட்டாலும் அதற்கு முஸ்லிம்கள் தடையில்லை. ஆனால் அதற்குள்  முஸ்லிம்களின் தாயகம் உள்ளடக்கப்படக்கூடாது என்பதுதான் முஸ்லிம்களின் உறுதியான கோரிக்கையாகும். ஒன்றில் முஸ்லிம்களின் தாயகம் சிங்கள அரசுடன் இணைந்திருக்க வேண்டும். அல்லது ஐக்கிய இலங்கைக்குள் முஸ்லிம்களுக்கான தனியான நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
சிங்கள பேரினவாதத்தினால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பாரிய இன்னல்களை எதிர் நோக்கும் இன்றைய நிலையிலும் முஸ்லிம்களுக்கு வடக்கிற்கு தனியாகவும் கிழக்கற்கு தனியாகவும் நிர்வாக அலகுகளை வழங்க நாம் தயார் என எந்தவொரு தமிழ் கட்சியும் பகிரங்கமாக சொல்ல முன்வராத நிலையில் எதனை நம்பி தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் போராடுவது என மனோ கனேசன் சொல்வாரா?

ஆகவே அதிகாரப்பகிர்வு எனும் போது முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அதிகார பிரிவு, மற்றும் வடக்கு கிழக்கில் தமிழர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் மீளக்கையளிப்பு போன்றவற்றுக்கு முதலில் தமிழ் கட்சிகளிடமிருந்து பகிரங்க உத்தரவாதமும் தீர்வும் கிடைக்காத வரை முஸ்லிம் சமூகம் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக இணைந்து போராடுவது பற்றி பேசுவது தற்போதைக்கு அர்த்தமற்றதாகும் என்பதை உலமா கட்சி தெளிவாக சொல்லிக்கொள்கிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar