BREAKING NEWS

வியாபார நிறுவனத்தை பதிவு செய்வதில் கல்முனை மாநகர சபையின் கெடுபிடிகள். உலமா கட்சி கடிதம


வியாபார நிறுவனம் ஒன்றை பதிவு செய்வது சம்பந்தமாக கொழும்பில் கூட இல்லாத நடைமுறைகளை கல்முனை மாநகரசபை கடைப்பிடிப்பதன் மூலம் வியாபாரிகளை நசுக்க முனைவதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். 
கல்முனை மாநகர மேயருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது


வியாபாரம் ஒன்றை பதிவு செய்தல் சம்பந்தமாக கல்முனை மாநகர சபையினால் அமுல்படுத்தப்படும் பல சட்டங்கள்; வியாபாரத்தில் ஈடுபட முனையும் ஒருவருக்கு பல அசௌகரியங்கள் ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.

மேல் மாகாணத்தை பொறுத்த வரை குறிப்பாக கொழும்பில் ஒருவர் தனது வியாபார ஸ்தலத்தை பதிவு செய்து வியாபார அனுமதிப்பத்திரத்தை ஒரே நாளில் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக விதிக்கப்படும் நிபந்தனை என்பது குறிப்பிட்ட இடத்தில் வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக உரிமையாளர் குறிப்பிடுவது மட்டும்தான். 

ஆனால் கல்முனையை பொறுத்த வரை வியாபார அனுமதி பத்திரம் பெறுவதாயின் முதலில் மாநகர சபை அனுமதி பெற வேண்டும். அதன் பின்பே வியாபார அனுமதி பத்திரம் பெற வேண்டும் என்ற நடைமுறையை காண்கிறோம். அத்துடன் காணி உறுதிப்பத்திரம், கிராம சேவகர் சான்றிதழ் மட்டுமல்லாது சமுர்த்தி உத்தியோகத்தரிடம் கூட சான்றிதழ் பெற வேண்டும் என்று நிபந்தனை இடப்படுகிறது. 

பல லட்சம் மக்கள் வாழும் கொழும்பில் கூட இல்லாத இத்தகைய சட்டங்கள் வேண்டுமென்றே கல்முனை மாநகர அதிகாரிகளால் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது எமக்குத்தெரியவில்லை. ஆனாலும் பேரினவாதம் முஸ்லிம் வியாபாரிகளை நசுக்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினர் ஆட்சி செய்யும் கல்முனை மாநகர சபையும் இத்தகைய கெடுபிடிகள் மூலம் மறைமுகமாக பேரினவாதத்துக்கு துணை போகின்றதா என்று கேட்க விரும்புகிறோம். 

ஆகவே அரச சேவைகள் மக்களின் காலடிக்கு செல்ல வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட கல்முனை மாநகர சபை தனது மக்களான வியாபரிகளை நசுக்கும் சட்டங்களை தளர்த்தி ஒரே நாளில் வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை கொழும்பைப்போன்று கொண்டு வர வேண்டும் என தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.


மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
அகில இலங்கை உலமா கட்சி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar