BREAKING NEWS

மன்னாரில் நடைபெற்ற சம்பவங்கள் அரசாங்கமே இதற்கு பொறுப்பேற்க வேணடும் - உலமா கட்சி


மன்னாரில் நடைபெற்ற மற்றும் நடைபெறுகின்ற சம்பவங்கள் மீள் குடியேறும் விடயத்தில் அரசாங்கம் காட்டிய அசமந்தத்தினால் ஏற்பட்டவை என்பதால் அரசாங்கமே இதற்கு பொறுப்பேற்க வேணடும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


யுத்தம் முடிவுற்று மூன்ற வருடங்களாகியும்; மீள் குடியேறிய முஸ்லிம்கள் இன்னமும் இருக்க இடமில்லாமல் தமது வாழ்வாதார பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள் என்றால் அதற்குரிய முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் பாரிய கஷ்டங்களுக்கு மத்தியில் புத்தளத்தில் வாழ்ந்த போது அவர்கள் தமது பிரதேசங்களுக்கு மீண்டும் குடியேற வேண்டும் என அரசாங்கம் பலவந்தப்படுத்தியது. மீள் குடியேறாவிட்டால் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் எனவும் அச்சுறுத்தியது. முஸ்லிம்களின் முன்னைய வாழ்விடங்கள் காடு நிரம்பிக்கிடப்பதாலும், பல இடங்களை பலரும்  ஆக்கிரமித்திருந்ததாலும் அவை மீளப்பெறப்பட்ட பின்பே முஸ்லிம்கள் குடியேற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டதன் காரணமாக மன்னார் முஸ்லிம்கள் இன்று பாரிய துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். 

அத்துடன் வட மாகாண மக்கள் பிரதிநிதியான அமைச்சர் ரிசாத் பதியுதீனிடமிருந்து மீள் குடியேற்ற அமைச்சு பறிக்கப்பட்டதன் மூலமும் வட மாகாண முஸ்லிம்கள் அனாதரவற்ற நிலைக்குத்தள்ளப்பட்டார்கள். இவ்வாறு மன்னார் மாவட்ட முஸ்லிம்களை அந்தரத்தில் அரசாங்கம் விட்டு விட்டதால் அவர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அதில் அரசாங்கம் குளிர்காய நினைக்கின்றதா என்று நாம் சந்தேகிக்கிறோம். 
அன்மையில் மன்னாரில் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான ஒரு பக்க பார்வை, மற்றும் அவர்கள் மீதான தாக்குதல், நீதி மன்றம் தாக்கப்பட்டமை என்பன கவலைக்குரியதாகும். இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உலமா கட்சி இச்சந்தர்ப்பத்தில் தனது அனுதாபத்தை தெரிவிக்கும் அதே வேளை ஆர்ப்பாட்டக்காரர்களை சுடுமாறு நீதிவான் சொல்லியும் அதனை கருத்தில் எடுக்காத பொலிசாருக்கு உலமா கட்சி நன்றி சொல்லிக்கொள்கிறது. அதே போல் தான் நீதிபதியை அச்சுறுத்தவில்லை என அமைச்சர் ரிசாத் பகிரங்கமாக கூறிய பிறகும் அவர்மீது சட்டத்தரணிகள் பழி போடுவது தனிப்பட்டவகையில் அவரை அசௌகரியத்துக் குள்ளாக்கும் முயற்சியாகவே தெரிகிறது. 

ஆகவே இவை அத்தனைக்கும் காரணம் அரசாங்கம் மீள் கடியேறிய முஸ்லிம்களுக்குரிய வசதி வாய்ப்புக்களை சரியாக வழங்காததேயாகும். இதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு மீள்குடியேறும் வட மாகாண முஸ்லிம்களின் நலன்களை கவனிக்கும்  தனியான பிரிவொன்றை உடனடியாக ஏற்படுத்தி அதன் பொறுப்பாளராக அமைச்சர் ரிசாத் பதியுதீனை நியமிக்கும்படி உலமா கட்சி அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது. 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar