BREAKING NEWS

வெற்றிலைக்கும் அரசின் அடிமையாக இருக்கத்துடிக்கும்; மரத்துக்கும் வாக்களிப்பதை தவிர்த்து புதியதோர் மாற்றத்துக்ககான வழியை கிழக்கு முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்


தேர்தல் காலம் தவிர ஏனைய நாட்களில் கிழக்கு மாகாண மக்களால் எளிதில் சந்திக்கமுடியாத ஹக்கீம், அதாவுள்ளா போன்றோரை நிராகரிக்கிறோம் என்ற செய்தியை கிழக்கு மாகாண மக்கள் இந்தத்தேர்தல் மூலம் தெரிவிக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.  தம்மை சந்தித்த கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 


கொடியேற்றப்பள்ளி விழாவுக்கு வரும் பம்பாய் மிட்டாய்காரனைப்போல் சிலருக்கு தேர்தல் வந்ததும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இந்த உலகில் வாழ்கிறார்கள் என்பது தெரிகிறது. பின்னர் தமது வியாபாரம் முடிந்ததும் அடுத்த தேர்தல்வரை பொது மக்களால் அவர்களை இலகுவில் சந்திக்கவே முடியாது. இவர்களை எப்படி சந்திக்கலாம் என கொழும்புக்கு வந்து அலையாய் அலையும் பலரை நான் கொழும்பு மருதானையில் தினமும் சந்தித்திருக்கின்றேன்.

ஹக்கீம் கடந்த 12 வருடங்களாக முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இந்த கால எல்லைக்குள் கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் இவரால் பெற்ற ஒரு சமூக நன்மையை எவராவது எடுத்துச்சொன்னால் இன்றே நாம் எமது கட்சியை கலைத்து விடவும் தயாராக இருக்கிறோம். இது வரை எத்தனை தேர்தல்கள் வந்து விட்டன. அவற்றிலெல்லாம் மக்களை உசுப்பேற்றி வாக்குகளை பெற்றுச்செல்லும் இவர் தேர்தல் வந்தால் மட்டுமே வருவார் என்பது தெரிந்தும் மக்கள் இன்னமும் யதார்த்தத்தை புரியாமல் இருப்பது கவலைக்குரியது. 

அதே போல் தேர்தல் மேடைகளில் மட்டுமே காணக்கூடிய ஒரு ஏமாற்று அரசியல்வாதியாகவே  அதாவுள்ளாவும் இருக்கிறார். அவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவராக இருந்தும் அவரின் கல்முனை ஆதரவாளர்கள் கூட அவரை இலகுவில் சந்திக்க முடியாத நிலையே உள்ளது. அவரது கட்சியில் தேர்தலில் போட்டியிட்டவர்கள் கூட பல்லாயிரம் பணம் செலவு செய்து கொழும்பில் தவம் கிடந்து பின்னர் ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என திரும்பிச்செல்வதை காணலாம்.

நாம் இவ்வாறு அரசியல்வாதிகள் பற்றி விமர்சிக்கும் போது சிலர் எம்மை தவறாக எடை போடுகின்றனர். இவ்வாறு எமது மக்களை எமது கண் முன்பாக அரசியலின் பெயரால் ஏமாற்றுவதை முஸ்லிம் சமயத்தலைவர்களின் தலைமையிலான எமது கட்சி சுட்டிக்காட்டாமல் இருந்தால் அது இறைவனுக்கு பொருத்தமானதாக அமையுமா என கேட்கின்றோம். இத்தகைய ஏமாற்றுக்காரர்களை சுட்டிக்காட்டாமல் இருப்பதைத்தான் இஸ்லாம் விரும்புகிறது என்நோ என உலமா சபை குர்ஆன் ஹதீத் கொண்டு நிரூபித்தால் நாம் மௌனமாக இருக்கத்தயார் என்பதை பகிரங்கமாகவே இங்கு நாம் குறிப்பிடுகின்றோம். 
கடந்த காலங்களிலும் நோன்புகள் வந்தன. ஒரு நான்கு பேருக்குக்கூட இப்தார் கொடுக்காத எமது அரசியல்வாதிகள் இப்போது லட்சக்கணக்கில் செலவு செய்து இப்தார் வழங்கி தமது அரசியல் சுயநலனுக்காக இப்தாரையும் பணன்படுத்தும் நிலையை காண்கிறோம். இதற்காக செலவிடப்படும் லட்சக்கணக்கான பணத்தில் சுனாமியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு வீடில்லாத மக்களுக்கு குடிசைகளையாவது கட்டிக்கொடுக்கலாம் அல்லவா? ஆக இத்தகைய அரசியல்வாதிகளின் ஏமாற்றுக்காக இப்தாரும் பலியாகிக்கொண்டிருக்கிறது.  

ஆகவே, கிழக்கு மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி அவர்களின் சமூக பற்றை தமது சுயநலன்களுக்காக பாவிக்கும் ஹக்கீம், அதாவுள்ளா போன்ற அரசியல்வாதிகளுக்கு கிழக்கு மக்கள் பாடம் கற்பிப்பதற்குரிய அருமையான சந்தர்ப்பம்தான் இந்த மாகாண சபை தேர்தலாகும். இதனை பயன்படுத்தி வெற்றிலைக்கும் அரசின் அடிமையாக இருக்கத்துடிக்கும்; மரத்துக்கும் வாக்களிப்பதை தவிர்த்து புதியதோர் மாற்றத்துக்ககான வழியை கிழக்கு முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும் என முபாறக் மௌலவி குறிப்பிட்டார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar