BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசின் அமைச்சராக இருக்கும் நிலையலேயே மூதூரில் சிலை வந்தது போல் எல்லா ஊர்களுக்குள்ளும் சிலை வரலாம்


முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளியாக இருக்கும் நிலையிலேயே ஒரு சிங்களவரும் வசிக்காத மூதூர் ஜபல் மலையில் புத்தர் சிலையை அரசாங்கம் வைக்கிறதென்றால் முஸ்லிம்கள் எவ்வாறு இந்த அரசாங்கத்தையும், அதன் பங்காளியான முஸ்லிம் காங்கிரசையும் நம்ப முடியும்? என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பினார். 

மருதமுனை கடற்கரை வெளியில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் சுவிஸ் சித்தீக் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரமாண்டமான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ஐ தே கவின் பிரதி தலைவரும் அடுத்த ஜனாதிபதியுமான சஜித் பிரேமதாச, பிரதம அதிதியாக வருகை தந்த இம்மேடையில் முபாறக் மௌலவி மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கம் அவசரமாக நடத்துவதற்கு பிரதான காரணம் இந்த மாகாண தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் இருக்கிறார்கள் என்பதை காட்டத்தான். முஸ்லிம் சமூகத்தின் கட்சிகள் ஏற்கனவே அரசாங்கத்துடன் இருப்பதால் முஸ்லிம்கள் இந்த அரசுக்குத்தான் ஆதரவு என்பது காட்டப்பட்டாயிற்று. ஆனாலும் பள்ளிவாயல்கள் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னரும் முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்துடன் இருக்கின்றார்களா என்பதை சர்வதேசம் எதிர்பார்க்கிறது. 
இந்த மாகாண சபை கலைக்கப்பட்டதும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு” என்ற பெயரில் கூட்டணியாக இயங்குவதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதையும் முஸ்லிம் முதலமைச்சர் போன்ற உரிமைகளை  எந்த தடையும் இன்றி பெறலாம் என்பதை சுட்டிக்காட்டி இத்தகைய கூட்டமைப்புக்கு உருவாக்கப்படுமானால் அதற்கு ஆதரவளிக்க உலமா கட்சி தயார் என நாம் ரஊப் ஹக்கீமக்கு எழுத்து மூலம் அறிவித்தோம். ஆனால் சமூக நலன் பற்றி சிந்திக்காத அவர் எமது கோரிக்கைக்கு பதில் தரவில்லை. 
இந்த சூழ்நிலையில் அஸாத் சாலியின் அழைப்பின் பேரில் நானும், ஸ்ரீ ரங்காவும் கொழும்பில் அஸாத் சாலியின் வீட்டில் கூடி கிழக்கு தேர்தலில் “தமிழ் முஸ்லிம் கூட்டணி” ஒன்றை களமிறக்குவது பற்றி ஆலோசித்தோம். இவ்வேளையில் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டணி அமைப்போம் என அஸாத் சாலி வலியுறுத்தினார். இதற்கு நான் உடன் படவில்லை. வடக்கு கிழக்கு பிரிப்பு விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு இன்னமும் விட்டுக்கொடுக்காததால் அதனுடன் இணைய முடியாது எனக்கூறினேன். இந்தக்கருத்திலேயே ரங்காவும் உறுதியாக இருந்தார். ஐ தே கவுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என்பது ரங்காவின் கருத்தாக இருந்தது. இன்றைய சூழலில் அரசையும் அரசின் பங்காளிகளான அதாவுள்ளா, ஹக்கீம் ஆகயோரையும் நிராகரிக்க வேண்டுமென்றால் இதுவே சரியான தீர்வு என்பதில் நானும் உடன்பட்டேன். 
ஆனால் வேட்பு மனுவில் ஒருவர் அதிகமாக கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக மு. கா தனித்து களமிறங்கியதால் அஸாத் சாலி அதில் இணைந்து கொண்டார். தமிழ் முஸ்லிம் கூட்டணி என்பது அம்போவாகி விட்டது. எத்தனையோ பள்ளிவாயல்கள் அச்சுறுத்தப்பட்ட பேதெல்லாம் தனித்து களமிறங்கப்போவதாக தீர்மானம் எடுக்காத மு. கா, ஒரு வேட்பாளருக்காக தனித்து இறங்கியது வேடிக்கையாக இருந்தது.  
எம்மை பொறுத்தவரை நாம் இந்த ஜனாதிபதிக்கு ஆதரவாக 2005ம் ஆண்டு முதல் செயற்பட்டு வருபவர்கள் என்பது உலகறிந்த விடயம். இந்நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சகல சமூகங்களும் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதற்காக நாம் ஆதரித்தோம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால் இந்த வெற்றி என்பது தனி சிங்கள வெற்றியாக காட்டப்பட்டு முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வை காட்டத்தொடங்கியதால் நாம் அரசிலிருந்து ஒதுங்கினோம். இன்று சிலர் கேட்கிறார்கள் நாம் கட்சி மாறி விட்டோமா என்று. இல்லை . நாம் உலமா கட்சியில் இருந்து கொண்டேதான் ஐ தே கவுக்கு இந்த தேர்தலில் ஆதரவு வழங்குகிறோம். இதுவும் மறைந்த தலைவரின் வழிகாட்டல்தான். அவர் முதலில் தமிழ் கூட்டணியுடன் இருந்தார். பின்னார் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீமாவை ஆதரித்தார். திடீரென பிரேமதாசாவை ஆதரித்தார். அதன் பின் சந்திரிக்காவை ஆதரித்தார். இறுதி நேரத்தில் ஐ தே கவை ஆதரிக்கப்போவதாக சூட்சுமமாக தெரிவித்திருந்தார்.
ஆகவே நாம் ஒன்றைக்கேட்கின்றோம். முஸ்லிம்களுக்கு இந்த அரசில் இத்தனை அறியாயங்கள் நடக்கும் போது நாம் அரசுடன் தொடர்ந்து இருந்தால் நீங்கள் எம்மைப்பார்த்து என்ன கே;பீர்கள்? உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் உலமாக்களா? இந்த அநியாயங்களை எதிர்ப்பதில்லையா என கேட்பீர்கள். நாம் அரசிலிருந்து வெளியேறி வந்து இப்பொழுது உங்களிடம் கேட்கிறோம். உங்களுக்கு வெட்கம், மானம் இருக்குமென்றால் அரசின் வெற்றிலைக்கு அல்லது ஜனாதிபதியன் பக்கட்டில் இருக்கும் ஹக்கீமின் மரத்துக்கு வாக்களிப்பீர்களா என்று? 
முஸ்லிம்கள்; வெற்றிலைக்கு வாக்களித்தாலும், மரத்துக்கு வாக்களித்தாலும் அது அரசின் கல்லாப்பெட்டிக்குள்தான் போகும். இந்த நிலையில் நாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டுமே எமது சமயத்துக்கெதிராக நடக்கும் அநியாயங்களை எதிர்க்கின்றோம் என்ற செய்தியை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் நாம் சொல்ல முடியும். அவ்வாறின்றி மரத்துக்கு வாக்களித்தால் அதுவும் அரசின் பங்காளி கட்சி என்பதால் இந்த அரசை முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்பதும் மத சுதந்திரம் இல்லை என்பது பொய் என்றுமே உலகம் கூறப்போகிறது. 
உலமாக்கள் என்றால் தொழுகை நடாத்துவதும் பாத்திஹா ஓதுவதும்தான் வேலை என சிலர் நினைக்கிறார்கள். சுமூகம் கண்முன் ஏமாற்றப்படும் போது, அரசியலின் பெயாரால் முஸ்லிம் சமூகம் வழிகெடுக்கப்படும் போது பார்த்துக்கொண்டிருப்பவர் உலமாவாக இருக்க முடியுமா? அதனால்தான் கட்சி என்ற வகையில் நாம் களத்தில் இறங்கி மக்களுக்கு தெளிவு படுத்துகிறோம். இதற்காக நாம் எமது சொந்தப்பணத்தையே செலவு செய்கிறோம். அதனால் முஸ்லிம் சமூகம் இத்தேர்தலில் ஐ தே க வின் யானைச்சின்னத்துக்கு வாக்களிப்பதால் மட்டுமே தமது சமயத்துக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்பதாதக முடியும். இல்லாவிடில் மேலும் ஐந்து வருடங்களுக்கு  கிழக்கு முஸ்லிம்களும் பாரிய அவமானங்களை சந்திக்க நேரும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசின் அமைச்சராக இருக்கும் நிலையலேயே மூதூரில் சிலை வந்தது போல் எல்லா ஊர்களுக்குள்ளும் சிலை வரலாம் என எச்சரிக்கிறோம் என சுறினார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar