BREAKING NEWS

ரஊப் ஹக்கீம் ஜனாதிபதியுடனான அமைச்சரவை கூட்டத்தில் எதுவும் பேசாது எலி போல் பதுங்கியிருப்பார்


பள்ளிவாயல்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி கிழக்கில் வீறாப்புடன் பேசும் மு. கா தலைவர் ரஊப் ஹக்கீம் ஜனாதிபதியுடனான அமைச்சரவை கூட்டத்தில் எதுவும் பேசாது எலி போல் பதுங்கியிருப்பார் என ஜனாதிபதி அவர்களால் பகிரங்கமாக கூறப்பட்டதன் மூலம் மு. கா தலைவர் ஹக்கீம் அப்பாவி கிழக்கு முஸ்லிம்களை அநியாயத்துக்கு ஏமாற்றுகிறார் என்பது வெளிச்சமாகியள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். ஐ தே க வேட்பாளர் ஸறூக் காரியப்பர் தலைமையில் கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


ஹக்கீம் கிழக்கில் ஒன்றும் கொழும்பில் ஒன்றும் பேசுபவர் என்பதை பல தடவைகள் உலமா கட்சி பகிரங்கமாக கூறியள்ளது. இந்த வகையில் பள்ளிவாயல்கள் சம்பந்தமாக இவர் ஜனாதிபதியுடன் பேசவேயில்லை என நாம் அடித்துச்சொன்னோம். ஜனாதிபதியை சந்திக்கும் போது இவைபற்றி பேசுவதற்காகவே இவருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அத்துடன் ஹக்கீம் அமைச்சராக இருந்தால்தான் அவரால் இலகுவில் ஜனாதிபதியை சந்திக்க முடியும் என்பதால் அவர் தனது பதவியை துறக்க தேவையில்லை என பசீர் சேகு தாவுதும் அண்மையில் நியாயம் கற்பித்திருந்தார். அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டு அரசை ஏசுவது இவரது மனச்சாட்சிக்கு பிழையாக தெரிந்த அதே விடயம் தலைவர் செய்தால் சரி என்ற முரண்பட்ட கூத்துக்களை இவர்களிடம் நாம் காண்பது புதிதல்ல.  

அதே நேரம் பள்ளிவாயல்கள் தாக்கப்படுகின்றன, அச்சுறுத்தப்படுகின்றன என்பதையே நாம் சொல்லி வருகிறோம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள்தான் பள்ளிவாயல்கள் உடைக்கப்படுகின்றன என பேசுகிறார்கள். இவர்களின் ஊடக செய்திகளை வைத்து எந்தவொரு பள்ளிவாயலும் உடைக்கப்படவில்லை என ஜனாதிபதி பதில் கூறியுள்ளார். உடைக்கப்படவில்லை என்பது சரியாயினும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதை ஜனாதிபதியிடம் சொல்ல முடியாத ஹக்கீமின் கட்சிக்கு மக்கள் வாக்களித்து நன்மையடைய முடியுமா என யோசிக்க வேண்டும். இவர்களுக்கு கிழக்கில் சில உறுப்பினர்கள் கிடைத்தால் உடனடியாக அரசிடம் மண்டியிட்டு சில சலுகைகளுக்காக அரசுடன் இணைவார்கள் என்பதை கிழக்கு மக்கள் பரிந்து கொள்ள வேண்டும். 

மரத்துக்கு வாக்களிப்பதன் மூலமே எதிர் காலத்தில் முஸ்லிம்கள் தமது உரிமையை பெறலாம் எனவும் இவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறாயின் இதுதான் இவர்கள் முகம் கொடுக்கும் முதல் தேர்தலா? இதுவரை எத்தனை தேர்தல்களில் இவர்கள் மக்கள் ஆணையைப்பெற்று விட்டார்கள்? அந்த ஆணைகளுக்கெல்லாம் என்ன நடந்தது? கிழக்கில் யானையை பலவீனப்படுத்தியது தவிர மக்களின் எந்தவொரு ஆணையையும் இவர்கள் கணக்கெடுக்கவில்லை. இப்போது மீண்டும் ஆணை ஆணை என்கிறார்கள். ஆணை அல்ல இனி யானைதான் தேவை என்பதை கிழக்கு மக்கள் இவர்களுக்கு சொல்ல வேண்டும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar