BREAKING NEWS

அரசாங்கம் எதிர் காலத்திலும் முஸ்லிம் காங்கிரசிடம் பிச்சை கேட்கும் நிலைமை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் அமீர் அலியை முதலமைச்சராக்குவதே சிறந்த வழியாகும்


கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருக்கும் முழு தகுதியும் உடையவர் முன்னாள் அமைச்சர் அமீர் அலியே என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,


தும்புள்ள பள்ளிவாயல் தொடக்கம் கடந்த நான்கு மாதங்களாக முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் சமயஸ்தலங்களுக்கும் எதிரான பேரினவாதிகளின் நடவடிக்கைகளாலும், அதில் ஈடுபட்டோரை கைது செய்யாத அரசின் பொடுபோக்கு தனத்தாலுமே இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்று அதனிடம் பிச்சை கேட்க வேண்டிய நிலைக்கு அரச கட்சி தள்ளப்பட்டுள்ளது. 

பள்ளி வாயல் பிரச்சினைகளில் அரசு ஒரு பக்கச்சார்பாக நடக்க வேண்டாம் என நாம் பல தடவைகள் அறிவுரை சொன்னோம். ஆனால் சிலரின் மமதை காரணமாகவும், பேரினவாதிகள் தமக்குப்போதும் என்ற நிலைமை காரணமாகவும் எமது பேச்சுக்கள் எடுபடவில்லை. இத்தகைய சூழ்நிலையிலேயே மாகாண சபை தேர்தலில் நாம் எதிர் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டி ஏற்பட்டது. ஆனாலும் தொடராக இறங்கு முகம் கொண்டிருந்த ஐ தே க இத்தேர்தலில் கொஞ்சம் நிமிர்ந்துள்ளது திருப்தியை தருகிறது.

உண்மையில் அரசாங்கம் தமிழ், முஸ்லிம் சமூகத்தை சரியாக அணுசரித்திருந்தால் கிழக்கில் இருபது உறுப்பினர்களை மிக இலகுவாக பெற்றிருக்க முடியும். இதற்க மாறாக காணிகளை ஆக்கிரமித்தல், சிலை வைத்தல், சமயஸ்தலங்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களால் தமிழ் பேசும் மக்கள் வெறுப்புற்றனர். பொதுவாக முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை தமது உடல் உயிர் என்பவற்றுக்கான அபிவிருத்தியை விட தமது மதமே முக்கியமானது என்ற உணர்வலையையே முஸ்லிம் சமூகம் இத்தேர்தலில் காட்டியுள்ளது. இதன் காரணமாக அரசாங்கம் கிழக்கில் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எது எப்படியோ அரசாங்க கட்சி கிழக்கில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் கிழக்கு முதலமைச்சராக இருக்கும் தகுதி மட்டக்களப்பு மாவட்ட ஐ ம சு கூட்டணியின் உறுப்பினரான அமீரலிக்கே உண்டு என்பதே எமது கருத்தாகும். இதனை அரசியல், கட்சி  வேறுபாட்டுக்கு அப்பால் நின்று நாம் கூற வேண்டியது அவசியமாகும். காரணம், கல்வி, மற்றும் அரசியலில் நன்கு அனுபவம் உள்ளவரான அவர் பாரிய பல சவால்களுக்கு மத்தியில் தனது தொகுதியில் அரச கட்சியை வெல்ல வைத்திருக்கின்றார்.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் கல்குடாவில் மட்டுமே அரச கட்சி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் தனிப்பட்ட வகையில் உலமாக்களை கௌரவிக்கும் தன்மை கொண்ட ஒருவராகவும் அவர் இருப்பதால் அவரது தலைமையின் கீழ் கிழக்கில் இனபேதமற்ற ஆட்சியை கொண்டு வர முடியும் என நாம் எதிர் பார்க்கின்றோம். அரசாங்கம் எதிர் காலத்திலும் முஸ்லிம் காங்கிரசிடம் பிச்சை கேட்கும் நிலைமை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் அமீர் அலியை முதலமைச்சராக்குவதே சிறந்த வழியாகும் என  முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar