BREAKING NEWS

உரிமைகள் குறித்தே பேசியது என்பது உண்மையாயின் அப்பேச்சுவார்த்தையின் ஒப்பந்த பிரதியை சமூகத்தின் முன் பகிரங்கமாக முன்வைக்க முடியமா என உலமா கட்சி சவால்


அரசுடன் பேச்சு நடத்திய போது பிரதி அமைச்சர் பதவி குறித்து பேசாமல் முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தே பேசியது என்பது உண்மையாயின் அப்பேச்சுவார்த்தையின் ஒப்பந்த பிரதியை சமூகத்தின் முன் பகிரங்கமாக முன்வைக்க முடியமா என உலமா கட்சி சவால் விடுத்துள்ளது.

    இது பற்றி உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்கும் போது முஸ்லிம்களின் எந்தவொரு உரிமைகள் பற்றியும் பேரம் பேசியதாக சரித்திரம் இல்லை என்பதை தேர்தல் காலத்தில் நாம் பகிரங்கமாக சொன்னோம். இந்த சவாலை அவர்களால் கடைசி வரை ஏற்கவே முடியவில்லை. மு. கா இது வரை பல சந்தர்ப்பங்களில் அரசை விட்டு வெளியே போவதும் வருவதுமாக இருந்துள்ளது. அப்போதெல்லாம் வெறும் சரணாகதி அரசிலையே செய்துள்ளது.
    மு. காவின் பேரம் பேசுதல் என்பது இரண்டு விடயங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஓன்று தலைவர், தவிசாளர் தவிர வேறு யாருக்கும் பதவி வழங்கக்கூடாது என்பது. மற்றது, தமது எதிராளிகள் சமூகத்துக்கு நன்மை எதையும் செய்ய விடாமல் தடுப்பது. அதாவது வைக்கோல் கந்தில் படுத்திருக்கும் பிராணி போன்ற நிலை. இவை தவிர வேறு ஏதும் கிடைக்கிறதா என்பது இறைவனுக்கே தெரியும்.
    
இன்று  கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டதைக்கூட தடுக்க முடியாத கை கட்டி வாய் பொத்தி இருக்கும் அடிமை நிலைதான் மு. காவின் பேரம் பேசுதல் சக்தியாகும்.
    இன்னும் இரண்டரை வருடங்களில் தமக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என இவர்கள் கூறுவது மக்கள் எதையும் இலகுவில் மறந்து விடுவர் என்பதை விளங்கிக்கொண்டு ஏமாற்றுவதாகும்.  2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது இனி வருங்காலங்களில் மு. கா தலைமை அமைச்சுப்பதவிகளை அலங்கரிக்காது என ரஊப் ஹக்கீம் கூறியது போன்ற கருத்தே இதுவாகும். அத்தோடு இனிவரும் காலங்களில் மு. கா தமது கட்சியின் சின்னம் தவிர்ந்த வேறு கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாது என இந்த தேர்தலின் போது ஹக்கீம் கூறியுள்ளார். அது கூட அடுத்த பொதுத்தேர்தலில் புஸ்வானமாகிவிடும் என்பது மு காவுக்கு வாக்களிக்கும் மக்களுக்கு புரியா விட்டாலும் எமக்குத்தெரியும். ஆத்துடன் இன்னும் இரண்டு வருடங்களில் பொதுத்தேர்தல் வரும் போது மு. கா அரசின் அடிமைக்கட்சியாக இருப்பதற்கான காண் நகர்த்தலே இதுவாகும். 
       அமைச்சுப்பதவிகளை பற்றி பேசவில்லை என அறிக்கை வெளியிடும் மு. காவினர் “இன்னும் சில தினங்களில் மேலும் பலமிக்க அதிகார பலத்துடன் ஹக்கீம் கிழக்கு மக்கள் முன் வருவார்” அறிக்கை விட்டிருப்பது ஹக்கீம் தனக்குரிய பதவி பலத்தை மட்டுமே அரசிடம் பேசியுள்ளார் என்பதைக்காட்டுகிறது.
ஓப்பந்தத்தை வெளியே விட்டால் இன ஒற்றுமை சீர் குலையும் என இவர்கள் சொல்வதன் மூலம் அரசியல் யதார்த்தம் தெரியாத பத்தாம் பசலிகளாக இவர்கள் உள்ளனர். முஸ்லிம்களின் உரிமைகளை வழங்கும் இப்படியொரு இரகசிய ஒப்பந்தத்தை மு. கா வுடன் அரசு செய்திருந்தால் இந்நேரம் ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாதக்கட்சிகள் அரசுக்கெதிராக மிகப்பெரும் போர்க்கொடியை தூக்கியிருப்பார்கள். அவர்கள்  அமைதியாக இருப்பதிலிருந்தே இது முஸ்லிம் மக்களை ஏமாற்ற சொல்லப்படும் வார்த்தை என்பதை அவர்கள் புரிந்து வைத்தள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக தாம் ஏமாற்றப்படுவதை தவிர்ப்பதாயின் மாற்றுவழியாக உலமாக்கள் தலைமையிலான புதிய அரசியல் சிந்தனையின் பால் வர வேண்டும்.  
    
ஆக முஸ்லிம்களின் எந்தவொரு உரிமைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் அரசிடம் பேசி வெல்ல வில்லை என்பதையும் அரசிடம் பதவிகளுக்காக அடிமையாகி சரணாகதி அடைந்துள்ளது என்பதையும் உலமா கட்சி உறுதியாக கூறிக்கொள்கிறது. 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar