BREAKING NEWS

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது என அம்பாரை மாவட்ட உலமா சபைத்தலைவர் மௌலவி ஆதம்பாவா கூறியிருப்பது காலம் கடந்த ஞானம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது என அம்பாரை மாவட்ட உலமா சபைத்தலைவர் மௌலவி ஆதம்பாவா கூறியிருப்பது காலம் கடந்த ஞானம் என்பதுடன் ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமான செயலாகுமாகும் என அகில இலங்கை உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,


ஸ்ரீ. மு. கா கிழக்கில் தழிழ் கூட்டமைப்புடன் இணையவில்லை என்பதை விட பள்ளிவாயல் உடைப்பு, காணிப்பிரச்சினை, சிலை வைத்தல் போன்ற பிரச்சினைகளை அரசுக்கெதிராக குற்றம் சுமத்தி விட்டு அவற்றுக்கான எத்தகைய தீர்வுகளும் கிடைக்காத நிலையில் அரசுக்கு ஆதரவளித்ததைத்தான் நாம் துரோகமென காண்கிறோம். 

தேர்தல் காலத்தில் அரசை கடுமையாக சாடிய ஸ்ரீ. மு.கா அரசுடனேயே சேரும் என்பதை மௌலவி ஆதம்பாவா போன்றோர் ஏன் தேர்தல் காலத்தில் சமூகத்துக்கு சொல்லவில்லை என கேட்கிறோம். இவர்கள் மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறார்கள் என நன்கு தெரிந்த நிலையிலும் அவர்களுக்கு சார்பாக நடந்து கொண்டதன் மூலம் இந்த ஏமாற்றில் மௌலவியான இவருக்கும் பங்குள்ளது என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும். முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் வெற்றியின் பின்பும் அரசுடனேயே இருப்பார்கள் என்பது தமக்கு கொஞ்சமும் தெரிந்திருக்கவில்லை என இறைவன் மீது சத்தியம் செய்து ஆதம்பாவா மௌலவி கூறுவாரா என கேட்கின்றோம். 

சில பழங்களை விற்பனை செய்யும் போது அதில் மோசமான பழங்களை மறைத்து வைத்து விற்பது ஏமாற்று என்பதையும் அவ்வாறு செய்பவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவரல்ல எனவும் போதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாரிசான ஆதம் பாவா மௌலவி அவர்கள் அரசியலின் பெயரால் ஒரு சமூகத்தையே ஏமாற்றுகிறோம் என தெரிந்து கொண்டே இலட்சக்கனக்கான முஸ்லிம்களை மு. காவினர் ஏமாற்றுகிறார்கள் என்பது தெரியாமல்தான் இருந்தாரா? சமூகத்தை ஏமாற்றி விட்டு இப்போது அதற்கு நியாயம் கற்பிப்பது கவலை தருகிறது.

தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்தால் அது ஜனநாயகத்தின் வெற்றியாகும். அதற்காக யாரும் மு. காவை புலிகள் என கூற முடியாது. ஒரு காலத்தில் புலியாக இருந்தவர்கள் அரசுடன் இணைந்து மந்திரிகளாக இல்லையா? ஆயுதம் தூக்கி அரச படைகளை கொன்றவர் இன்று ஆட்சித்தலைவருக்கே ஆலோசகராக இருப்பது மௌலவிக்குத்தெரியாதா, அத்துடன் 2002ம் ஆண்டு மு. காவினர் பிரபாகரனை சந்தித்து புரியாணி சாப்பிட்ட போது தம்மையும் புலிகள் என சொல்வார்கள் என தெரியவில்லையா? இந்த சந்திப்பை ஏன் மௌலவி கண்டிக்கவில்லை? தமிழ் செல்வன் கொல்லப்பட்ட போது நாடாளுமன்றில் அவருக்காக ரஊப் ஹக்கீம் கண்ணீர் வடித்த போது புலி என அரச தரப்பினர் கூறுவார்கள் என தெரியாமல்த்தான் அழுதாரா? அதே போல் அண்மையில் தமிழ் கூட்டமைப்பு அரசுடன் பேச்சவார்த்தைகளில் ஈடுபடும் போது தம்மையும் கூட அழைத்துச்செல்லுங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் குழந்தைத்தனமாக தமிழ் கூட்டமைப்பிடம் கெஞ்சியபோது தாமும் புலிகள் என முத்திரை குத்தப்படுவோம் என தெரியவில்லையா?
வடக்கு கிழக்கு இணைவதற்கு ஒத்துழைக்க வேண்டி வரும் என கூறியிருப்பது அரசியல் பற்றிய அறியாமையாகும். தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் முதலமைச்சரை பெற்றால் அவர் உடன்படாமல் கிழக்கை இணைக்க முடியாது என்பது சட்டமாகும். 
அதே போல் அரசாங்கத்துடன் தான் இணைவது என முடிவெடுத்தபின் தமிழ் கூட்டமைப்புடன் பேசுவதாக பந்தா காட்டி சமூகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றியது ஏன்? அமைச்சர் அதாவுள்ளா, ரிசாத் போன்றவர்கள் தாம் அரசுடனேயே இருப்பதாகவும் தேர்தலின் பின்னும் அரசுடனேயே இருப்பதாகவும் உண்மையை கூறி வாக்குக்கேட்டார்கள். ஆனால் அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்றும் பொம்மை ஆட்சி தேவையில்லை என்றும் பொய் கூறி வாக்குப்பெற்ற கட்சிக்கு வக்காலத்து வாங்கியது ஒரு nடிமளலவிக்கு சரிதானா? அதுவும் உலமா சபை என்பது கௌரவமான சபையாகும். அதன் பெயரை பாவித்து அரசியல் அறிக்கை விட்டிருப்பது அகில இலங்கை உலமா சபையின் உறுப்பினன் என்ற வகையில் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

எனது அரசியலில் நான் ஒரு போதும் அகில இலங்கை உலமா சபையின் உறுப்பினர் என்பதையோ கல்முனை உலமா சபையின் உப தலைவர் என்பதையோ பயன் படுத்தியதில்லை. அந்தளவு நான் உலமா சபையை மதிக்கின்றேன். ஆனால் ஆதம்பாவா மௌலவி, தனது அரசியல் அறிக்கைக்கு உலமா சபையின் பெயரை பாவித்தது தவறாகும். இந்த வகையில் அம்பாரை மாவட்ட உலமா சபையின் தலைவராக இவரை பிரேரித்தவனும் நானே என்பதால் எனது இரட்டிப்பு கவலையை தெரிவித்துக்கொள்கிறேன் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar