BREAKING NEWS

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நஜீப் ஏ. மஜீதுக்கு உலமா கட்சி வாழ்த்து


கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நஜீப் ஏ. மஜீதுக்கு உலமா கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளில் நிலவும் மௌலவி ஆசரியர் பற்றாக்குறையை தீர்க்க உதவும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது பற்றி அகில இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களினால் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது,

தங்களுக்கு இந்தப்பதவி கிடைத்தமை இறைவன் தங்களுக்கு வழங்கிய மிகப்பெரிய கொடையாகவே நாம் பார்க்கிறோம். முதலமைச்சர் பதவிக்காக பலரும் மோதிக்கொள்ளும் போது இதனை எதிர்பார்க்காத உங்களுக்கு இறைவன் இப்பதவியை வழங்கியதன் மூலம் உங்களால் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மைகள் பல கிடைக்க வேண்டுமென இறைவன் எதிர் பாhத்திருக்கலாம் என கருதுகின்றோம். இந்த வகையில் உலமா கட்சி தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தங்கள் பணி சிறக்க பிரார்த்திக்கிறது.

அதே வேளை நாட்டின் தேசிய பாடசாலைகளில் இஸ்லாம் மற்றும் அறபு பாடங்களை போதிக்க மௌலவி ஆசிரியர் பற்றாக்குறை மிகக்கடுமையாக நிலவுவது போன்று மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளிலும் மௌலவி ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனை நிவர்த்திக்கும் முகமாக 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட போது அன்றைய முதலமைச்சரின் அழைப்பின் பேரில் உலமா கட்சியினர் அவரை நேரடியாக சந்தித்து இதன் அவசியத்தை விளக்கிக் கூறினர். 

ஆனாலும் கிழக்கு மாகாணசபை மூலம் ஒரு மௌலவிக்கேனும் இன்று வரை ஆசிரிய நியமனம் வழங்கப்படாதது எமக்கு பெரும் கவலையை தருகிறது. பல பாடசாலைகளில் மௌலவி ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மௌலவி அல்லாதவர்களாலும், சில வேளைகளில் முஸ்லிம் அல்லாத ஆசிரியர்களாலும் இஸ்லாம் கற்பிக்கப்படுவதன்; காரணமாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சையில் இஸ்லாம் பாட பரீட்சையில் தோல்வி அடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்த நாட்டின் வரலாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக இருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள் மௌலவி ஆசிரிய நியமனத்தை பரவலாக வழங்கியதில் முன்னோடியாக உள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. தாங்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாரம்பரியத்தை கொண்ட ஒருவர் என்பதாலும் தங்களின் தந்தை நத்வதுல் புகாரி எனும் அறபு மதுரசாவை நிறுவி அதனை வளர்த்து எம்மைப்போன்ற பல மௌலவிகள் உருவாக உதவியவர் என்பதாலும் தாங்கள் சுதந்திர கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் என்பதாலும் தங்கள் மூலம் மௌலவி ஆசிரியர் பற்றாக்குறை கிழக்கு மாகாணத்தில் நிவர்த்திக்கப்படும் என நம்பகிறோம்.

ஆகவே தங்களது இந்தப்பதவி காலத்தில் இந்நியமனத்தை மாகாண சபை ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி மௌலவிமார்களின் தலைமையிலான கட்சி என்ற அடிப்படையில் நாம் தங்களை கேட்டுக்கொள்கிறோம். அது சம்பந்தமான ஒத்துழைப்புக்களை தாங்கள் கோரும் பட்சத்தில் அதற்கான முழு ஒத்துழைப்புக்களையும் தங்களுக்கு வழங்க உலமா கட்சி தயாராக உள்ளது என்பதையும் இங்கு தெரிவத்துக்கொள்கிறோம் என முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar