BREAKING NEWS

தலைவர் எவ்வழியோ அவ்வழியை பின் பற்றி உறுப்பினர்களும் தம்பாட்டுக்கு சமூகத்தை ஏலம் போட்டு விட்டார்கள்.


திவி நெகும திட்டத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்ததன் மூலம் சமூகத்தை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உண்மையான முகம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். 


திவி நெகும திட்டத்துக்கு மு. கா ஆதரவு தெரிவித்தமை சம்பந்தமான ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தச்சட்ட மூலத்தை அமுல்படுத்துவதாயின் மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட மாகாண சபைகளின் அனுமதியை நீதி மன்றம் கோரியமை மூலம் இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது மிக தெளிவாகவே தெரிகிறது. எதிர் காலத்தில் இதனால் ஏற்படப்போகும் இழப்புக்களுக்காக மக்கள் நீதி மன்றத்தை நாடும் போது தீர்ப்பளிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே மாகாண சபைகளின் அனுமதியை நீதி மன்றம் நாடியுள்ளது. 

ஆனாலும் மாகாண சபையின் அதிகாரங்களை குறைக்கும் இத்திட்டத்துக்கு கிழக்கு மாகாண சிறபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைக்குரல் என கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பது கவலை தருவதாக இருப்பினும் இது எம்மால் எதிர் பார்க்கப்பட்ட ஒன்றுதான். காரணம் முஸ்லிம் காங்கிரசை பொறுத்த வரை மேல் மட்ட உறுப்பினர்களின் பதவிகள் மற்றும் வசதிகளை மட்டுமே பிரதானமான கொள்கையாகக் கொண்ட கட்சியாகும். பதவிக்காக ஒட்டுமொத்த சமூகத்தையே விலை பேசி விற்றவர்களிடம் இத்தகைய செயல்களைத்தான் நாம் காண முடியும். 

இச்சட்டத்தின் மூலம் எதிர் காலத்தில்; காணிகள் மட்டுமல்ல ஏன் பள்ளிவாயல்களும் கூட அரசால் சுவீகரிக்கப்படலாம். அப்போது அதற்கெதிராக நீதி மன்றம் சென்றால் அந்த வழக்குகள் செல்லுபடியற்றதாகி விடும் நிலையே ஏற்படும். அத்துடன் தனி நபர்களின் உரிமைகள், அமைப்புக்களின் உரிமைகளும் இதன் மூலம் மத்திய அரசுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இத்தகைய பாரிய சதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் துணை போனதன் மூலம் தலைவர் எவ்வழியோ அவ்வழியை பின் பற்றி உறுப்பினர்களும் தம்பாட்டுக்கு சமூகத்தை ஏலம் போட்டு விட்டார்கள்.

கடந்த 12 வருடங்களாக முஸ்லிம் சமூகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசால் பாதிப்புக்களையே அடைந்து வருகிறது. மு. காவின் எத்தகைய தீர்மானங்களும் சமூகத்துக்கு நன்மை தராமல் ஒரு சில தனி நபர்களுக்கே நன்மையளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. சமூகத்தின் எந்தவொரு உரிமையையும் பெற்றுத்தர முடியாத இக்கட்சி இப்போது உரிமைகளை விற்கும் கட்சியாக மாறியுள்ளது. 

இத்தகைய நிலைமைகள் ஏற்படும் என்பதை அறிந்துதான் நாம் கிழக்கு தேர்தலின் போது அரசுக்கோ, அரசின் அடிவருடியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கோ வாக்களிக்க வேண்டாம் என மக்களுக்கு விளக்கி கூறினோம். ஆனால் மக்கள் தமது சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு ஏமாற்றுக்காரர்களின் பகட்டுக்குப்பின்னால் போனதன் காரணமாக ஏற்பட்டுள்ள இவ்வாறான நிலைக்கு வாக்களித்த மக்களும் பொறுப்புடையவர்கள் என்று கூறிக்கொள்கிறோம். இனியும் இத்தகைய ஏமாற்று அரசியல்வாதிகள் பின்னால் போவதை விடுத்து அரசியலில் உண்மையையும் நேர்மையையும் கடைப்பிடித்து சமூகத்தின் உண்மையான உரிமைக்குரலாக செயற்படும் எமது இந்தப்பயணத்தில் முஸ்லிம்கள் எம்மோடு இணைந்து செயற்பட முன் வருவதன் மூலமே ஏமாற்று அரசியலை ஒழிக்க முடியும்; என முபாறக் மௌலவி தெரிவித்தார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar