BREAKING NEWS

13வது திருத்த சட்டத்தை நீக்க அனுமதி;க்க மாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது தனிப்பட்ட சில பதவிகளுக்காக வீசப்படும் வலையாகும்


13வது திருத்த சட்டத்தை நீக்க அனுமதி;க்க மாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது தனிப்பட்ட சில பதவிகளுக்காக வீசப்படும் வலையாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

சமூக நலன் பற்றிய எந்த வித நிபந்தனையுமின்றி 18வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் காஙகிரஸ், அமைச்சுப்பதவிகளுக்காக எந்த வித நிபந்தனையுமின்றி கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு முட்டுக்கொடுத்த அக்கட்சி, பதவிகள் பறிபோய்விடும் என அச்சப்பட்டு மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் திவிநெகும சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அக்கட்சி 13வது திருத்தத்தை நீக்க அனுமதிக்க மாட்டோம் என கூறுவதை எவராவது நம்பினால் அவர் உலக மகா முட்டாள் என்பதுதான் அர்த்தம்.

13வது சட்ட மூலத்தை திருத்த அனுமதிக்க மாட்டோம் என அக்கட்சியினர் கூறுவதன் மூலம் “ஏதாவது” தந்தால் ஆதரிப்போம் என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை கொண்டுள்ளது என்பது அரசியல் அறிவுள்ளவர்களுக்கு தெரியும். இது பற்றி அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியள்ளார். முஸ்லிம் காங்கிரசுக்கு எதனை கொடுத்தால் வாலாட்டிக்கொண்டே இருப்பார்கள் என்பது அரசியல் சாணக்கியமிக்க ஜனாதிபதிக்குத் தெரியாதா? இக்கட்சியினர் நினைத்தால் ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க முடியும். ஆனாலும் இப்படி ஒரு கடிதத்தை எழுதி விட்டு அதனை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்கள் என்றால் இதன் மூலம் இவர்கள் சமூகத்தை ஏமாற்ற முனைகிறார்கள் என்பது தெளிவாக தெரிவதனால்த்தான் நாம் இதனை சுட்டிக்காட்டி பேச வேண்டியுள்ளது.

13வது திருத்தச்சட்டத்தை நீக்குவதா இல்லையா என்ற கேள்வி நாடாளுமன்றத்துக்கு வந்தால் நிச்சயம் முஸ்லிம் காங்கிரசும், ஏனைய அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளும் நிபந்தனை இன்றி ஆதரிக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar