BREAKING NEWS

கல்முனை மாநகர சபையே உலகின் மிக மோசமான மாநகர சபை என கின்னஸ் புத்தகத்தில் பதிய வேண்டிய நிலைதான் வரும்.

கல்முனை மாநகர சபை, மூன்றாவது மேயரின் தலைமையில் ஆரம்பமாகி ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் அதன் அபிவிருத்திக்கு பிரதேச அரசியல்வாதிகளே தடையாக உள்ளார்கள் என இன்றைய மேயர் சிராஸ் கூறுவது வேடிக்கையானது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கூறினார்.

கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்:
கல்முனை மாநகரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு மாநகர சபையாகும். இதன் ஆட்சியாளர்களாக அக்கட்சியின் இரண்டு மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஒருவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் மூன்றாவது மேயராக தெரிவாகியுள்ளவர் ஒரு கோடீஸ்வரராக உள்ள நிலையில் ‘இலங்கையில் அபிவிருத்தி பெறாத ஒரேயொரு மாநகர சபை கல்முனை மாநகர சபை” என கொழும்பு ஊடகவியலாளர்களை அழைத்து கூறியுள்ளார். கல்முனையை சேர்ந்த ஊடகவியலாளர்களை அழைத்து அவர்கள் மத்தியில் இவ்வாறு கூறினால் அவர்களின் யதார்த்த ப+ர்வமான கேள்விகளுக்கு தன்னால் பதிலளிக்க முடியாது என பயந்தே இவ்வாறு செய்துள்ளார்.
கல்முனை மாநகரம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு அதன் பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பொது நூலகம் ஒன்றே உதாரணமாகும். அதன் முற்றவெளி என்பது மாடுகள் மலங்களிக்கும் கழிவறையாக உள்ளது.  இத்தனைக்கும் கல்முனை என்பது மறைந்த மாமனிதர் அஷ்ரபின் சொந்த ஊராகும்.

இலங்கையிலேயே அதிகம் அபிவிருத்தி பெறாத ஒரேயொரு மாநகர சபை கல்முனையே என இன்றைய மேயர் கூறியிருப்பதன் மூலம் சுயநலனை மட்டுமே கருத்திற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் கல்முனையை வளப்படுத்த முடியாது என நாம் பல காலமாக சொல்லி வருவது ஊர்ஜிதமாகியுள்ளது. இத்தனைக்கும் அவரது கட்சித்தலைவர் அரசின் அமைச்சராக உள்ளார். அதே போல் அவரது கட்சியினர் கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு தாராளமாகவே முட்டுக்கொடுத்து இரண்டு அமைச்சர்களையும் பெற்றுள்ளார்கள். இந்த நிலையிலும் கல்முனையை அபிவிருத்தி செய்ய முடியவில்லை என கூறுவது ஆடத்தெரியாதவன் மேடை கோணல் எனக்கூறுவது போன்றதாகும்.

மு. காவை ஆட்சியில் அமர்த்தினால் கல்முனை சொர்க்கமாகும் என அக்கட்சியினர் கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலின் போது பிரசாரம் செய்தனர். சிலர் கோடிக்கனக்கில் பணம், பிரதேசம் வாதம் என்பவற்றை மக்கள் மத்தியில் விதைத்தனர். இன்னும் சிலர் தாம் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உதவிகள் மூலம் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் மக்களை ஏமாற்றினர். சுமூக பற்றுள்ள கற்றவர்களை ஒதுக்கி விட்டு பணத்துக்கும், போலிகளுக்கும் ஏமாந்த கல்முனை மக்கள் இத்தகைய ஏமாற்று அரசியல்வாதிகளை தெரிவு செய்து விட்டு இப்போது அபிவிருத்தி பெறாத மாநகர சபை சல்முனைதான் என்ற பதிலைத்தான் கண்டுள்ளார்கள்.

மக்கள் வாக்குகளை ஏமாற்றிப்பெற்ற பின் தமது மக்களையே ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உட்பட அக்கட்சிக்கு எதிராக கல்முனை மாநகர மக்கள் ஜனநாயக ரீதியிலான தமது பகிரங்க எதிர்ப்பை வீதிகளில் இறங்கி காட்ட முனையாத  வரை கல்முனை மாநகர சபையே உலகின் மிக மோசமான மாநகர சபை என கின்னஸ் புத்தகத்தில் பதிய வேண்டிய நிலைதான் வரும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar