திருகோணமலை, புல்மோட்டை மண்கிண்டிமலை பகுதியில் வாழ்ந்து வந்த 22 முஸ்லிம் குடும்பங்களும் கடற்படையினரால் விரட்டப்பட்டு அவர்களது 150 ஏக்கர் காணியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துகொண்டதால் 22 குடும்பங்களும் வீடுகளை இழந்து செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
நேற்று முன்தனம் ஞாயிற்று கிழமை கடற்படையினர் வந்து காணிகளுக்குள் புகுந்து வேலிகளை வெட்டி தள்ளி வீடுகளையும் கூரைகளையும் உடைத்து அம்மக்களை பலவந்தமாக விரட்டியடித்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடற்படையினர் வந்து இந்க முஸ்லிம் குடும்பங்களை மிரட்டி காணிகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தனர். இதனால் அச்சமடைந்த அந்த முஸ்லிம் மக்கள் உடனடியாக நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சரும் தனித்தனியே விஜயம் செய்து அந்த மக்களுக்குத் தைரியமூட்டியிருந்தனர். உங்கள் காணிகளிளிலிருந்து உங்களை வெளியேற்ற இடமளிக்கமாட்டோம். நீங்கள் அச்சமடையவேண்டாம். தைரியமாக இருங்கள் நாம் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வோம் என்று தெரிவிக்கின்றனர்;.
இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை கடற்படையினர் புகந்து வீடுகளை உடைத்து மக்களை விரட்டியடித்துள்ளனர் . அவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்ய முற்பட்டபோது பொலிசார் அவர்களின் முறைப்பாட்டை ஏற்க மறுத்து திருகோணமலை அரசாங்க அதிபர் அந்த 150 ஏக்கர் காணியையும் கடற்படையினருக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்து அங்கிருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர். தமது உiமைகளையாவது எடுத்துவர அனுமதிக்குமாறு அவர்கள் பொலிசாரிடம் கோரியபோது அந்தக் காணிக்குள் போனால் கடற்படைகாணிக்குள் உத்தரவின்றி உற்புகுவதாக கூறி கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தற்போது 22 முஸ்லிம் குடும்பங்களும் தமது வாழ்விடங்களை இழந்து உறவினர் நண்பர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக கிழக்கு முதலமைச்சர், நீதியமைச்சர், உட்பட முஸ்லிம் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.