கிழக்கு மாகாண சபையினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்து கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்த முஸ்லிம் கா ங்கிரஸ் மாகாண அமைச்சர்கள் இருவரும் குறித்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 22.05.2013ம் திகதி நடைபெற இருந்த குறித்த அமைச்சரவைக் கூட்டத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஐ.எம்.எம்.மன்சூர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகிய இருவரும் இணைந்து கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு மாகாண முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதன் பிரகாரம் கடந்த 13.05.2013ம் திகதி அவரச அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சரால் கூட்டப்பட்டது.
ஆனால் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோருடன் பிரதம செயலாளர் திரு.டீ.எம்.சரத் அபய குணவர்தன, பிரதிப் பிரதம செயலாளர் திரு.எஸ்.குமரகுரு ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
பல மணி நேரம் ஏனைய மூன்று அமைச்சர்களின் வருகையை எதிர்பார்த்திருந்தனர். முதலமைச்சர் உட்பட இன்னும் இரு அமைச்சர்கள் சமூகம் கொடுத்தால் மாத்திரமே அமைச்சரவைக் கூட்டத்தை நடாத்த முடியும் என்பதால் கோரம் இன்றி கூட்டத்தை நடாத்த முடியாது போய் உள்ளது.
அமைச்சர்கள் வருகை தராத காரணத்தினால் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை எதிர்வரும் 29.05.2012ம் திகதி பி.ப 5.00 மணிக்கு நடாத்துவதாக தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண அமைச்சரவையின் அவசர கூட்டத்தை கூட்டி பல நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அண்மையில் ஊடகங்கள் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.