ரி என் எல் தொலைக்காட்சியில் கிறேன்பாஸ் பள்ளி விவகாரம்
Posted by
aljazeeralanka.com
on
August 14, 2013
in
Politics
|
நேற்றிரவு ரி என் எல்லில் கிறேன்ட்பாஸ் பௌத்த தேரர்களுக்கும் அசாத் சாலி முஜிபுர்ரஹ்மான், வை எல எஸ் ஹமீத் ஆகியோருக்குமிடையிலான சம்பாசனை நடந்தது. இதன் போது கருத்து தெரிவித்த முஜிபுர்ரஹ்மான் ஒரு விடயத்தை நன்றாக விளக்கினார். அதாவது புத்த சாசன அமைச்சே இந்தக்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். அதே போல் ஐ தே க காலத்தில் ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு அமைச்சு இருந்தது. இப்போது இந்த அரசு எல்லா மதத்தையும் புத்த சாசன அமைச்சின் கீழ் கொண்டு வந்தது இன்னொரு காரணம் என விளக்கினார்.
பௌத்த தேரர்களின் சமாதானத்துக்கான உரை நன்றாக இருந்தது. அதே வேளை பள்ளிவாயல் தாக்குதல் சர்வதேசமயப்படுத்தப்பட்டதைக்கண்டு பயப்பட்டு விட்டார்கள் என்பது அவர்களின் பேச்சில் தெரிந்தது. அது பள்ளிவாயல் அல்ல, பௌத்தர்கள் அதனை தாக்கவில்லை என்பதை பெரிய ஹாமதுரு அடிக்கடி சொன்னார்.
பள்ளிவாயலை தாக்கியவர்கள் பௌத்த சிங்களவர்கள் அல்ல என கூறுவதில் தேரர்கள் குறியாக இருந்தனர். அப்படி என்றால் தமிழர்கள் மீது பழியை போட வருகிறார்களோ. தமிழர்கள் கொழும்பில் காவி உடுத்துக் கொண்டு போனார்களாக்கும்?
ஆனாலும் முஜிபுர்ரஹ்மான் கூறினார் அப்படி என்றால் தாக்கியவர்களை இது வரை அரசாங்கம் கைது செய்யாமல் இருப்பது ஏன் என ஒரு போடு போட்டார். பக்கத்திலிருந்த அரச தரப்பு வை எல் எஸ் கூட இதற்கு பதில் சொல்லவில்லை.
பள்ளிவாயல் என்றால் அதற்கு மினாரா இருக்க வேண்டும். இதற்கு மினாரா இல்லையே. அதனால் பள்ளிவாயல் இல்லை என போட்டோக்களுடன் தேரர்கள் நிரூபித்தனர். இதற்கு சிங்களத்தில் பதில் தர அசாத் சாலியாலோ, முஜிபுர்ரஹ்மானாலோ முடியவில்லை. அவர்கள் முழித்தது பரிதாபமாக இருந்தது. காரணம் அவர்கள் இஸ்லாம் படித்தவர்கள் அல்ல. அந்த இடத்தில் மௌலவி ஒருவர் இருந்திருந்தால் பதில் கிடைத்திருக்கும். ஆனாலும் வை எல் எஸ் ஆங்கிலத்தில், மினாரா இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மினாரா என்பது கலாச்சாரம் என ஆங்கிலத்தில் விளக்கியது நன்றாக இருந்தது. உதாரணத்துக்கு பம்பலபிட்டி பள்ளியையும் காட்டினார். சிங்களம் தெரிந்த முஸ்லிம்கள் சிங்களத்தில் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இன்னொரு விடயத்துக்கும் அனைவரும் பதிலளிக்கவில்லை. அதாவது இஸ்லாத்தை பொறுத்த வரை பள்ளிவாயல் என்பது அதன் கட்டிட அமைப்பில் அல்ல. தொழுவதற்கு ஒதுககப்பட்ட இடம் பள்ளிவாயல்தான். அத்துடன் அது பள்ளிவாயல் இல்லையாயின் ஏன் தேரர்கள் கவலைப்பட வேண்டும்? அது தான் பள்ளிவாயலின் தோற்றத்தில் இல்லையே. அதனால் நமக்கேன் என விட்டு விட வேண்டியதுதானே! பள்ளி என்று நினைத்து கல் எறிந்து விட்டு இப்போது அது பள்ளிவாயல் இல்லை வெறும் ஸ்டோர் என்பதால் ஸ்டோருக்குத்தான் கல் எறிந்தோம் என்கிறார்கள். சரியப்பா. ஒருவனின் ஸ்டோருக்கு கல் எறிந்து தாக்க இந்நாட்டு சட்டத்தில் இடமுண்டா? முஸ்லிமான நீதி அமைச்சராவது இதற்கு பதில் சொல்வாரா?
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்