கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டிற்கான நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.
மேயர் தவிர நிதிக் குழுவிற்கு ஐந்து பேரை தெரிவு செய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது.
இதன்போது ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மூவரின் பெயர்கள் முன்மொழியப்படுவதற்குப் பதிலாக ஐவரின் பெயர்கள் முன்மொளியப்பட்டதால் அவர்களிடேயே பலத்த போட்டி நிலவியது. எவரும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த இரகசிய வாக்கெடுப்பில் எஸ்.ஜெயகுமார் (16 வாக்குகள்), ஏ.எம்.றியாஸ் (14 வாக்குகள்), எஸ்.உமரலி (12 வாக்குகள்), ஏ.பறக்கதுல்லாஹ் (11 வாக்குகள்) மற்றும் ஏ.ஏ.பஷீர் (10 வாக்குளை) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்ட ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய இருவரும் இந்த வாக்கெடுப்பில் தோல்வியுற்றனர்.
இவர்கள் இருவரும் கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் தொடந்து பதவி வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று நிதிக் குழுவுக்கு தெரிவாகியுள்ள எஸ்.உமரலி, ஏ.பறக்கதுல்லாஹ் மற்றும் ஏ.ஏ.பஷீர் ஆகியோர் மேயர் சிராஸ் பதவி விலக வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்களாவர்.