அப்துல் வஹாப்-
முஸ்லிம் அரசியல் களத்தில் கடந்த வாரம்
வரை பரபரப்பான செய்தியாக இருந்து வந்த தங்களது மேயர் பதவி விவகாரம்
தங்களின் இராஜினாமாவைத் தொடாந்து தற்போது தணிந்திருக்கின்ற சூழ்நிலையில்
உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.
கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியைப்
பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்ட நிலையில் நீங்கள் உங்கள்
கட்சித் தலைமைத்துவத்துடன் மேற்கொண்ட கனவான் ஒப்பந்தத்தின் அடிப்படையில்
பதவியை கட்சியிடம் பாரமளிக்க வேண்டுமா? இல்லையா? என்பது முஸ்லிம்
ஊடகங்களில் பல வகையான வாதப் பிரதி வாதங்களைக் கிழப்பிவிட்டிருந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக உருவாகியிருந்த
பரபரப்பினைப் பார்ர்க்கின்ற போது கல்முனை மேயர் பதவி என்பதுதான் அம்பாரை
மாவட்ட முஸ்லிம் மாவட்ட அரசியலின் தலையாய இலட்சியமோ என எண்ணவும்
தோன்றியது.
ஏற்கனவே இணங்கிக் கொண்டபடி பதவியைக்
கையளிக்காமல் தொடர்ந்தும் அதில் நிலைத்திருப்பதற்கு பலவழிகளிலும் முயற்சி
செய்த நீங்கள் வேறு வழியின்றியே தற்போது இராஜினாமாச் செய்திருக்கின்றீர்கள்
என்பது எல்லோருமே அறிந்த விடயமே.!
ஊள்ளுராட்சி சட்டங்களின் அடிப்படையில் ஒரு
கட்சியினூடாக தெரிவாகும் ஒருவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்படும்
பட்சத்தில் அக்கட்சியின் மூலமாக கிடைத்த பதவியும் பறிபோய்விடும் என்ற
உறுதியான காரணத்தினாலேயே இறுதி நேரத்தில் தலைவரின் இல்லத்திற்குச் சென்று
இராஜினாமாச் செய்ய வேண்டிய இக்கட்டான நிலை உங்களுக்கு ஏற்பட்டது என்பது
உங்களுக்கும் தெரியும்.
இதுவே ஒரு பாராளுமன்றப் பதவியாக
இருந்திருப்பின் நீங்கள் இவ்வாறு இராஜினாமாச் செய்திருக்க மாட்டீர்கள்
என்பதும் இவ்வேளை அரசாங்கத்தோடு பல்வேறு பேரம் பேச்சல்களில்
ஈடுபட்டிருப்பீர்கள் என்பதும் பகுத்தறிவுக்குத் தென்படக்கூடிய எளிமையான
உண்மையாகும்.
.
இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் நடந்து கொள்வது ஆச்சர்யமான விடயமுமல்ல.
ஏனெனில் முஸ்லிம் அரசியலைப் பொறுத்த
வரையில் வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அதனை சந்தர்ப்பத்திற்கு
ஏற்றவாறு திரிவு படுத்துவதும் அல்லது முற்றாகவே மீறி விடுவதும் என்பது
வழமையான ஒரு விடயமே..!
அதிலும் குறிப்பாக நீங்கள் தற்போது
சார்ந்திருக்கும் கட்சியைப் பொறுத்தவரை வாக்கு மீறுதல் என்பது ஒரு சாதாரண
விடயமே. கட்சியின் தலைமைத்துவம் தொடக்கம் மக்களின் பெயரால் பதவிகளையும்
அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட அத்தனை பேருமே இதைத்தான் தொடர்ந்தும் செய்து
வந்திருக்கிறார்கள்.
மகா உன்னதமான தலைவரெனப் போற்றப்படும்
உங்கள் கட்சியின் மறைந்த தலைவரின் ஆரம்ப காலத்திலிருந்தே இது நடந்தேறி
வருகிறது. தலைவர் அஸ்ரப் அவர்களே தான் இந்தப் பாரம் பரியத்தை உங்கள்
கட்சிக்குள் ஆரம்பித்து வைத்தார் என்பது இப்போது எல்லோராலும் வசதியாக
மறக்கப்பட வரலாறாகவும் போய்விட்டது
1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம்
கைச்சாத்தான போது அவ்வொப்பந்தத்தில் வட கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவ
அடையாளமும் வாழ்வுரிமையும் அரசியல் எதிர்காலமும் புறக்கணிக்கப்பட்டதன்
காரணமாக ஒப்பந்தத்தை முழுமையாக உங்கள் தலைவர் அஸ்ரப் நிராகரித்தார்.
அதனை பாரியதொரு அரசியல் பிரச்சாரமாக வடகிழக்குக்கு முழுவதும் கொண்டு சென்றார்.
அதனை மூலதனமாகக் கொண்டே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் வளர்த்தெடுத்தார்.
பின்னர் இந்திய அரசாங்கத்துடன் செய்து
கொள்ளப்பட்ட ரகசியமான உடன்பாடுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் என்பன
காரணமாக எந்த ஒப்பந்தத்தை முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என
பிரச்சாரம் செய்தாரோ அதனையே அங்கீகரித்து தேர்தலிலும் போட்டியிட்டார்.
மக்களையும் வாக்களிக்க வைத்தார்.
இதிலிருந்துதான் வாக்குறுதிகளை மீறும் கட்சியின் வரலாறு தொடங்குகின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான எந்தவொரு
பேச்சு வார்த்தையிலும் முஸ்லிம்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு
தனித்தரப்பாக இடம் கிடைப்பதனை உறுதிப்படுத்தி வென்று தருவோம் என்ற
வாக்குறுதி கடந்த 30 வருடங்களாக உங்கள் கட்சியினால் நமது மக்களுக்கு
வழங்கப்பட்டு வந்தது.
1987 முதல் இது இன்று வரை நடைபெற்ற
ஏதாவதொரு பேச்சு வார்த்தைகளிலோ அல்லது ஒப்பந்தங்களிலோ முஸ்லிம்களின்
அரசியல் அந்தஸ்த்து முறையாக அங்கீகரிக்கப்பட்டு
உள்வாங்கப்பட்டிருக்கிறதா..? இல்லவே இல்லை.
அது போலவே வடகிழக்கு மக்களுக்கான அரசியல்
தீர்வாக இணைந்த வட கிழக்கிற்குள் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாண சபையை
வென்று தருவதாகவும் மக்களுக்கு உங்கள் கட்சி பலமுறை வாக்குறுதி அளித்தது.
இறுதியில் என்ன நடந்தது..?
சந்திரிகா அரசாங்கத்தில் அதிகாரத்தின்
உச்சக்கட்டத்தில் இருந்த போது அஸ்ரப் என்ன செய்தார்? வடகிழக்கின் 2/3
மக்களின் நலன்களைப் புறக்கணித்து விட்டு தனது அரசியல் அரியாசனத்தை
உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தென்கிழக்கு மாகாண சபை என்ற ஒன்றை முன்வைத்து
வடகிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறினார்.
மாத்திரமின்றி முஸ்லிம் மக்களில் மிக
மோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகமான வட மாகாண மக்களுக்கான விமோசனத்தைப்
பெற்றுத்தருவோம் என ஒவ்வொரு தேர்தலிலும் உங்கள் கட்சியினால் சொல்லப்பட்டு
வந்த வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது..?
“அகதிகள்” என்ற உத்தியோக பூர்வ அந்தஸ்த்தைக்கூட உங்கள் கட்சியினால் இது வரை அந்த மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
மாறாக அகதிகளாகவும், வாழ்க்கையின் அடி
மட்டத்திலும் இருந்தவர்களெல்லாம் உங்கள் கட்சியைப் பயன்படுத்தி மக்களின்
பெயரால் பெரும் பெரும் கோடீஸ்வரர்களாக மாறினார்கள்.
இவைகள் உங்கள் கட்சியும் அதன் தலைமைத்துவமும் அப்பாவி முஸ்லிம் மக்களை ஏமாற்றிய வரலாற்றின் ஒரு சில உதாரணங்களே..!
இது ஒருபுறமிருக்க..
உங்களைப்போன்றே கட்சியினால் வளர்க்கப்பட்டவர்கள் உங்கள் கட்சியின் காலைவாரி விடுகின்ற வரலாறுகளும் புதிதல்ல.
மறைந்த தலைவர் அஸ்ரப் காலத்தில் 1989 ஆம்
ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களை
ஓரணிப்படுத்தும் நோக்கில் இரண்டு வருட பாராளுமன்ற சுழற்சி முறை வாக்குறுதி
வழங்கப்பட்டது.
அதனை நம்பிய அம் மாவட்டத்தின் மூன்று
முஸ்லிம் பிரதேச மக்களும் அமோக ஆதரவளித்து பாராளுமன்ற பிரதி
நிதித்துவத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
கட்சியின் வாக்குறுதியை அமுல்படுத்தும்
வகையில் இரண்டு வருடத்தில் தனது பதவியை இராஜினாமாச் செய்து கையளிப்பேன்
என்று கட்சிக்கு வாக்களித்தது மட்டுமல்லாமல் பொதுமக்களின் முன்னிலையில்
சத்தியம் செய்து வாக்குறுதியளித்த ஹிஸ்புல்லாஹ் உங்களைப்போலவேதான் அந்தப்
பதவியைப் பாரமெடுத்தார்.
இரண்டு வருட முடிவில் பதவியை இராஜினாமாச்
செய்யவேண்டும் எனத் தலைமைத்துவம் கோரிய போது அதனை செய்ய மறுத்த அவர் தனது
வாக்குறுதி மீறலை உங்களைப்போலவேதான் நியாயப்படுத்தினார்.
அதற்காக நீங்கள் எவ்வாறு சாய்ந்தமருது
மக்களை உங்களின் வாக்குமீறலுக்கு துணையாக சேர்த்துக் கொண்டீர்களோ அவ்வாறே
அவரும் காத்தான்குடி மக்களை தன் துணைக்கு அழைத்துக் கொண்டு தனது வாக்கு
மீறலை நிறைவேற்றினார்.
மட்டுமன்றி நீங்கள் உங்கள் விடயத்தை
சித்தரிக்க முனைந்தது போலவே தனது ஊர் மக்களின் மீது கொண்ட பற்றின்
காரணமாகவே பதவியை இராஜினாமாச் செய்ய முடியாதிருக்கிறது என்ற ஒரு பொய்யான
தோற்றப்பாட்டை அவரும் ஏற்படுத்தியிருந்தார். உங்கள் விவகாரத்தில் கல்முனை
சாய்ந்தமருது என்ற பிரதேசவாதம் எவ்வாறு வளக்கப்பட்டதோ அவ்வாறே
காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மக்களுக்கிடையிலான பிரதேச வாதமாகவும்
அரசியல் பிரிவினையாகவும் அது மாறியது.
எனவேதான், உங்களது விவகாரம் உங்கள் கட்சிக்கோ அல்லது இந்த மக்களுக்கோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றல்ல என்று சொல்லுகின்றேன்.
இவ்வாறு கட்சிக்கு வழங்கிய வாக்குறுதியை
மீறி உங்களைப் போன்றவர்கள் கட்சிக்கு துரோகம் இழைக்கின்ற அதே நேரம்
உங்களைப் போன்றவர்களை கையாளுகின்ற விடயத்தில் கட்சி எப்படி மக்களை
ஏமாற்றியிருக்கிறது என்பதுவும் சுவாரஸ்யமான வரலாறாகும்.
உதாரணமாக கட்சிக்கும் மக்களுக்கும் அளித்த
வாக்குறுதியை ஹிஸ்புல்லாஹ் மீறிய சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராக கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போதையத் தலைவர் அஸ்ரப் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு வாக்குறுதியளித்தார். மக்களும் இதனை நம்பியிருந்தனர். ஆனால்
மீண்டும் ஒரு பாராளுமன்றத்தேர்தல் 1994 ஆம் ஆண்டு வந்தபோது அவர் செய்த
நம்பிக்கைத் துரோகம் பற்றி உங்கள் கட்சியின் தலைமைத்துவம் மிகவும்
வசதியாகவே மறந்துவிட்டது. சத்திய வாக்கினை மீறி கட்சியினை ஏமாற்றியது
மாத்திரமின்றி மட்டக்களப்பு பிரதேச மக்களிடையே நிரந்தரமான அரசியல்
பகைமையினை உண்டாக்கிய ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீண்டும் தேர்தலில்
போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கி வெற்றிபெறச் செய்தது
மாத்திரமின்றி அவருக்கு பிரதியமைச்சர் பதவியும் வழங்கி உங்கள் கட்சி
கௌரவித்தது.
ஆக மொத்தத்தில், ஹிஸ்புல்லாஹ் கட்சியையும் தலைமைத்துவத்தையும் ஏமாற்றினார். உங்கள் கட்சியும் தலைமைத்துவமும் மக்களை ஏமாற்றியது.
வாக்குறுதி மீறல், நம்பிக்கைத் துரோகம் என்ற வரலாறு அத்தோடு முடிந்து விடவில்லை.
வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து
உங்கள் கட்சியைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும்
பெருமளவில் வளர்ந்து விட்ட அதாஉல்லாஹ், அமீரலி, றிசாட் பதியுதீன்
போன்றவர்களும் இப்படித்தான் இந்தக் கட்சிக்கு துரோகம் செய்தார்கள்.
உதாரணமாக ஹிஸ்புல்லாஹ்வின் வாக்குமீறலால்
பாதிக்கப்பட்ட கல்குடா தொகுதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அதற்காக
தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறும் கோரி ஊர்ப்பள்ளிவாயல்
தலைவர்கள் மற்றும் உலமாக்கள் சகிதம் கட்சியின் தலைமைத்துவத்தை சந்தித்து
மன்றாடியே அமீரலி தேர்தலில் போட்டியிட வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டார்.
தனது விசுவாசத்தை கட்சிக்கும் மக்களுக்கும் தெரிவிப்பதற்காக நம்ப முடியாத வாக்குறுதிகளை யெல்லாம் வழங்கினார்.
‘நான் இந்தக்கட்சியை விட்டுப் பிரிந்தால்
எனது தாயோடு ஸினா செய்ததற்கு சமனான பாவமாக அது அமையும்’ என பகிரங்க
மேடையில் பிரகடனம் செய்து உங்கள் கட்சியினையும் மக்களையும் அமீரலி
நம்பவைத்தார்.
இந்தத் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வைத்
தோற்கடித்து அவர் வெற்றியும் பெற்றார். வெற்றிபெற்று ஒரு வருட
காலத்திற்குள்ளாகவே உங்கள் தலைவரையும் கட்சியையும் ஏமாற்றிவிட்டு
கட்சியிலுள்ள இன்னும் சிலரோடு சேர்ந்து கொண்டு சந்திரிகா அரசாங்கத்தில்
இணைந்து கொண்டு அமைச்சரானார்.
இவரோடு சேர்ந்து அதாஉல்லாஹ், றிசாட்
ஆகியோரும் கட்சியை ஏமாற்றிவிட்டு அமைச்சுப் பதவிகளுக்காக அரசாங்கத்தில்
இணைந்து கொண்டனர். வாழ்க்கையின் அடிமட்டத்தில் மிகவும் சாதாரண மனிதர்களாக
இருந்த இவர்களால் இந்தக்கட்சியின் மூலமாகவே இத்தனை தூரம் உயர முடிந்தது
என்ற நன்றி விசுவாசம்கூட இவர்களிடம் இருந்தது கிடையாது.
இதுதான் உங்களைப் போன்றவர்கள் கட்சியை ஏமாற்றிய வரலாறும் உங்கள் கட்சி மக்களை ஏமாற்றிய வரலாறாறுமாகும்.
இவ்வாறு வாக்குமீறிய உங்கள் கட்சியைப்
பற்றியோ கட்சியை ஏமாற்றிய உங்களைப் போன்றவர்கள் பற்றியோ நம்சமூகம் ஒரு
சிறிதும் கவலைப்பட்டதும் கிடையாது.
இத்தனை காலமாக மக்களை ஏமாற்றிய கட்சியும் வெற்றி பெற்றே வருகிறது. கட்சியை ஏமாற்றியவர்களும் வெற்றி பெற்றே வருகிறார்கள்.
எனவே உங்கள் அரசியல் எதிர் காலம் பற்றி
நீங்கள் கவலைப்படத்தேவையில்லை. நமது மக்கள் அப்பாவித் தனமாகவும் சுயநலம்
உள்ளவர்களாகவும் மறதிமிக்கவர்களாகவும் இருக்கின்ற வரை நம்பிக்கைத் துரோகம்
நிறைந்த அரசியலும் நேர்மையில்லாத அரசியல் வாதிகளும் செழிப்பாக வாழ்ந்து
கொண்டே இருப்பார்கள்.
உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக்
கொள்ளுங்கள். உங்களது விடயத்தில் எவ்வளவு தூரம் மக்கள் ஏமாளிகளாக இருந்து
வருகிறார்கள் என்பதை நீங்கள் அரசியலுக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளை
மீட்டிப்பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
இந்த வகையில் என்னுடைய சில அவதானங்களை மட்டும் இங்கே சொல்ல விரும்புகின்றேன்.
நீங்கள் அரசியல் களத்திற்கு வருவதற்கு
முன்னர் ஏனையவர்களைப் போல தீவிரமாக சமூகப் பணியில் ஈடுபட்ட வரலாறோ அல்லது
அரசியல் விவகாரங்களில் அக்கறை காட்டிய வரலாறோ உங்களுக்குக் கிடையாது.
உங்கள் பிரதேசத்தில் நடந்த ஒரு
விளையாட்டுப்போட்டி நிகழ்வுக்கு நீங்களாகவே நிதி அனுசரணை வழங்கி உங்களை
பிரதம அதிதியாக அழைக்கச் செய்தீர்கள்.
எமது அப்பாவி மகா ஜனங்களின் கவனத்தை
ஈர்ப்பதற்காகவும், பொதுமக்கள் மத்தியில் நீங்கள் ஒரு VIP எனப்போலியாகக்
காட்டிக் கொள்வதற்காகவும் அவ்விழாவிற்கு யாருமே யோசிக்காத வகையில் வருகை
தந்தீர்கள். சில இலட்சம் ரூபா செலவழித்து Helicopter ஒன்றை வாடகைக்கு
அமர்த்தி அவ்விளையாட்டு மைதானத்தில் உங்கள் குடும்ப சகிதம் வந்து
இறங்கினீர்கள்.
உங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் மக்கள்
மத்தியில் செல்வாக்குப் பெற ஆரம்பித்த ஆரம்ப கட்டங்களில் இந்திய அரசாங்கம்
வழங்கிய nஹிகொப்டரில்தான் கூட்டங்களுக்கு வந்திறங்குவது வழக்கமாக இருந்தது.
அவருக்கு இருந்த நேர நெருக்கடி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
காரணமாக அவர் இவ்வாறு செய்வது அவசியப்பட்டிருக்கலாம்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்ட
நீங்களும் “நானும் Helicopter இல் வந்து இறங்கினால் என்னாலும் அஸ்ரபைப்போல்
அரசியல் தலைவனாக செல்வாக்குப் பெறமுடியும்” என்ற கணக்குப் போட்டே நீங்கள்
இதனைச் செய்திருப்பீர்கள். மக்களின் ஏமாளித்தனம் காரணமாக உங்கள் கணக்கும்
தப்பவில்லை. உங்களின் இந்த அரசியல் முதலீடு ஒரு சில மாதங்களிலேயே உங்களை
மேயராக்கியது.
“எங்கள் மாபெரும் தலைவரும் ஹெலிகொப்டரில்
வந்தார். எங்கள் சிறாசும் Helicopter இல் வந்தார். எனவே அவரும் எங்கள்
மாபெரும் தலைவரே!” என உங்களையும் இந்த மக்கள் மாபெரும் தலைவராக்கினாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை.
கட்சியின் தலைவர் உங்களை அழைத்து ஏற்கனவே
வாக்குறுதி அளித்தபடி பதவியைக் கையளியுங்கள் எனக் கோரிய வேளை நீங்களோ
“என்னை மேயராக்கிய சாய்ந்தமருது மக்களின் விருப்பத்தை முதலில் கேட்க
வேண்டும்” எனக்கூறிவிட்டு வந்ததாக ஊடகங்களுக்கு சொன்னீர்கள். உங்கள்
கருத்து எவ்வளவு தூரம் போலித்தனமானது என்பதனை எமது சாதாரண மக்களோ அல்லது
உங்களது ஊரைச் சேர்ந்த பிரமுகர்களோ அல்லது புத்தி ஜீவிகள் என்று
சொல்லப்படுபவர்களோ புரிந்து கொள்ளவில்லை.
ஏனென்றால் சாய்ந்தமருது மக்கள் அளித்த
வாக்குகள் காரணமாக இந்த மேயர் பதவி கிடைத்தது என்ற ஒரு போலியான தோற்றப்
பாட்டைத்தான் நீங்கள் அப்போது ஏற்படுத்த முனைந்தீர்கள். இது எவ்வளவு தூரம்
உண்மைக்குப் புறம்பான கருத்து என்பதனை நடுநிலையாகவும் பகுத்தறிவோடும்
யோசிக்கின்ற எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
ஏனென்றால் மேயர் பதவி ஒன்று உருவாகுவதற்கு
முன்னர் குறித்த மாநகர சபையினை வெற்றிகொண்டாக வேண்டும். அதற்கு
சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் மாத்திரம் போதவே போதாது. மருதமுனை,
நற்பிட்டிமுனை, கல்முனைக்குடி என்று அத்தனை பிரதேச மக்களும் வாக்களித்ததன்
காரணமாகவே உங்கள் கட்சியினால் கல்முனை மாநகர சபையை வெற்றி கொள்ள முடிந்தது.
அதன் மூலமாகவே நீங்கள் மேயரானீர்கள்.
எனவே இந்த மேயர் பதவியை சாய்ந்தமருது
மக்களுக்கு மாத்திரமே உரியதாக சித்தரிக்க முனைந்த உங்கள் சிந்தனை எவ்வளவு
தூரம் தவறானதும் யதார்த்தமற்ற மற்றும் சுயநலமானதுமாகும் என்பதனை உங்களைச்
சுற்றியிருப்போர்கள் ஏன் புரியவில்லை?
இன்னுமொரு புள்ளி விபரம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா..?
நடந்து முடிந்த மாநகர சபைத் தேர்தலில்
22300 பேர் உங்களின் கட்சிக்கு வாக்களித்தனர் அத்தேர்தலில் நீங்கள்
16000விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் 6000
க்கும் அதிகமான வாக்குகள் கல்முனைப் பகுதியில் இருந்து உங்களுக்கு
கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதன்படி பார்த்தால் கல்முனையில் கிடைத்த
வாக்குகள் மிகப் பெரும் பாண்மையானவை ஏனைய வேட்பாளர்களுடன் சேர்த்து
உங்களுக்கக் கிடைத்த ஒரு விருப்பு வாக்காக இருக்கும்.
ஆக 10000 வாக்குகள் சாய்ந்தமருது பகுதியில்
இருந்து உங்களுக்கு கிடைத்திருக்கலாம். சாய்ந்தமருது மக்கள் முழுமையாக
உங்களுக்கே வாக்களித்தார்கள் என்ற உங்களின் வாதத்தின்படி மக்கள்
ஒவ்வொருவரும் தமது மூன்று விருப்பு வாக்குகளையும் உங்களுக்கே வழங்கினார்கள்
என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
ஆக ஏறத்தாள 3500 பேர் மாத்திரமே
சாய்ந்தமருதிலிருந்து நீங்கள் மேயராக இருக்க வேண்டும் என உங்களுக்கு
வாக்களித்தார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
இந்த கணிப்பீடுகளின்படி 22300 பேர்
வாக்களித்து உருவாக்கப்பட்ட சபையில் ஒரு வெறும் 3500 பேரின் ஆணையை
மாத்திரம் பெற்றுக் கொண்ட நீங்கள் பதவியினை சாய்ந்த மருது மக்களுக்கு
சொந்தமானது என கூறியது எவ்வளவு தூரம் முட்டாள்தனமானது என்பதனை நீங்கள்
தனிமையில் இருந்து சிந்தித்தால் புரிந்து கொள்வீர்கள்.
மேயர் பதவியை இரண்டு வருடத்தில்
இராஜினாமாச் செய்து கையளிக்க வேண்டும் என்ற தலைமைத்துவத்தின் கோரிக்கைக்கு
தான் இணங்கியதாகவும் ஆனால் எழுத்து மூல ஒப்பந்தங்கள் எதுவும்
செய்யப்படவில்லை எனவும் எனவே அதை நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கு இல்லை
எனவும் அண்மையில் தாங்கள் நடாத்திய பிரமுகர்கள் சந்திப்பில்
தெரிவித்திருந்தீர்கள்.
சிறாஸ் அவர்களே..!
உங்களுக்கு ஒன்று தெரியுமா..? இஸ்லாமிய
அடிப்படையிலும் சரி அல்லது நமது நாட்டின் சட்ட ஒழுங்கின்படி வாய்மூல
உடன்பாடுகளும் சட்ட பூர்வமான ஒப்பந்தங்களேயாகும். அது நீதி மன்றத்தில் கூட
செல்லுபடியாகும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பு
வாக்குறுதியை நிறை வேற்றுவதாகும்.
அது வாய்மூல உறுதி மொழியாக இருந்தாலும் சரி
அல்லது அது எழுத்து மூல ஒப்பந்தமாக இருந்தாலும் சரியே..! இந்த எளிமையான
உண்மைகள் கூட ஏன் உங்களுக்குப் புரியவில்லை என்பதை விடவும் நீங்கள்
சந்தித்து ஆலோசனை நடாத்திய உலமாக்களும் பிரமுகர்களும் ஏன் இதனை உங்களுக்கு
உணர்த்தவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
இன்னுமொரு விடயத்தையும் இங்கே
சொல்லவேண்டும். ஒரு அமானிதமாகவே மேயர் பதவியினை உங்களுக்கு சாய்ந்த மருது
மக்கள் தந்தார்கள் எனவும் எனவே அவர்களை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும்
எடுக்கமுடியாதெனவும் தெரிவித்திருந்தீர்கள். இது எவ்வளவு தூரம் கபடத்தனமான
கருத்தாக இருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களில் எத்தனை எத்தனை
பாரிய நிதி தொகையுடன் கூடிய விவகாரங்களில் நீங்களும் உங்களது சகாக்களும்
மாத்திரமே தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறீர்கள்.
உங்களது அரசியலுக்காகவும் உங்களையும்
உங்களைச் சுற்றியிருப்போரின் நலன்களை மாத்திரமே மையப்படுத்தியும் எத்தனை
விடயங்களை தன்னிச்சையாக செய்திருப்பீர்கள். அப்போதெல்லாம் இந்த ஊரு மக்களை
அழைத்து ஏன் ஆலோசனை கேட்கவில்லை?அவர்களின் கருத்துக்களுக்கு ஏன்
மதிப்பளிக்கவில்லை?
உதாரணத்திற்காக ஒரு சில விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டுகின்றேன்.
அ) உங்களின் சகாக்கள் பலருக்கு மாநகர
சபையில் உத்தியோகம் வழங்கினீர்கள். ஆனால் அவர்களோ சபையின் கடமைகள் எதனையும்
செய்யவில்லை. சம்பளம் மாத்திரமே பெற்றுக் கொண்டு உங்களது தனிப்பட்ட
காரியங்களையும், அவர்களின் சொந்த வேலைகளையும் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
ஆ) தொலைபேசி செலவுக்கான
அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவாக மாதமொன்றுக்கு 3000.00 ரூபா மாத்திரமே
உங்கள் சபை அனுமதித்திருக்கிறது. இருப்பினும் கடந்த பல மாதங்களில்
உங்களதும் உங்களது நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவரினதும் கைத்தொலைபேசிக்
கட்டணமாக மாதமொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகை சபை
நிதியிலிருந்து கட்டப்பட்டிருக்கிறது.
இ) சபைக்கு மிகவும் அவசியமான சுகாதாரத்
தொழிலாளர் நியமனம் ஒன்றினை உங்களின் உறவினரான பெண் ஒருவருக்கக்
கொடுத்திருக்கிறீர்கள். அவர் ஒருபோதும் சபையில் பணியாற்றியது கிடையாது.
மாதாமாதம் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்.
ஈ) உங்களின் பிரயாணங்களுக்கான எரிபொருள்
செலவாக பெருந்தொகை சபை நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றுள்
பெரும்பாலானவை உங்களின் சொந்தத் தேவைகளுக்கான பிரயாணங்களாகவே இருந்துள்ளன.
உ) நடைபெற்ற எல்லா வேலைத் திட்டங்களிலும் பெரும்பெரும் கொமிஷன் தொகைகள் கைமாறப்பட்டுள்ளன.
இது போன்ற பல்வேறு குற்றச் சாட்டுக்கள் உங்களது நிர்வாகம் தொடர்பில் முன்வைக்கப்படுகிறது.
இவை தவறானவை என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா..? நீங்கள் உங்கள் பதவி விடயத்தில் பேசும் அமானிதம் இந்த விடயங்களில் எங்கே போனது..?
அது போலவே பொது நிதியிலிருந்து
கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றுக்கு உங்களது தந்தையின் பெயரைச் சூட்டி உங்கள்
குடும்பத்தின் புகழை நிரந்தரமாக்க முயற்சித்துள்ளீர்கள். அது பெரும்
சர்ச்சையாகவும் மாறியிருந்தது. அமானிதத்தையும் ஊர்மக்கள் மீதான
அக்கறையையும் கொண்டவராக நீங்கள் இருந்திருந்தால் ஏன் நீங்கள் இப்போது
அழைக்கும் அந்தப் பிரமுகர்களை அப்போது அழைத்து அக்கட்டிடத்திற்கு யாருடைய
பெயரைச் சூட்டுவது பொருத்தம் என ஆலோசனை கேட்கவில்லை?
நமது மக்கள் எவ்வளவு தூரம் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இறுதியாக ஒன்றைச் சொல்லுகின்றேன்.
அரசியல் களத்தில் உங்களை அறிமுகம்
செய்கின்ற போது ‘கலாநிதி சிறாஸ்’ என்று உங்களை நீங்கள் அறிமுகம்
செய்தீர்கள். தேர்தல் காலத்தில் உங்களோடு போட்டி போடும் ஒருவர்
சட்டத்தரணியாக இருக்கிறார். எனவே அவரை மிகைக்க வேண்டும் என்ற ஒரேயொரு
தேவைக்காக சடுதியான ஒரு கலாநிதி பட்டத்தோடு நீங்கள் களத்தில் இறங்கினீ
ர்கள்.
நமது மக்கள் ஏமாளிகள் என்பது உங்களுக்கு
மிக நன்றாகவே தெரியும். எனவேதான் உங்களின் கலாநிதிப்பட்டத்தை இதுவரை யாரும்
கேள்விக்குட்படுத்தவில்லை.
கலாநிதி பட்டம் என்பது கல்வித்துறையில் உயர்வானதும் உன்னதமானதும் என்பது எல்லோருக்கும் தெரியும்
ஒரு கலாநிதி பட்டத்தைப் பெறுவதற்கு எவ்வளவு தூரம் கடுமையான உழைப்பும், ஆய்வும் தேவைப்படும் என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு, பல்கலைக் கழகங்களில் படித்து,
பட்டம் பெற்று, பிறகு அதன் பின்னர் முக்கியமான ஏதாவது துறைகளில் ஆழமான
ஆய்வுகளை மேற் கொண்டு, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து, அதற்கான
அங்கீகாரத்தை பெரும் பெரும் பேராசியர்களிடமிருந்து பெற்று, இறுதியில்
அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல் கலைக் கழகத்தில் இருந்து கலாநிதிப் பட்டத்தினைப்
பெற்றுக் கொள்வதுதான் பொதுவான நடைமுறை.இவ்வாறு கலாநிதிப்பட்டம் பெற்றுக்
கொண்ட சிலர் உங்கள் பகுதியிலும் இருக்கிறார்கள். இவ்வாறான கடுமையான
உழைப்பின் பின்னர் கலாநிதிப்பட்டம் பெற்றுக் கொண்டதன் காரணமாகவே அவர்களை
உயர்ந்த புத்தி ஜீவிகளாக நமது சமூகம் மதிக்கிறது.
ஆனால் உங்களைப் பொறுத்த வரையில் எங்கு
படித்தீர்கள்..? எங்கு பட்டப்பின்படிப்பை தொடர்ந்தீர்கள..?; எந்தத்
தலைப்பில் உங்கள் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினைச் செய்தீர்கள்..? உங்கள்
ஆய்வினை அங்கீகரித்த பேராசிரியர்கள் யார்..? உங்களுக்கு கலாநிதிப்பட்டம்
எந்தப் பல்கலைக் கழகம் எந்த ஆய்வின் அடிப்படையில் வழங்கியது..?
எந்தப்பட்டமளிப்பு விழாவின் போது உங்களுக்கு இந்த கலாநிதிப்பட்டம்
கிடைத்தது.? என்ற விடயங்களை யாருமே கேள்வியாக எழுப்பியதில்லை.
ஏன் உங்கள் பகுதியில் உள்ள படித்தவர்கள் கூட இது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
இது போன்ற கலாநிதி பட்டங்களை நம் நாட்டில் சில அரசியல் வாதிகளும் தனவந்தர்களும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றார்கள்.
ஏதோ ஒரு பெயரில் இயங்கும் சந்தேகத்திற்கு
இடமான ஒரு நிறுவனமே 40000.00 முதல் 50000.00 வரையான பணத்திற்கு கலாநிதி
சான்றிதழ்களை வழங்குகின்றது என்பது உங்களது ஊர் மக்களுக்குத் தெரியாமல்
இருக்கலாம் தெரிந்தாலும்கூட அவர்கள் அலட்டிக் கொள்ளப் போவதுமில்லை.
சிறாஸ் அவர்களே..! வாக்குறுதியை
நிறைவேற்றி பதவியை இராஜினாமாச் செய்யாவிட்டால் உங்களின் அரசியல் எதிர்காலம்
பாழாய்ப்போய்விடும் என்ற பயத்தின் காரணமுமாகவே நீங்கள் இறுதியில்
இராஜினாமாச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது எனச் சிலர் கருத்துத்
தெரிவிக்கின்றார்கள். அது தவறானது.
நமது மக்கள் ஏமாளிகளாகவும் எதையுமே
இலகுவில் மறந்து விடுபவர்களாகவும் அத்தோடு பிரதேச வாதமும் சுயநலமும்
உள்ளவர்களாகவும் இருக்கின்ற வரை வாக்குறுதியை மீறும் நபர்களின் அரசியல்
எதிர் காலத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லை. இதனை நீங்களும் புரிந்து
வைத்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன்.
இறுதியாக, அரசியல் அதிகாரங்களுக்காக பிரதேச
வாதங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமைகளைத் தகர்த்து வாக்குறுதிகளை மீறும்
நம்பிக்கைத் துரோக அரசியலைப் பொறுத்த வரையில் குற்றம்
சாட்டப்படவேண்டியவர்கள் அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்ல.
அவ்வாறானவர்களுக்கும் அது போன்ற கட்சிகளுக்கும் தொடர்ந்தும் வாக்களிக்கும்
மக்களே இதற்கு பதில் கூறவேண்டியவர்களாவர்.
இந்த மக்கள் மாறாதாதவரை இதுபோன்ற வரலாறுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
அல்லாஹ் நமது சமூகத்தைப் பாதுகாப்பானாக.
அப்துல் வஹாப்