BREAKING NEWS

மௌலவி ரியாழின் வரலாற்றுப் பதிவுகள்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ பொதுச் செயலாளராக 25 வருடங்கள் சேவை செய்த அல்ஹாஜ் எம்.ஜே.எம். ரியாழ் (கபூரி, B.A) அவர்கள் 10-12-2013 செவ்வாயன்று வபாத்தானார்கள். 1933 ஜனவரி மாதம் 23ம் திகதி கம்மல்துறையைச் சேர்ந்த முஹம்மத் ஜலால்தீன் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். பாலர் கல்வியைத் தன் ஊரில் இருந்த தமிழ் கலவன் பாடசாலையில் கற்ற அவர்கள் 15-10-1943 இல் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு கற்றுக் கொண்டிருந்த போதே சிறுவர் ரியாழுக்கு கத்னா செய்யப்பட்டது. கபூரிய்யாவில் கற்கும் வேலை மிகவும் துடிப்பும் உற்சாகமும் உள்ள மாணவராக விளங்கினார்கள். ஆசிரியர்களும் சிறியவன் ரியாழுக்கு இறக்கம் காட்டினார்கள். 
தனது 20வது வயதில் கபூரிய்யாவில் மௌலவி அல்-ஆலிம் பரீட்சையில் தேறினார். படிக்கும் காலம் சிலபோது பாட போதனைகளும் செய்தார். அங்கிருக்கையில் புத்தளம் ஸாஹிராக்  கல்லூரிக்கு இஸ்லாம், அரபு போதனாசிரியராகச் சேவையாற்ற அழைக்கப்பட்டார். அங்கிருக்கும் போது புத்தளத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற முதல் சபாநாயகருமான எஸ்.எச். இஸ்மாயீல் அவர்களோடு தொடர்புபட்டு அப்பிரதேசத்தில் தப்லீக் தஃவாப் பணியில் ஈடுபட்டார்.
31-12-1954, 1-1-1955 ஆம் திகதிகளில் தனது சொந்த ஊரான பலகத்துறையில் அகில இலங்கை ரீதியான முதலாவது தப்லீக் இஜ்திமாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டார். அதேவேளை கம்மல்துறையில் இயங்கிவந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தில் நான்கு வருடகாலம் செயலாளராகப் பணிபுரிந்தார். 
கல்வியில் ஆர்வம் கொண்ட மௌலவி ரியாழ் அவர்கள் 1957-58 களில் அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். அப்பொழுது கபூரிய்யாவில் இயங்கி வந்த பழைய மாணவ மன்ற செயலாளராக தெரிவானார். அதேநேரம் கபூரிய்யாவின் பிரசுரக்கழகச் செயலாளராகவும் செயற்பட்டார். அக்காலத்தில் 'இறையும் மறையும் மனுகுலத்துக்குத் தேவை'இ 'பிணியும் மருந்தும்'இ 'நாற்பயன் நன்நூல்' முதலிய (மௌலானா உமர் ஹழ்ரத் அவர்களின்) நூல்களை எழுத்துருவிலாக்கினார். 
கண்டி 'கிங்ஸ்வூட்' கல்லூரி, கொழும்பு ஸாஹிரா, புத்தளம் ஸாஹிரா போன்ற பிரபல்ய பாடசாலைகளில்  ஆசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் அவ்வப்பிரதேச உலமாக்களோடும் துறைசார்தோருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். கல்வியமைச்சில் இயங்கி வந்த அரபு பாஷா விருத்திச் சங்கச் செயலாளராகவும் இருந்துவந்தார். பல நவீன பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்காக இஸ்லாமிய ஆராய்ச்சி மஜ்லிஸ் என்ற ஒன்றை நிறுவுவதில் ஈடுபட்டு அதிலே சுமார் 12 வருட காலமாக செயலாளராக இருந்து சேவையாற்றினார். 
1970 களில் ஜம்இய்யதுல் உலமா சபை பிளவுபடுத்தப்பட முயற்சிகள் நடந்த போது அதற்கெதிரான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். ஜம்இய்யாவுக்கு யாப்பொன்றை அமைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியது போலவே அவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளராகப் பணியாற்றும் காலத்தில் 2000 ஆம் ஆண்டு அதனை பாராளுமன்ற அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக ஆக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வெற்றிகண்டார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளராக 25 வருடகாலமாக சேவை புரிந்த அவர்கள் தமது காரியாலயத்தை கையிலே சுமந்து சென்று நடமாடும் சேவை புரிந்தார் என்றால் மிகையாகாது. கல்வி அமைச்சின் பல்வேறு சபைகளில் ஈடுபட்ட அவர்கள் அரபு, இஸ்லாம் பாடநூல் ஆலோசனைக் குழுவின் அங்கத்தவராக நீண்ட காலம் இருந்து வந்துள்ளார்கள். கொழும்பு, கம்பஹா, குருணாகலை மாவட்டங்களில் அரபு, இஸ்லாம் வட்டாரக் கல்வி அதிகாரியாக நீண்ட காலத்தை செலவிட்டார்கள். அவ்வாறே வக்ப் சபை உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்து வந்துள்ளார்கள். ஷரிஆ சட்டத்திற்கெதிராக சிலர் எழும்பிய போது அதனை எதிர்க் கொள்ள ளூயசநந'யா Pசழவநஉவழைn ஆழஎநஅநவெ (ஷரீஆ பாதுகாப்பு முன்னணி) என்ற ஒன்றை நிறுவி எதிர்த்து நின்றார். அவ்வாறே முஸ்லிம்களுக்கெதிராக சில தீய சக்திகள் எழுந்த போது ஏற்படுத்தப்பட்ட இத்திஹாதுல் முஸ்லிமீன் இயக்க செயலாளராகவும் செயற்பட்டார். 
இந்தியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான் முதலிய நாடுகளில் நடைப்பெற்ற மாநாடுகள் கருத்தரங்குகள் என்பனவற்றில் பங்குபற்றிய மௌலவி ரியாழ் அவர்கள் பிரபல வானொலிப் பேச்சாளராவார். அவரது கட்டுரைகள் ஏராளமுள்ளன. அவை உள் நாட்டிலும் வெளிநாட்டிளும் பிரசுரமாகின. பல்வேறு நிறுவனங்கள் பல்வகை பட்டங்கள் சூட்டி அவர்களை கௌரவித்தனர். மௌலவி ரியாழ் அவர்கள் 'மதீனாவை நோக்கி' என்ற நூலை எழுதி வெளியிட்டார்கள். ஆரம்ப காலங்களில் 'புக்கிகள் வேண்டுமா?', 'சூதாட்டமும் முஸ்லிம்களும';, 'காதியானிகளின் வழிக்கேடு', 'காதியானிகள் காபிர்களே' முதலிய நூல்களையும் வெளியிட்டார். அன்னாரது நற்காரியங்களை அங்கீகரித்தருள எல்லாம் வல்ல ரஹ்மான் நல்லுதவி செய்வானாக. 
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar