தமிழ் நாட்டில் செயற்படும் எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளரான ஒரு ரோமன் கத்தோலிக்க மதகுருவை கைது செய்வதற்கான ஆதாரங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பொலிஸாருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ரோமன் கத்தோலிக்க மதகுருவை ஒரு குற்றவாளியாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. புலனாய்வுப் பிரிவு இனங்கண்டிருக்கிறதென்றும் இவர் அமெரிக்காவில் பயங்கரவாதம் தொடர்பான செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக சுப்பிரமணிய சுவாமி மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் இந்த கத்தோலிக்க மதகுரு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் புலனாய்வாளர் ஒருவருக்கு இலஞ்சம் கொடுத்து எல்.ரி.ரி.ஈ.க்கு அவர் மூலம் உதவியைப் பெற்றுக் கொடுக்க எத்தனித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மதகுருவை கைது செய்வதற்கான பிடியாணையை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று பிறப்பித்திருப்பதனால் எப்.பி.ஐ. புலனாய்வாளர்கள் உலகெங்கிலும் தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கும் ரோமன் கத்தோலிக்க மதகுரு இந்தியாவின் என்.டி.டி.வி. மற்றும் சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலும் பங்குபற்றியிருப்பதாகவும் டொக்டர் சுப்பிரமணிய சுவாமி அறிவித்தார்.
தற்போது இவர் தமிழ்நாட்டில் தலைமறைவாகியிருப்பதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். இதையடுத்து இந்தியாவின் உள்துறை அமைச்சு இந்த எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதியை கைது செய்வதற்கு தமிழ்நாட்டின் உதவியை நாடியிருந்தார். இந்திய புலனாய்வார்கள் இந்த கத்தோலிக்க மதகுருவை கைது செய்து அமெரிக்க புலனாய்வாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.