அம்பாரை சவளக்கடை பொலிஸ் பிரிவில் பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த இளைஞனை புதன்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது அவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள 5 ஆம் கொளனி வீடொன்றிலிருந்து கடந்த 2013.12.14ஆம் திகதி 4500 ரூபா பணம், அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், வங்கி பண அட்டை என்பன களவாடப்பட்டதாக சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எஸ்.பத்திரண தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு கிட்டங்கி வீதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் மருதமுனை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரை சோiனையிட்ட வேளையில் அவரிடமிருந்து 70 ஆயிரம் ரூபா மற்றும் 85 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு மடிக்கணினிகள் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த சவளக்கடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்த 2 மடிக்கணினிகளும் கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள கத்தோலிக்க ஆலயமொன்றில் காணமல் போனதாக தெரியவந்தது. இதனையடுத்து சவளக்கடை பொலிஸார் குறித்த சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.