மேலும் மதங்களும் அரசியல் விவகாரங்களில் தலையிடக்கூடாது. அத்துடன் முரண்பாடுகளுக்கு பின்னரான நல்லிணக்க விடயங்களில் மதங்களுக்கு முக்கிய வகிபாகம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் கலந்துகொண்ட ஆய்வரங்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணியிலிருந்து ஏழு மணிவரை நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் பேராசிரியர் ரஜீவ் பார்கவா பிரான்ஸ் நாட்டின் கலாநிதி கிறிஸ்டோபி ஜெப்ரீலோட் பாகிஸ்தானின் அஸ்மா ஜஹாங்கீர் உள்ளிட்ட இலங்கையின் முக்கியஸ்தர்களும் தமது கருத்துக்களை இந்த கருத்தரங்கில் முன்வைத்தனர்.
நிகழ்வில் அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் இந்நாள் இராஜதந்திரிகள் வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் கல்வியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ராதிகா குமாரசுவாமி நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாடு ஒன்றின் மத விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடுகளும் அரசியல் தலையீடுகளும் இருக்கக்கூடாது என்றே நான் உணர்கின்றேன். மதங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் வசதிகளை செய்துகொடுப்பதாக மட்டுமே அரசாங்கத்தின் தலையிடுகள் அமையவேண்டும்.
அதற்கு மாறாக எவ்விதத்திலும் மதங்களின் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடுகள் இருக்கக்கூடாது. மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் மத நல்லிணக்க செயற்பாடுகள் சமூக கலந்துரையாடல்கள் ஆலோசனை வழங்கும் ஏற்பாடுகள் போன்றவகையான தலையீடுகளை அரசாங்கங்கள் மேற்கொள்ளலாம். அதனை தவிர்த்து எவ்வகையான தலையீடுகளையும் முன்னெடுக்கக்கூடாது.
மேலும் மத விவகாரங்களில் சட்டத்தை ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் உரிய முறையில் செயற்படவேண்டியது அவசியமாகும். அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை விவகாரங்களில் சட்ட அமுலாக்கல் உரிய முறையில் செயற்படுத்தப்படவேண்டும்.
வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அது கட்டாயம் இடம்பெறவேண்டிய விடயமாகும். மேலும் சமூக மட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கத்தின் பங்களிப்பு இருக்கவேண்டியது அவசியமாகும். அதாவது ணரு முரண்பாட்டுத் தீர்வு பொறிமுறை அவசியமாகும்.
இதேவேளை முரண்பாட்டுக்கு பின்னரான நல்லிணக்க செயற்பாடுகளில் மதங்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்றே நான் கருதுகின்றேன். நான் உலகின் பல பகுதிகளில் இருந்துள்ளேன். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான செயற்பாடுகளையும் காயங்களை ஆற்றும் முன்னெடுப்புக்களிலும் அதிகம் மத அமைப்புக்கள் ஈடுபடுவதை நான் கண்டுள்ளேன்.
குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இவ்வாறு மத அமைப்புக்கள் செயற்படுகின்றன. அவர்களை பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே முரண்பாட்டுக்கு பின்னரான நல்லிணக்க செயற்பாடுகளில் மதங்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நான் நம்புகின்றேன்.
அந்தவகையில் நல்லிணக்க செயற்பாடுகளில் சமூக முன்னெடுப்புக்களில் மதங்களில் ஈடுபடலாம். ஆனால் அரசியலில் அவர்கள் செயற்படக்கூடாது.
தற்போது தென்னிலங்கையில் முஸ்லிம் மதத்துக்கு எதிராக சில அச்சுறுத்தல்கள் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக அறிகின்றேன். இவை சட்டத்தை அமுலாக்கும் செயற்பாடுகளில் தங்கியுள்ள விடயங்களாகும். அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை விடயங்களில் நாட்டின் சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும் என்றார்.