BREAKING NEWS

கொழும்பு- பீர்ஸாஹிபு வீதியில் பாரிய புளியம் மரம் விழுந்ததால் 2 வீடுகள் முற்றாகச் சேதம் -பிரதியமைச்சர் முஸ்தபா உடனடி நிவாரணம்

( ஐ. ஏ. காதிர் கான் )


கொழும்பு-12, பீர்ஸாஹிபு வீதியில், 48 ஆம் இலக்கத் தோட்டத்தில் பாரிய புளியம் மரம் ஒன்றின் கிளைப் பகுதியொன்று அங்குள்ள வீடுகளுக்கு மேலால் முறிந்து விழுந்ததால், 2 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், 6 வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தப் பாரிய புளியம் மரத்தின் முறிந்து விழுந்த கிளைப் பகுதிகளை அகற்றும்  நடவடிக்கைகள், நேற்று வாழைத் தோட்ட பொலிஸாரின் உதவியுடன் கொழும்பு மாநகர சபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இப் பிரதேச மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் கலாநிதி நியாஸ் மௌலவி பவுண்டடேஸன் (மன்றம்) இவ்வனர்த்தம் தொடர்பாக துரிதமாக இயங்கி, இப்பிரதேச அரசியல் தலைவர்கள், பிரதி நிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு  அறிவித்தது மட்டுமல்லாமல், காயங்களுக்குள்ளானவர்களைக் காப்பாற்றி உதவியதுடன, நிகழவிருந்த பாரிய அனர்த்தத்திலிருந்தும் மக்களைக் காப்பாற்றுவதற்கான ஏற்பாடுகளையும் அவசரமாக மேற்கொண்டது.
இதேவேளை, இவ்வனர்த்த நிகழ்வைக் கேள்விப்பட்ட ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளரும் , முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபாவும் உடனடியாக அவ்விடத்துக்கு சமூகமளித்து, நிலைமைகளை நேரில் கண்டறிந்ததுடன், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கி வைக்கமாறும் பிரதியமைச்சர் அமைச்சு அதிகாரிகளைப் பணித்தார்.
இவ்வனர்த்தத்தினால் 13 குடுமபங்கள் தமது இல்லங்களையும், உடைமைகளையும் இழந்து நிர்க்தியாகியுள்ளதுடன், பிரதியமைச்சரின் பிரத்தியேக நிதியொதுக்கீட்டில்  இவர்களின் சேதமடைந்த வீடுகளைத் திருத்தியமைப்பதற்காக ஒரு தொகை நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தப் பாரிய புளியம் மரத்தின் ஏனைய கிளைப் பாகத்தினாலும் இங்குள்ள ஏனைய வீடுகளுக்கு எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள்  நிகழக்கூடும் என்பதனால், இன்னும் சில தினங்களுக்குள் இப்பிரதேச மக்களின் வேண்டுகோளின் பிரகாரம் இம் மரப்பகுதியையும் முழுமையாகப் பிடுங்கி நீக்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பிரதியமைச்சருடன் கொழும்பு மா நகரசபை உறுப்பினர் எம். எச். மன்ஸில், பிரதியமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி றியாஸ்தீன் சில்மி, அரசியல் விவகார இணைப்புச் செயலாளர் எம்.எம்.எம். மத்லூப் மற்றும் கொழும்பு பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகரசபை, கொழும்பு வடக்கு இலங்கை மின்சார சபை;, ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள், வாழைத்தோட்டப் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சென்று பார்வையிட்டனர்;.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar