பிரித்தானியாவில் ஒவ்வொரு வருடமும் 72ஆயிரம் ஆண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையொன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுபவர்கள் சுமார் 10 இல் ஒருவராக 12 சதவீதமான ஆண்கள் உள்ளனர்.
2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவுற்ற ஒரு வருட காலப்பகுதியில் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 2164 ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ அல்லது துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டோ உள்ளதாக பிந்திய தரவுகள் கூறுகின்றது.
இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உதவுவதற்கான ஆலோசனை சேவையை வழங்குவதற்காக முதல் தடைவையாக எதிர்வரும் நிதி ஆண்டிற்கு 500,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை முதலீடு செய்வதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு அமைச்சர் டமியன் கிறீன் விபரிக்கையில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உதவ வேண்டியுள்ளது. பாலியல் வல்லுறவு என்பவற்றின் விளைவுகள் மோசமானவையாகும். ஆண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அவர்களில் பலர் அது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முன்வருவதில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் நிலவும் மௌனத்தை கலைக்க விரும்புகின்றோம் என்று கூறினார்.
ஆண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது தொடர்பான சராசரி தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பில் மேலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.