( ஐ. ஏ. காதிர் கான் )
சென்னை - இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், ஆறாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, இம்முறை தமிழ் நாடு, தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணத்தில், எதிர்வரும் 14ஆம்,15ஆம்,16ஆம், திகதிகளில் நடைபெறவுள்ளன.
இம் மூன்று நாள் மாநாட்டில் ஆய்வரங்கு, கருத்தரங்கு,மாபெரும் இஸ்லாமிய இசைப்பாடல் அரங்கு, சொற்சுவை மன்றம், உமறுப்புலவர் விருது- இலக்கியச் சுடர், சமுதாயச் சுடர் விருதுகள் வழங்கல், சிறப்புரைகள், தொடக்க விழா- நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சிகள் எனப் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மாநாட்டில் மாநாடு; சிறப்பு மலர், ஆய்வரங்கக் கோவை, ஆலிப்புலவரின் மிஃறாசு மாலை, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் இலட்சியக் காவியமான ‘பாலை நிலா’ வின் முன்னோட்டப் பிரதி, மூன்றாவது மாநில மாநாட்டில் நடைபெற்ற படைப்பிலக்கியப் பயிலரங்கு கருத்துரைத் தொகுப்பு நூல் மற்றும் பல்துறை சார்ந்த நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
மாநாட்டில் “தமிழக முஸ்லிம்களின் இசைப் பாடல் மரபுகள்”; என்ற பொதுப் பொருளில் ஆய்வரங்கு நடைபெறும். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் “எழுதுகோல்”; காலாண்டிதழின் முதற் பிரதி மாநாட்டில் வெளியிடப்படும். இவ்விதழ் இஸ்லாமிய சமய, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள். நவீன படைப்பிலக்கியங்களின் செழுமையான பதிவுக் களஞ்சியமாக அமையவுள்ளது.
இலங்கையிலிருந்து கலந்துகொள்ளும் குழுவில், “மூத்த கல்விமான்” எஸ்.எச். எம். ஜெமீல், பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ், கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ், டாக்டர் தாஸிம் அஹமட், மூத்த பத்திரிகையாளர் எம்.ஏ.எம். நிலாம், “மணிப்புலவர்” மருதூர் ஏ.மஜீத் ஆகியோர் உட்பட 12 பேர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இலங்கையிலிருந்து புரவலர்கள் அல்ஹாஜ் பாயிக் மக்கீன், கலாநிதி ஏ.பி. அப்துல் கையூம் ஆகியோர் மாநாட்டு நூல் வெளியீட்டு வைபவத்தில், முதற் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இம் மாநாட்டுக் கவியரங்கில், “தமிழ்த் தென்றல்” அலி அக்பர், கவிதை படிக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ளர்.
இம்மாநாட்டில், இலங்கைப் பாடகர் “கலைக்கமல்” கௌரவமளித்து பாராட்டப்படவிருக்கிறார்.
அத்துடன,; இந்த மாநாட்டில் இம்முறை முது பெரும் இஸ்லாமியப் பாடகர் “இசை முரசு” நாகூர் ஈ.எம்.ஹனீபா “உமறுப் புலவர் விருது” வழங்கி பெரும் கௌரவமளிக்கப்படவுள்ளார்.
மாநாட்டு மலருக்காக - இஸ்லாமிய இலக்கியம், சமயம், வரலாறு, பண்பாடு, சமகால எதிர்கொள்ளல்கள் குறித்த கட்டுரை, கவிதை முதலான படைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.