மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில், கடந்த 15 வருடங்களாக பாதுகாத்துவந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம், இம்முறை கிடைக்காமல் போனமைக்கு அரசாங்கத்துக்குள் இருந்த முஸ்லிம் கட்சிகள் பிரிந்து நின்று செயற்பட்டமையே காரணம் என
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் எமது டெய்லி ஸிலோனுக்குத் தெரிவித்தார்.
கொழும்பில் ஸ்ரீ.ல.சு.கட்சியில் போட்டியிட்ட நவ்பர் பௌஸி, மன்ஸில் ஆகியோர் இம்முறை போதியளவு விருப்பு வாக்குகளைப் பெறவில்லை. நவ்பர் பௌஸி வெற்றி பெற்றால் ஒரு அமைச்சுப் பதவி தருவதாக ஜனாதிபதி ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்திருந்தார். இவ்வாறு இருந்தும் முஸ்லிம் சமூகம் ஆளும் அரசாங்கத்தில் ஒரு உறுப்பினரை இழந்தது பெரும் கவலைக்குரியது.
இதேபோன்று, கம்பஹா மாவட்டத்திலும் ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட சகாவுள்ளா தெரிவாகவில்லை. இவ்வாறு இரு மாகாணங்களிலும் ஆளும் அரசாங்கத்தின் கட்சியில், ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கூட பெற்றுக்கொள்ள தவறிவிட்டோம். முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையே இந்த நிலைக்குப் பிரதான காரணமாகும். இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் இதனை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் எனவும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் எமது இணையத்திடம் மேலும் தெரிவித்தார்.
-Daily ceylon