BREAKING NEWS

முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் முஸ்லிம் காங்கிரஸில் ஏன் இணைந்தார்?


--------------------------------------------------------------------
முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட விடயத்தில் நான் உடன்பாடில்லை. அதாவது அவரை இணைத்துக் கொண்ட விடயத்தில் நான் உடன்படவில்லை என்பதே உண்மை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இக்கட்டான நிலைமையில் இருந்த போது அந்தக் கட்சியை அம்மோவென விட்டு விட்டுச் சென்ற கூட்டத்தினரில் இவரும் ஒருவர் என்பதே எனது கருத்து. கட்சியின் கட்டுப்பாடுகள் மற்றும் தலைமைவத்துவ கௌரவம் ஆகியனவற்றுக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் இவ்வாறானவர்கள் நடந்து கொண்டமை அந்தக் கட்சியின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு கரும் புள்ளி.

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட நிஜாமுதீன், அதில் தோல்வியுற்ற போதிலும் சாய்ந்தமருது மக்களின் வேண்டுகோளின் பேரில் அவர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2007 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தில் இணைந்த போது மக்கள் தோட்ட பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் 2009ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய போதிலும் இவர் கட்சியுடன் உடன்படாமல் 2010 இல் பாராளுமன்றம் கலையும் வரை தொடர்ந்தும் பிரதி அமைச்சராக பதவி வகித்தார்.

சாய்ந்தமருது மக்களின் விருப்பத்துக்காக தேசியப் பட்டியல் எம். பி பதவி வழங்கப்பட்ட நிலையில் அந்த மக்களுக்குத் துரோகம் செய்யும் வகையிலும் தேசியப் பட்டியல் எம். பி பதவி வழங்கிய கட்சிக்கு விசுவாமற்ற நிலையிலும் அவர் நடந்து கொண்டார். பிரதியமைச்சர் பதவியில் தான் நிலைக்க வேண்டுமேன்பதற்காகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதனை நான் அன்றே உணர்ந்திருந்தேன். அவர் அப்படிப்பட்டவர் அல்லர் என்றால் அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறிய போது அவரும் வெளியேறியிருக்க வேண்டும். அதுதான் கௌரவமான அரசியல். மக்கள் அரசியல்.

எஸ்.நிஜாமுதீனை முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் சேர்த்துக் கொண்டமை தொடர்பான செய்தி வெளிவந்த அந்த நிமிடம் முதல் நான் மிகவும் வேதனைப்பட்டவனாகவும் அமைச்சர் ஹக்கீமை நொந்து கொண்டவனாகவுமே இருந்தேன்.

முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் நான் பல விடயங்களில் முரண்பட்டுள்ள நிலையில் இதுவும் ஒரு பாரமாக எனக்கு இருந்து வந்தது. ஆனால் முரண்பாட்டுக்குள் உடன்பாடு என்ற வகையில் நான் இன்றும் அந்தக் கட்சியை நேசித்து வருகிறேன். மாமனிதர் அஷ்ரஃப் அவர்கள் உருவாக்கிய கட்சி என்பதால் நன்றி மறவாத ஒரு நாயாக நான் உள்ளேன்.

ஆனால் துரோகிகளும் துஷ்டர்களும் சுயநலக் கிருமிகளும் அந்தக் கட்சிக்குள் நுழைந்து இன்னும் கட்சியை நாற வைத்து விடுவார்களோ என்ற சந்தேகம் எனது மனதில் ஒரு கனதியான பாரமாகவே தொடர்ந்தும் உள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீனை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொண்ட விடயம் தொடர்பில் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸனலி அவர்களுடன் நான் ஆத்திரத்துடன் விவாதித்தேன். நான் இந்தக் கட்சியின் தொண்டன் என்ற அடிப்படையில் அவரிடம் இந்த விடயம் தொடர்பில் வினவினேன்.

அதற்கு அவர் இவ்வாறு பதில் தந்தார்.

”முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் எம்முடன் இணைந்தார் என்பதற்காக அம்பாறை மாவட்டத்திலோ அல்லது கல்முனை தொகுதியிலோ எதிர்காலத்தில் நடைபெறக் கூடிய பாராளுமன்றத் தேர்தல் முதல் உள்ளுராட்சி தேர்தல்கள் வரையான எந்தத் தேர்தலிலும் நாம் அவரை நிறுத்தப் போவதில்லை. அத்துடன் கட்சியின் எந்த உயர்மட்ட பதவிகளையும் நாம் அவருக்கு வழங்கவும் மாட்டோம். முஸ்லிம் காங்கிரஸின் சாதாரண உறுப்பினராகவே அவர் செயற்பட்டு கட்சிக்குச் சேவை செய்வார். அவ்வளவுதான் அவருக்குரிய பொறுப்பு”

இவ்வாறு ஹஸனலி என்னிடம் தெரிவித்தார். இது எனக்கு சிறிய ஆறுதலைத் தந்துள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar