இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இம்முறை நிறைவேறுவது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.
இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தற்போது ஜெனீவாவில் தங்கியிருந்து விடயங்களைக் கையாண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகள் முன்வைத்த பிரேரணை தற்போது திருத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை தொடர்பாக நாம் முன்வைத்த அனேகமான யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருத்தமாக பிரேரணையில் உட்செலுத்தப்பட்டுள்ளன.
அதனை நாம் வரவேற்கின்றோம். இந்தப் பிரேரணையின் திருத்தப்பட்ட வடிவம் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை பகிரங்கக் கலந்தாய்வு இடம்பெற்றது.
நானும் இலங்கையில் இருந்து வந்திருந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோவும் அங்கு உரையாற்றி கருத்து வெளியிட்டோம்.
இந்தக் கலந்தாய்வு எமக்கு மிகுந்த திருப்தியளிக்கின்றது. இலங்கைக்காக ஒரு சில நாடுகள் திரும்பத் திரும்ப குரல் எழுப்பிய போதிலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் பெரும்பாலான நாடுகள் இந்த திருத்த வடிவம் குறித்து முழு அளவில் திருப்தியடைந்திருக்கின்றன என்பது உறுதியாகிவிட்டது.
இனிமேலும் இந்தத் திருத்தம் பலம் பெறுமா, முன்னேற்றம் இருக்குமா என்பதுதான் இனியுள்ள விடயம். அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
எனினும் தற்போதைய நிலையில் பிரேரணை வாக்கெடுப்புக்குச் சென்றாலும் கூட எதிர்பார்த்த பெரும்பான்மையோடு அது நிறைவேறும் என்று முழுமையாக நம்புகிறோம்.
அனேகமான நாடுகள் பிரேரணையை ஆதரிக்கத் தீர்மானித்துவிட்டன. எனவே, இலங்கைக்கு எதிராக ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும்.
அதற்கான தீர்மானம் உரிய பெரும்பான்மையோடு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேறும். -இப்படி உறுதியாக தகவல் தெரிவித்தார். சுமந்திரன் எம்.பி