BREAKING NEWS

பட்டிப்பளை பிரதேச செயலருக்கு எதிராக பிரதேச சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த புலுகுணாவ கெவிலியாமடு பிரதேச சிங்கள  மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் பட்டிப்பளை பிரதேச செயலரால் மறுக்கப்படுகின்றதெனக் கோரி மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகரையில் இருந்து மாவட்ட செயலகம் வரை எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.
 
இப் பேரணி மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதி அம்பேபிட்டிய சுமணரத்தின தேரர் தலைமையில்இடம்பெற்றது.
 
இப்பேரணியில் சிங்களராவய தேசிய சங்கத்தின் உபதலைவர் ராஜகீய பண்டித பூலத்தே சுதம்ம தேரர், பொதுச் செயலாளர் ராஜகீய பண்டித ஹெல்லே பஞ்சாலோக தேரர் ஆகியோருடன் சிங்களராவய தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் கெவிலியாமடு புலுகுணாவ பிரதேச சிங்கள மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் யுத்தத்திற்கு முன்னர் இப்பிரதேசங்களில் வசித்ததாகவும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து யுத்தம் முடிவுற்றதும் 6 வருட காலமாக பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் வசிப்பதாகவும் இதுவரையில் தங்களுக்கு கிராம சேவகர் சான்றிதழ், வதிவிடச் சான்றிதழ் போன்றன வழங்கப்படாமல் இருப்பதாகவும் இதற்கு பிரதேச செயலாளர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டப் பேரணி இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.
 
ஆர்ப்பாட்டப் பேரணியானது மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் ஆரம்பித்து மாவட்டச்செயலகம் வரை சென்றது பின்னர் அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம் சாள்ஸ{ பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பின்னர் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி வில்வரெட்ணத்துடனும் பேச்சுக்கள் இடம்பெற்றன. இறுதியில் தேரர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்க அதிபர் கவனம் செலுத்துவதாகவும் கிராம சேவகர் சான்று தேவைப்படுவோருக்கு தாம் அதனை வழங்குவதாகவும் உறுதியளித்தார். இதன்பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்ட மகஜரில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் பெரும்பான்மையின மக்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்த வேண்டும். இம்மக்களுக்கான வதிவிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும், கிராம அலுவலகரின் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் மகஜரில் முன்வைத்தனர்.
 
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 106 பெரும்பான்மையினக் குடும்பங்கள் வசிப்பதாக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar