BREAKING NEWS

ஜெனீவா பிரேரணையை தோற்கடிப்பதற்காக முஸ்லிம்கள் ‘துஆ’


முஸ்லிம்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள். சதிகாரக் கும்பல்களின் முயற்சியான ஜெனீவா பிரேரணை தோற்கடிக்கப்படுவதற்காக முஸ்லிம்கள் ‘துஆ’ இறைஞ்ச வேண்டும். தகவல், ஊடக அமைச்சின் மேற்பார்வை உறுப்பினரும், அரசியல் சாசனப் பேரவை
உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் இவ்வாறு தெரிவித்தார்.
மாத்தறை கட வீதியவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் மாத்தறையைச் சேர்ந்தவர்.
பெளத்த மக்களின் அன்பை அவர் அதிகம் பெற்றார். அவரின் சேவைகள் சகலருக்கும் பரவலாகக் கிடைத்தன.அவரின் அரசியல் சாணக்கியங்களை இன்றைய முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும். ஹம்பாந்தோட்டையில் யோலன மலே கொலனியை நீதியரசர் எம். ரீ. அக்பர் உருவாக்கினார்.
பேராதனை பல்கலைக்கழக உருவாக்கத்திலும் அவர் பங்கெடுத்தார். முஸ்லிம் தலைவர்கள் அன்று செய்த சேவைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கிழக்கில் கேட் முதலியார் எம். எஸ். காரியப்பர், முதலியார் பொத்துவில் இபுராஹீம், மட்டக்களப்பு ஏ. சின்னலெவ்வே, மூதூர் ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர் போன்ற அரசியல் தலைவர்கள் கொழும்புத் தலைமைத்துவத்துடன் இணைந்து அவர்களின் ஆதரவுடன் அரசியலை சிறப்புற நடத்தினர்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் தலைமைத்துவம் சகலராலும் எற்கப்பட்டதாகும். அவரின் தலைமைத்துவத்தில் நம்பிக்கையைப் பலப்படுத்தி அவரின் கரங்களைத் தொடர்ந்தும் சக்திமிக்கதாக்க தேசாபிமானிகள் என்ற வகையில் முஸ்லிம்கள் பணியாற்ற வேண்டும்.
அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களை நம்பாமல் ஆட்சியில் நம்பிக்கை வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் மாகாண சபைத் தேர்தல்களில் அமோக வெற்றி பெறச் செய்வோம் என்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar