முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
எதிர்வரும் மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட சோபித தேரர் தயார் என குறிப்பிட்டிருந்தமை தொடர்பாகவும், இங்கு கலந்துகொண்ட சந்திரிகா கலந்துரையாடியுள்ளார். எனினும் எவ்வித முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பொது வேட்பாளர் ஒருவரை முன்னிருத்த வேண்டியதன் அவசியத்தையும் அதற்காக அரச தரப்பின் அமைச்சர்,சிரேஷ்ட அமைச்சர்கள், மற்றும் சில அரசியல் புத்திஜீவிகளையும் இணைத்து ஒரு குழுவாக செயற்படலாம் என்ற ஆலோசனையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இக்குழுவில் சிரேஷ்ட அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, வாசு தேவ நாணாயகார, டி.யூ. குணசேகர மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தனவையும் மைத்திரிபால சிறிசேனாவையும் இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த இருவருக்கிடையிலான சந்திப்பு கோட்டை நாக விகாரையில் இடம்பெற்றதாகவும் தொடர் சந்திப்புக்கள் நடைபெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.